விசித்திர வெட்டுக்கிளி



பூச்சிப் பூக்கள் 62

இளம் பச்சை நிறத்தில் சட்சட்டென்று நம் முன்னே தாவிக் குதித்துப் பிரசன்னமாகி, எதுவுமே செய்யாமல் ஒரு சொற்ப அவகாசத்தில், மறுபடி ஒரு தாவலில் நம்மை விட்டு விலகிவிடும் வெட்டுக்கிளிகள்தான் இன்றைய சூழலில் நம் எல்லோருக்கும் பரிச்சயம். ஆனால் முந்தைய பழைய காலங்களில் பத்து வயதிற்கு உட்பட்ட பள்ளிக்கூட மாணவர்கள் மத்தியில் இந்த வெட்டுக்கிளிக்கு மட்டற்ற வரவேற்பு!

வெட்டுக்கிளிகளுக்கு விவசாயிகளின் விரோதி என்று ஒரு செல்லப் பெயருண்டு. ஏனெனில் வெட்டுக்கிளிப் பட்டாளம் விளைநிலத்திற்குள் நுழைந்து விட்டால், ஒட்டுமொத்த பயிர்களையும் நாசம் செய்துவிடும். இவை எண்ணிக்கையில் பல லட்சக்கணக்கில் இருப்பதால் அடிக்கடி உணவுப் பஞ்சம் ஏற்பட்டு விடுகிறது. எனவேதான் இவை தொடர்ந்து நீண்ட தொலைவிற்குப் பயணித்துக் கொண்டே இருக்கின்றன.

இப்படி இரை நிமித்தம் தூரப் பயணம் போகையில், ஒரு பெரும் கூட்டமாகவே  அதுவும் பல்லாயிரக்கணக்கில் செல்வதுதான் இவற்றின் வாடிக்கை. சமயத்தில் இவை இருக்கும் இடத்திலேயே போதிய இரை நீண்ட நாட்களுக்கு வேண்டிய அளவில் தொடர்ந்து கிடைத்துக் கொண்டு இருந்தாலும் கூட, ஒருவிதமான உள்ளுணர்வு உந்துதலின் காரணமாக இவை குறிப்பிட்ட இடைவெளியில் பயணம் போகத் தவறுவதில்லை. நாடோடி குணம்!

வெட்டுக்கிளிக் கூட்டம் விளைவித்த வியத்தகு நாசம் பற்றிய வரலாறுகள் இப்புவியில் நிறைய உண்டு. 1880ம் ஆண்டில் ரஷ்யாவின் தெற்குப் பிரதேசத்து மக்கள், வெட்டுக்கிளிகளின் அமர்க்களமான அட்டகாசத்திற்குப் பயந்து பல நாட்கள் கதவைச் சாத்திக் கொண்டு வீட்டிற்கு உள்ளேயே முடங்கிக் கிடந்தார்களாம்.

1955ம் ஆண்டில் மொராக்கோ நாட்டிற்குப் பறந்து வந்த வெட்டுக்கிளிக் கூட்டத்தின் அகலம் இருபது கிலோ மீட்டர் வரை இருந்த தாம். இவை தினசரி போர்க்கால அடிப்படையில் ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பில் இருந்த பயிர்களை அழித்தனவாம்.

இதே மாதிரி அமெரிக்காவில் உட்டா என்ற இடத்திலிருந்து கிளம்பிச் சென்ற வெட்டுக்கிளிகளின் கூட்டத்தில், 1250 கோடி வெட்டுக்கிளிகள் இருந்ததாகக் கணக்கிட்டு இருக்கிறார்கள். அம்மாடியோவ்!

இந்த வெட்டுக்கிளிகளுக்கு எதிரிகள் எக்கச்சக்கம்! பல்வேறு பறவைகள், ஓணான்கள், பச்சோந்திகள், சிறு பாம்புகள், கீரிகள் என்று ஏகப்பட்ட ஜீவராசிகளின் விருப்ப மெனுவில் வெட்டுக்கிளிகள் இடம் பெற்றுள்ளன.

இயல்பாகவே அமைந்துள்ள உடலின் பச்சை நிறம் ஓரளவிற்கு இலை, தழைகளின் நிறத்தோடு நன்றாக ஒத்துப் போவதால் அசையாமல் இலையோடு இலையாய் தோற்றமளித்து எதிரிகளை ஏமாற்றிட உதவுகிறது. இதையும் மீறி எதிரியின் கண்களில் பட்டு விட்டால் இருக்கவே இருக்கிறது ஜம்பிங் டெக்னிக். என்ன தான் தாவிக் குதித்து சொற்ப தூரத்திற்குப் பறந்து செல்ல முடிந்தாலும் இவற்றுக்கு எந்நேர மும் ஜீவ மரணப் போராட்டம்!

பச்சை நிறத்தின் சாதுரியத்தில் தன்னை மறைத்துத் தற்காத்துக் கொண்டிருக்கும் வெட்டுக்கிளி அருகாமையில் பசியோடு ஒரு எதிரியைப் பார்த்து விட்டால் அவ்வளவுதான், அடிவயிற்றில் புளியைக் கரைத்துவிடும்.

எதிரி கூர்ந்து நோக்கி விட்டால், அதற்கு ஸ்பெஷல் உணவாக மாறி விடுவோம் என்ற பயத்தில், சட்டென்று புற்களுக்கு இடையே தலைகீழாக நின்று கொண்டு, தம் குச்சி போன்ற கால்களை புற்களைப் போலவே மேல் நோக்கி நீட்டிக் கொள்ளும். எனினும் இதற்கொரு பயமிருக்கும். அதாவது இதனது தலைகீழ் சலனம் எதிரிக்குத் தெரிந்திருக்குமோ? கடவுளே காப்பாத்து!

வெட்டுக்கிளிகளில் எண்ணற்ற விநோத ரகங்கள் எல்லாம் ஆப்ரிக்க தேசத்தில் உள்ளன. அங்கே வாழும் இவற்றின் எதிரிகளும் வெகு சாமர்த்தியம் கொண்டவை! வெட்டுக்கிளிகள் விட்டுச் செல்லும் தடயங்களைப் புலனாய்வு செய்து, இரைப் பூச்சி யின் இப்போதைய இருப்பிடத்தைக் கண்டுபிடித்து விடுகின்றன. இதனால் வெட்டுக்கிளிகளும் வெகு ஜாக்கிரதையாக இருக்கின்றன. பொதுவாக பல்வேறு இன வெட்டுக்கிளிகளின் இருப்பிடத்தை அவற்றின் மலக் கழிவுகள்தான் எளிதில் எதிரிக்குக் காட்டிக் கொடுக்கின்றன.

ஆப்ரிக்காவின் பிரதானமான ஒரு வெட்டுக்கிளி இனம், எதிரிகளுக்கு அல்வா கொடுப்பதற்காகவே தம் மல உருண்டைகளை வெகு சிரத்தையோடு கவனமாக வெளியேற்றுகின்றன. அதாவது தம் கழிவை பீரங்கிக் குண்டுகள் போல, மேலே தூக்கிப் போட்டுத் தம் பின்னங் கால்களால் எட்டி உதைத்து விடுகின்றன.

இதனால் அவை பத்து பதினைந்தடி தூரத்திற்கு அப்பால் தள்ளி விழுந்து எதிரிகளைத் திசை திருப்பி விடுகின்றன. பொதுவாகக் கானகத்தில் இரைக் கொல்லி விலங்குகள் எல்லாம் எப்படியும் ஒரு விலங்கிற்கு ஏதோ ஒரு சமயத்தில் இரையாகிப் போவது தவிர்க்க முடியாதது. கத்திக்குக் கத்தி!

இந்த வெட்டுக்கிளிகளில் 2400 பேரினங்களும் அவற்றுள் 11 ஆயிரம் இனங்களும் இன்று வரை கண்டறிந்து விவரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு விவரிக்கப்படாத இனங்களின் எண்ணிக்கை இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது. சீலிஃபெரா என்னும் துணைப் பூச்சியின வகைப்பாட்டின் கீழ் வரும் இந்த வெட்டுக்கிளிகளில் ஏழெட்டுக் குடும்பங்கள் இருக்கின்றன. இவற்றின் உடன் பங்காளிகளில் ஒன்றான கேட்டிடிட்டுகளுக்கும் இவற்றிற்கும் குட்டைக் கொம்புகள்தான் பிரதான வித்தியாசம்!

இந்த வெட்டுக்கிளிகளின் இன்னொரு ஒன்றுவிட்ட பங்காளியான லோகஸ்ட்டுகள் பெரும் கூட்டமாக ஒன்று கூடுகையில் தம் உடல் நிறத்தையே பச்சோந்தி போல மாற்றிக் கொள்கின்றன. இதனால் தேடி வரும் எதிரிகள் ஏமாந்து திரும்பிப் போய் விடுகின்றன. கில்லாடி வெட்டுக்கிளிகள்!

டாக்டர் ஆர்.கோவிந்தராஜ்

(தொடரும்)