நீரிலும் நிலத்திலும்...



ஒரு ஷேர் ஆட்டோ நெடுஞ்சாலை யில் சாதாரணமாக ஓடுவதைப் போலவே ஒரு ஏரியிலும் இறங்கி தண்ணீரில் ஓடினால் எப்படி இருக்கும்? ‘சாலமண்டர்’ என்கிற இந்த வாகனம் அப்படிப்பட்டதுதான்! தரையில் ஓடுவதைப் போலவே தண்ணீரிலும் ஓடும்.

‘‘மிகக் குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட தயாரிப்பு’’ என பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கார் டிசைனர் அடாய் லேவ் அறிமுகப்படுத்தியுள்ள மூன்று சக்கர வாகனம் இது. இதில் ஐந்து பேர் பயணிக்க முடியும். விலை, வெறும் 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்.

பிலிப்பைன்ஸில் அடிக்கடி வெள்ளப்பெருக்குகள் நிகழ்வது சகஜம். தலைநகர் மணிலாவின் பிஸியான வீதிகள் கூட தண்ணீருக்குள் மூழ்கிவிடும். இப்படிப்பட்ட சமயங்களில் ராணுவம் படகுகளில் வந்து மக்களை மீட்க வேண்டி வரும். ஏரிகள், நதிகளில் ஏற்படும் விபத்துகளின்போதுகூட மீட்புப் படகுகள் உரிய நேரத்தில் வராததால் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம். இந்த அத்தனைப் பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக இந்த வாகனத்தைச் சொல்கிறார் அடாய்.

‘‘இது பெட்ரோலிலும் ஓடும்; எலெக்ட்ரிக் வாகனமாகவும் இதை இயக்க முடியும். சாதாரண நாட்களில் ஆட்டோ போல சாலைகளில் சவாரி ஓட்டலாம். அல்லது ஏரிகளில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்று சுற்றிக் காட்டலாம். ஆபத்து நேரங்களில் இதை மீட்பு வாகனமாகப் பயன்படுத்தலாம்’’ என்கிறார் இவர்.

லோகேஷ்