புரோட்டீன்!



சில ருசிகரத் தகவல்கள்

நம் உடலுக்குத் தேவையான சத்துக்களில் முதன்மையானது புரோட்டீன். இது `புரோட்டிலோஸ்’ என்ற கிரேக்க மொழி வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதன் அர்த்தம், ‘அடிப்படை’ அல்லது ‘முதல் இடம்’. 1883ம் ஆண்டில்தான் புரோட்டீன் என்ற வார்த்தை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. நமது உணவை சமநிலைப்படுத்தி நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பது இந்த சத்துதான். சராசரி யாக ஒரு மனிதனுக்கு தினமும் 56 கிராம் புரோட்டீன் தேவை.

எந்த வயதில் எவ்வளவு புரோட்டீன் தேவை? மூன்று வயது வரை 13 கிராம்; 4 முதல் 8 வயது வரை 19 கிராம்; 9 முதல் 13 வயது வரை 34 கிராம்; 14 முதல் 18 வயது வரையுள்ள சிறுமிகளுக்கு 46 கிராம்; 14 முதல் 18 வயது வரையுள்ள பையன்களுக்கு 52 கிராம்; 19 வயதைத் தாண்டிய பெண்களுக்கு 46 கிராம்; 19 வயதைக் கடந்த ஆண்களுக்கு 56 கிராம் தேவை. இனி நாம் சாப்பிடும் உணவுகள் சிலவற்றில் புரோட்டீன் எவ்வளவு உள்ளது என அறிந்துகொள்வோமா?



1. வெஜிடபிள் பர்கர்    -    13 கிராம்

2. சோயா பீன்ஸ்    -    29 கிராம்

3. பட்டாணி        - 15 கிராம்

4. துவரம் பருப்பு    -    22 கிராம்

5. பாதாம் பருப்பு    -    8 கிராம்

6. முந்திரி        -    5 கிராம்

7. பாதாம் நெய்    -    7 கிராம்

8. சோயா பால்    -    7 கிராம்

9. கோதுமை ரொட்டி  -    7 கிராம்

10. பசலைக்கீரை
   (வேக வைத்தது)    -    5 கிராம்

11. சூரியகாந்தி விதை    -    6 கிராம்

நமது மொத்த உடல் எடையில் 18 முதல் 20 சதவீதம் புரோட்டீன்களால் ஆனது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் பெறப்படும் புரோட்டீன், பொதுவாக 2 அல்லது அதற்கும் குறைவான நாள்தான் உடலில் இருக்கும். நமது உடலுக்கு அல்புமின் என்ற புரோட்டீன் மிக மிக அவசியம். அது இல்லாவிட்டால் உடம்பு முழுவதும் வீங்கி விடும்.

நமது உடலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வகை புரோட்டீன்கள் உள்ளன. ஒவ்வொரு புரோட்டீனுக்கும் ஒரு குறிப்பிட்ட தேவையும் வேலையும் உண்டு. உதாரணமாக, தலைமுடி கெரோடின் என்ற புரோட்டீனால் ஆனது. அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சு என்பார்கள். அது புரோட்டீனுக்கும் பொருந்தும். நமது உடலுக்கும் வயதுக்கும் ஏற்றபடி அளவோடு சாப்பிடுவது நல்லது. புரோட்டீன் அதிகரித்தால் எலும்புச்சிதைவு நோய், புற்றுநோய், சிறுநீரகப் பிரச்னைகள், சிறுநீரகத்தில் கல் சேர்வது என பாதிப்புகள் வரும்.

- ராஜிராதா, பெங்களூரு.