தூவானம்



இந்தியப் பெண்கள் திருமதி ஹெலனுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள். யார் இந்த ஹெலன்? இந்திய     அரசராக விளங்கிய சந்திரகுப்த மௌரியரின் கிரேக்க நாட்டு மனைவி! இவர்தான் புடவையை அறிமுகம் செய்தார். இவருக்கு நன்றி சொல்லலாமா என்று இந்தியக் கணவர்களைக் கேட்டால், அவர்கள் ‘‘சாரி’’ என்று சொல்லிவிடுவார்கள்.

வழவழா சவால்

தண்ணீரையும் எண்ணெயையும் கலக்க முடியாது என்பார்கள். ஏனென்றால் இரண்டின் அடர்த்தியும் வெவ்வேறானவை. ஆனால் சிறிதளவு சோப்பு போதும்... பகைவர்களாக இருக்கும் தண்ணீரையும் எண்ணெயையும் ஒன்று சேர்த்துவிடலாம்.

பல் மருத்துவர் தந்த சின்னம்

உலகப் புகழ் பெற்ற சர்வாதிகாரி ஹிட்லர். யூதர்களுக்கு எதிரான இவரது கொடுங்கோன்மைக்கு அந்த வகையில் மதிப்பீடே கிடையாது. இவரது நாஜி கட்சி யின் ஸ்வஸ்திக் சின்னம் உலகையே நடுநடுங்க வைத்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த சின்னத்தை இவருக்கு வரைந்து கொடுத்தவர் இவருடைய பல் மருத்துவர், ஃப்ரெடரிக் ரோன்.

ஏன் வெள்ளை ஆயிற்று?


அமெரிக்கக் குடியரசுத் தலைவர் குடியிருப்பு ‘வெள்ளை மாளிகை’ என்று வழங்கப்படுகிறது. ஏன் ‘வெள்ளை’ மாளிகை? போர்ச் சேதங்கள் நிறைந்திருந்தன இந்த மாளிகையில். அவற்றை மறைப்பதற்காக முற்றிலும் வெண்மை நிற பெயின்ட் அடித்தார்கள். அதி லிருந்துதான் இந்த மாளிகை வெள்ளை மாளிகை என்றாயிற்று.

எப்போதைய யோசனை?

தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக் கழகம் 1981ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் தமிழ் மற்றும் பிற மொழிகளை ஆராய்ந்த ஆய்வுக் குழு, இப்படி ஒரு பல்கலைக்கழகம் தேவை என்று தீர்மானித்தது எப்போது தெரியுமா? 1925ம் ஆண்டு! ஆமாம், 56 வருடங்களுக்குப் பிறகுதான் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

பத்திரிகை ஆசிரியரும் கூட

கார்ல் மார்க்ஸின் பொருளாதாரக் கருத்துகள் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியவை. மிகச் சிறந்த பொருளாதார வல்லுநரான அவர் ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். அப்படி அவர் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டது அவரது 24வது வயதில்!

படிக்காத பறவையியலாளர்!

சலீம் அலி என்பவர் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்த நிபுணர். ஆனால் அடிப்படைப் பள்ளிப் படிப்பு இல்லாதவர். இந்தத் தகுதியின்மை காரணமாகவே அவர் முயற்சித்த மத்திய அரசுப் பணி அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அவரது ஆராய்ச்சித் தகவல்களை ஆதாரமாக வைத்து பலர் மேலும் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றுவிட்டார்கள்!

முதல் பதிவு


மோட்டார் வாகனங்களுக்கு குறியீட்டு எண் கொடுப்பது தெரியும். புதிதாக வாகனம் வாங்குபவர் போக்குவரத்துத் துறையிடம் அதனைப் பதிவு செய்து ஒரு எண் பெற்றுக்கொண்டு அதை வாகனத்தின் முன், பின் என இரு பக்கங்களிலும் எழுதி வைத்துக் கொள்வது வழக்கம். இப்படி பதிவு செய்வதும், எண் பெறுவதுமான வழக்கம் முதலில் ஆரம்பித்தது பிரான்ஸ் நாட்டில்தான்.

-வித்யுத்