அழிந்த நகரம் நிம்ருத்!



‘‘ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் மியூசியங்களில் சேகரிக்கப்பட்டிருக்கும் பழமையான பாரம்பரியப் பொருட்களை விற்றும் கச்சா எண்ணெயை விற்றும் ஆயுதங்கள் வாங்கிக் குவிக்கிறார்கள்’’ என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. அதோடு வரலாற்றுப் பெருமை கொண்ட பாரம்பரியச் சின்னங்கள் பலவற்றையும் அவர்கள் அழித்து வருகிறார்கள். பண்டைய ரோமப் பேரரசின் நினைவுச் சின்னங்களைத் தாங்கியிருந்த சிரியா நாட்டில் இருக்கும் பல்மைரா நகரை அவர்கள் அழித்தது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேபோல இராக்கில் இருக்கும் இன்னொரு பழமையான நகரையும் அவர்கள் ஒட்டுமொத்தமாக அழித்திருக்கிறார்கள். அது, நிம்ருத்.

யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது நிம்ருத் நகரம். இது இப்போது ஒரு சிறிய கிராமமாக, இராக்கின் மொசூல் நகரத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் டைக்ரிஸ் நதிக்கரையில் உள்ளது. பண்டைய அசிரிய மன்னர்கள் நிம்ருத் நகரை சில காலம் தலைநகரமாக வைத்திருந்தனர்.  சுமார் 150 ஆண்டுகள் இது அந்தப் பேரரசின் தலைநகரமாக இருந்தது. பைபிளில் குறிப்பிடப்படும் ‘கெலா’ என்ற நகரம் இதுதான் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். பைபிள் வர்ணிக்கும் வேட்டைக்கார ஹீரோவான நிம்ருத் என்பவரின் பெயரே பிற்காலத்தில் இந்த நகருக்கும் வைக்கப்பட்டதாம்.



கி.மு. 1274 முதல் 1245 வரை அசிரியாவை ஆண்ட முதலாம் ஷால்மனேசர் என்ற மன்னர்தான் இந்த நகரை உருவாக்கினார். அசிரியப் பேரரசின் மையப் பகுதியில் இந்த நகர் அமைந்தது. எனினும் நாட்டின் தலைநகராக அச்சுர் நகரே நீடித்தது. கி.மு. 883ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த இரண்டாம் ஆஷிர்நாசிர்பால் இந்த நகரை நாட்டின் தலைநகரம் ஆக்கினார். அவர் பிரமாண்டமான அரண்மனை ஒன்றையும் கட்டினார். கூடவே ஒரு கோயிலையும் கட்டி பிரமாண்ட திறப்புவிழா நடத்தினார். அப்போது நிம்ருத், ஒரு லட்சம் மக்கள் வசிக்கும் பெரிய நகரமாக இருந்தது.

இந்த அரண்மனையின் இடிபாடுகளை 1853ம் ஆண்டில் கண்டெடுத்த ஆஸ்டன் ஹென்றி லயார்ட் என்ற ஆய்வாளர், அரண்மனை எப்படி இருந்திருக்கும் என ஓவியத்தில் மறுகட்டமைப்பு செய்து பார்த்தார். பிரமிக்க வைக்கும் தோற்றம் அது! இரண்டாம் ஆஷிர்நாசிர்பாலின் மகன் மூன்றாம் ஷால்மனேசர், தனது தந்தையை மிஞ்சும் விதமாக இன்னொரு அரண்மனை கட்டினார். அது 200 அறைகள் கொண்டதாக இருந்தது. அசிரியப் பேரரசின் இறுதிக்காலத்தில் இந்த நகரம் அழிந்தது.

1845ம் ஆண்டிலிருந்து இந்த நகரில் அகழ்வாராய்ச்சி துவங்கியது. பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் பலர் இதைச் செய்தனர். இதன் விளைவாக இங்கிருந்த அரிய கலைப் பொருட்கள் உலகெங்கும் 76 மியூசியங்களில் அடைக்கலம் புகுந்தன. இதில் லமாசூ என்ற ஜிப்ஸம் கல்லால் செய்யப்பட்ட, ஒரு ஆணின் தலையும் எருது உடலும் இறக்கையும் கொண்ட சிற்பம் ஆஷிர்நாசிர்பால் மன்னரின் அரண்மனை வாயிலில் இருந்தது. அது தற்போது நியூயார்க் நகரின் மெட்ரோபாலிட்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது. அறிவை உணர்த்தும் வகையில் நீண்ட தாடி வளர்த்த மனிதத் தலையும், பலத்தின் திறனைக் காட்ட எருது உடலும், தீயவற்றை எதிர்க்கும் அடையாளமாக கழுகுகளின் இறக்கைகளும் வடிவமைக்கப்பட்டது.



இதேபோல சுவர்களையும் அறைகளையும் இணைக்கும் கல் உத்தரங்களையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இது ஒருவகை சுண்ணாம்புக் கல்லால் உருவாக்கப்பட்டது. போர்க்களத்தில் மதச் சடங்குகளில் இடம்பெற்ற வேட்டையாடும் சிங்கம், மன்னர்  விருந்துகளில் கலந்துகொள்வதைப் போன்ற ஓவியம் ஆகியவையும் இங்கு கண்டெடுக்கப்பட்டன. 1980களில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியாளர்கள், கி.மு. 9-8ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல அரிய பொக்கிஷங்களைக் கண்டெடுத்தனர். யானைத் தந்தத்தில் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் இந்த ஆராய்ச்சியில் கிடைத்தன.

அதோடு பல மன்னர்களின் அரண்மனைகளும் நினுரிதா என்ற போர்க் கருவிக்கான கடவுளின் கோயிலும் நாபு என்ற எழுதும் சக்தி கொடுக்கும் கடவுளின் கோயிலும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டன. ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த நகரைக் கைப்பற்றியதும் புல்டோசர்கள் வைத்தும், வெடிப்பொருட்களைப் பயன்படுத்தியும் இங்கிருந்த நினைவுச்சின்னங்கள் அனைத்தையும் அழித்தனர். இது போர்க்குற்றம் என யுனெஸ்கோ கண்டித்துள்ளது.

- க.ரவீந்திரன், ஈரோடு.