நம்மைச் சுற்றி...
மரக்கறி உணவு


ரஷ்யா, ஜெர்மனி, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, இஸ்ரேல், மெக்ஸிகோ, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும்பாலான மக்கள் அசைவ உணவிலிருந்து சைவத்துக்கு மாறி விட்டார்கள். அமெரிக்காவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மரக்கறி உணவுக்காரர்களுக்கு என தனிச்சங்கங்கள் உள்ளன. தற்போது சைவ உணவுப் பிரியர்களின் எண்ணிக்கை கோடியைத் தாண்டிவிட்டது என்கிறார்கள் அந்த சங்கத்தினர்.

பெரிய ரயில்வே விடுதி

உலகிலேயே மிகப் பெரிய ரயில்வே பயணிகள் விடுதி சீனாவின் தலைநகரான பெய்ஜிங் ஸ்டேஷனில் உள்ளது. இது 1959ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இதில் 11 ஆயிரம் பயணிகள் தங்கி ஓய்வெடுக்கலாம்.

மாத்ரி மந்திர்

புதுச்சேரியை அடுத்த ஆரோவில் என்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ள ‘மாத்ரி மந்திர்’ என்னும் தியான மண்டபம், மாபெரும் சிந்தனை மையத்தின் மாதிரி வடிவம். இந்திய மெய்ஞானியும் தத்துவஞானியுமான அரவிந்தரின் கொள்கைகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டது இது. 1968ல் நிறுவப்பட்டது.

கன்வேயர் பெல்ட்

ஆட்களைச் சுமந்து செல்கிற கன்வேயர் பெல்ட் அமைப்பதில் கேபிள் பெல்ட் லிமிடெட் என்கிற கம்பெனி நல்ல பெயர் வாங்கி உள்ளது. ஆஸ்திரேலியாவில் இது அமைத்திருக்கிற ஒரு கன்வேயர் பெல்ட்டின் நீளம் 29 கி.மீ.

தியானத் தீ

இயற்கைக்குச் சவால் விடும் விதத்தில் திபெத்தில் சில புத்த பிட்சுகள் தங்களது தியானத்தின் வலிமை மூலமாக உடலின் வெப்ப நிலையை உயர்த்திக் காட்டி இருக்கிறார்கள். கடும் பனி பெய்து கொண்டிருக்கும் மலைச் சாரலில் கூடாரமடித்து, பனியில் நனைந்த கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டு, தங்கள் உடல் வெப்பத்தின் மூலமாக அதை வெயிலில் காய்ந்தது போல உலர்த்திக் காண்பித்திருக்கிறார்கள்.

‘‘இது மனித சக்தியால் முடியாத செயல்’’ எனச் சவால் விட்ட ‘நேச்சர்’ என்னும் மேலை நாட்டு விஞ்ஞானப் பத்திரிகை, இதனை ஆய்வு செய்ய ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் சிலரை திபெத்திற்கு அனுப்பி வைத்தது. ‘‘நாங்கள் இச்சோதனைக்கென்று மூன்று புத்த பிட்சுகளிடம் அனுமதி வாங்கி, அவர்கள் தியான நிலையில் இருக்கும்போது அவர்களின் உடலில் பல இடங்களில் வெப்பமானியை வைத்தோம்.

சற்று நேரத்தில் வெப்பம் அதிகரித்தது கண்டு வியப்புற்றோம். குறிப்பாக கால் மற்றும் கைகளின் விரல்கள் அதிகமாகச் சூடாகி இருந்தன. தொட்டால் நெருப்பைப் போல் சுட்டன’’ என்கிறார் இக்குழுவின் தலைவர்.

பெண்கள் அதிகம்


ஆண்களை விடப் பெண்கள் தாம் இதய நோய் தாக்குதலால் அதிகம் இறக்கிறார்கள் என்று அமெரிக்க இதய நோய் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதயநோய் பாதிப்புக்கு உள்ளாகி ஆண்களே அதிகம் பேர் இறந்தனர். இப்போது தாக்குதல் இடம் மாறியுள்ளது! 

ஆர்.ஆர்.பூபதி, கன்னிவாடி.