தாவரக் காதலன்



தாவர வகைகள் குறித்து பல ஆய்வுகள் செய்து அரிய உண்மைகளை உலகிற்கு எடுத்துச் சொன்னவர் ரிச்சர்ட் இவான்ஸ் ஷெல்டீஸ். இவரை ‘நவீன தாவரத் தொடர்பியலின் தந்தை’ என்கிறார்கள்.

இவர் 1915ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி அமெரிக்காவின் மாசாசூஸெட்ஸ் மாநிலத்தில் உள்ள பாஸ்டனில் பிறந்தார். பள்ளிக் காலத்திலேயே தாவரங்கள் மீது அதிக நாட்டம் கொண்டிருந்தார். பிறகு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு இவரது பேராசிரியர்களில் ஒருவரான டாக்டர் ஓகஸ் அமெஸ் ‘பயன் தரும் தாவரங்கள், தீமை விளைவிக்கும் தாவரங்கள்’ பற்றி வகுப்பெடுத்தார். இது ஷெல்டீஸின் தாவர ஆர்வத்தை தீவிரப்படுத்தியது.

அதன்பின் அமேசான் மழைக் காடுகளில் பதினேழு ஆண்டுகள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்த ரிச்சர்ட் ப்ரூஸ் என்ற தாவரவியல் ஆய்வாளரிடம் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1941ம் ஆண்டு தாவரவியலில் டாக்டர் பட்டம் பெற்றார் ஷெல்டீஸ். தாவரங்களின் மருத்துவப் பயன்பாட்டைக் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ள நேஷனல் ரிசர்ச் கவுன்சில் இவருக்கு உதவியது. முதலில் ரப்பர் மற்றும் மருத்துவ குணங்கள் கொண்ட தாவரங்களைப் பற்றி ஆராய்ந்தார். பிறகு உளவியல் தொடர்பான மருந்துகள், மனமயக்கம் தரும் தாவரங்கள் உள்ளிட்ட பலவற்றைப் பற்றி ஆராய்ந்தார். அமேசான் காடுகளில் சுமார் 80 ஆயிரம் வகை பயனுள்ள தாவரங்கள் இருப்பதாகக் கண்டுபிடித்துச் சொன்னார்.

மெக்ஸிகோ, அமேசான் காடுகளில் தனது ஐம்பது ஆண்டு கால ஆராய்ச்சிகளில் அதுவரை கண்டறியப்படாத 300 புதிய மூலிகைத் தாவரங்கள் உட்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ குணங்கள் கொண்ட தாவர வகைகளைச் சேகரித்து குறிப்பெடுத்தார். ஆரோ பாய்சன் உட்பட ஏராளமான தாவரத் தொடர்பியல் கண்டுபிடிப்புகள் குறித்த கட்டுரைகளை வெளியிட்டார். 1957ல் ‘சீக்கிங் தி மேஜிக் மஷ்ரூம்ஸ்’ என்ற புகழ்பெற்ற கட்டுரையை வெளியிட்டார். ஆல்பர்ட் ஹாஃப்மெனுடன் சேர்ந்து இவர் எழுதிய பல புத்தகங்கள் உலகம் முழுவதும் பிரபலமடைந்து விற்பனையில் சாதனை படைத்தன.

ஷெல்டீஸ் 1958ம் ஆண்டில் ஹார்வர்டின் ஆமெஸ் அர்சிட் ஹெர்பேரியத்தின் பொருளாதாரத் தாவரவியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இவரை 1970ம் ஆண்டு உயிரியல் பேராசிரியராகவும் நியமித்து கௌரவித்தார்கள். தனது மாணவர்களுக்கு நடைமுறை சார்ந்த தனது அரிய அனுபவங்களை எடுத்துக் கூறி, அவர்களுக்கு தாவரங்கள் மீது ஆர்வம் ஏற்படுத்தினார். இவரது மூலிகைத் தாவர ஆராய்ச்சிகள் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் இன்றளவும் பெரிதும் பயன்பட்டு வருகின்றன.  

கடைசி காலம் வரை தாவரங்களின் மீது தனிப் பற்று கொண்டிருந்த இவர், பாஸ்டன் நகரில் 2001ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி தனது 86வது வயதில் மறைந்தார். தாவரங்கள் இருக்கும் வரை இவரது பெயர் நிலைத்து நிற்கும்.

சி.பரத்