தேடு பொறி முதன்முதலாக...



இப்போதெல்லாம் பாட்டி வடை சுட்ட கதையிலிருந்து, லேட்டஸ்ட் மொபைல் போன் வரவு என்ன என்பது வரை அனைத்தையும் கூகுளில் பார்த்துவிடுகிறோம். கூகுள் இல்லாத காலத்தில் மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை ஏழாவது அறிவைக் கொண்டுதான் வருங்காலம் யூகிக்கும். முதன்முதலில் இணையத்தில் பயன்படுத்தப்பட்ட தேடுபொறி  (search engine) எது தெரியுமா?

www.webcrawler.com  என்பதுதான் இணையத்தின் முதல் தேடுபொறி. 1994ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி தொடங்கப் பட்டது. யாகுவும் கூகுளும் அதன் பேரன்கள். ஜஸ்டின் ஹால் (Justin Hall) என்பவர்தான் இணையத்தின் முதல் வலைப்பதிவாளராக அறியப்படுகிறார். ஜனவரி 1994ல் தொடங்கப்பட்ட இவரின் http://www.links.net என்ற பக்கத்தில் தான் இணையத்தின் முதல் வலைப்பதிவு எழுதப்பட்டது.

ஹாமுராபி சட்டம்


உலகிற்கு முதன்முதலாக தண்டனைச் சட்டங்களை அறிமுகப்படுத்தியது மெசப டோமிய மன்னர் ஹாமுராபி என்பவர்தான். கி.மு.1764ல் அரியணையில் அமர்ந்தபோது இவர் கொண்டு வந்த சட்டங்கள் இன்றைக்கும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. இவரது சட்டப்படி ஒருவரை யாராவது அடித்தால் அடித்தவருக்கு அபராதம் உண்டு.

அதுவே வி.ஐ.பி என்றால் அபராதம் அதிகம். கடத்தல், திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்முறை, போர்க் களத்தைக் கண்டாலே பயந்து ஓடுபவர்கள், லஞ்சம் போன்ற குற்றங்களுக்கெல்லாம் மரண தண்டனை விதிக்கப்பட்டது. உலக நாடுகள் அதிகம் பயன் படுத்தும் ‘கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்’ என்ற சித்தாந்தம் இந்தப் புண்ணியவானால்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

பெற்றோரை கை நீட்டி மகன் அடித்தால், அடித்த இடத்திலேயே திருப்பி அடிப்பதுதான் அவனுக்கான தண்டனை. ஒருவரை ஓங்கிக் குத்தி அவர் பல் உடைந்தால், பதிலுக்கு குத்திய நபரின் பல் உடைக்கப்படும். அலட்சியமாக ஆபரேஷன் செய்து நோயாளி இறந்தால், டாக்டரின் விரல்கள் வெட்டப்படும். வீடு கொள்ளை யடிக்கப்பட்டு குறித்த காலம் கடந்த பின்பும் காவலர்கள் திருடர்களைப் பிடிக்காமல் மெத்தனம் காட்டி வந்தால், காவலர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்கள்.

திருடப்பட்ட தொகையை அரசாங்கமே அளிக்கும்.மனித இனம் தோன்றி வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த சட்டங்கள் அனைத்தும் 1900ல் அகழ் வாராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தக் கல்வெட்டு தற்போது பிரான்சின் உலகப்புகழ் பெற்ற லூவர் மியூசியத்தில் உள்ளது.

ஜீன்ஸ்


கடினமாக உழைப்பவர்கள் முதல், அலுவலகத்தில் ஒயிட் காலர் ஜாப் பார்ப்பவர்கள் வரை அதிகம் விரும்புவது ஜீன்ஸ்தான். தற்போது அதிகம் புழக்கத்தில் உள்ள உடையான ஜீன்ஸின் கதை தெரியுமா உங்களுக்கு?

1873ம் ஆண்டு ஜீன்ஸ் தைக்கப் பயன்படுத்தும் துணி கண்டு பிடிக்கப்பட்டது. அதனை லெவிஸ்டிராஸ் என்கின்ற ஜெர்மானியர் கண்டு பிடித்தார். கண்டுபிடித்த இடம், அமெரிக்கா. பிரான்ஸ் நாட்டிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பருத்தியைக் கொண்டு ‘செர்க் டெனிம்’ என்கின்ற முரட்டுத் துணி தயாரிக்கப்பட்டது. அதுவே ஜீன்ஸ் உடை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது. இன்று யாரைக் கேட்டாலும் ஜீன்ஸ் உடை டெனிம் என்கின்ற முரட்டுத் துணியைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்று சொல்வார்கள்.

இந்த டெனிம் என்கின்ற பெயர் செர்க் டெனிம் என்கின்ற பெயரின் பின் பகுதியிலிருந்து வந்ததுதான். ஆரம்பத்தில் அமெரிக்காவில் டெனிம் துணியில் தைக்கப்பட்ட உடையை காவலர்கள் மட்டுமே அணிந்து வந்தனர். 1940ல்தான் உலகம் முழுதும் இந்த உடையை கவனிக்க ஆரம்பித்தது. 1980களில் ஜீன்ஸ் சர்வதேசப் புகழ்பெற்று, இன்று உலக ஆடையாகிவிட்டது.

பூமி உருண்டையை பார்த்தவர்


பூமி உருண்டை என்பது சரியா? ‘‘என்ன இது... பூமி உருண்டைன்னு எட்டாவது  பாடப் புத்தகத்துலகூட இருக்கே’’ என்று சொல்லலாம். ஆனால் அந்த உருண்டை பூமியை முதன்முதலாக யார் பார்த்தது என்பது தெரியுமா?  ரஷ்யாவைச் சேர்ந்த யூரி காகரின் என்ற விண்வெளி வீரருக்குத்தான் அந்தப் பெருமை கிடைத்தது. விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரும் அவர்தான். விண்வெளியில் இருந்து பூமியையும் அதன் உருண்டை வடிவத்தையும் முதலில் பார்த்து ரசித்தவர் இவரே!

-சூர்யா சரவணன்