நரேந்திரன் முதல் விவேகானந்தர் வரை 6
ரேணுகா சூரியகுமார்
அன்பனும் யாழை மீட்டுகிறாய்!
தன் கம்பீரத்தை எங்குமே நரேந்திரர் விட்டுக் கொடுத்ததில்லை. ‘தோழனோடு ஏழமை பேசேல்’ என்பதுதான் அவர் கொள்கை. ஆனாலும் பரமஹம்சர் இதனை ஒருமுறை மீறிவிட்டார். ‘‘நரேந்திரன் மிகவும் கஷ்டப்படுகிறான். ஏதாவது உதவி செய்து அவன் வறுமையைப் போக்கிட வேண்டும்...’’ என்று ஒரு பெரிய ஜமீன்தாரிடம் பரமஹம்சர் சொல்லிவிட்டார்.
தன்னுடைய வறுமையைப் பற்றி இன்னொருவரிடம் சொன்னதில் ஏக வருத்தம் நரேந்திரருக்கு. ‘‘நீங்கள் எப்படி என் வறுமையைப் பற்றி ஜமீன்தாரிடம் சொல்லலாம்?’’ என்று கோபப்பட்டார். அதற்கு பகவான் சொன்ன பதில் நரேந்திரரை அப்படியே உறைய வைத்துவிட்டது. ‘‘நரேந்திரா, உன் நலத்திற்காக நான் வீடு வீடாகச் சென்று யாசிக்கக்கூட தயாராக இருக்கிறேன்’’ என்றார் பரமஹம்சர். பதிலேதும் பேச முடியாத நரேந்திரர், அவரது அன்பில் உருகி நின்றார். அவருடைய பாதத்தில் விழுந்து வணங்கினார். ஆனந்தக் கண்ணீர் கடலாய் பெருகியது.
சமாதி நிலை சரியா?
பகவான் பரமஹம்சர், பல சமயங்களில் சமாதி நிலை அடைவதைப் பார்த்திருக்கிறார் நரேந்திரர். எதைப் பார்த்தாலும் அது வேண்டும் என்று நினைப்பவர் நரேந்திரர். அது கடவுள் பற்றிய விஷயமாகவும், ஞானம் பற்றிய விஷயமாகவும் இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். பரமஹம்சரின் சமாதி நிலையைப் பார்த்த அவர், தாமும் உடனே சமாதி நிலை அடைய விரும்பினார். தன் விருப்பத்தை பரமஹம்சரிடம் தெரிவித்தார். ராமகிருஷ்ணரும் அதை ஏற்றுக்கொண்டு அவருக்கு சமாதி நிலையைக் காட்டினார்.
அவ்வளவுதான், நரேந்திரர் பேச்சு மூச்சில்லாமல் இருந்தார். உயிர் நாடியும் ஒடுங்கிவிட்டது. எந்த தீண்டலுக்கும் துலங்கல் அவரிடத்தில் இல்லை. அகஉணர்வில் அவர் ஆட்பட்டிருந்தார். பேரண்டத்தின் போராளியான அகவுணர்வை மட்டுமே அவரால் உணர முடிந்தது. சக சீடர்கள் பயந்து போய்விட்டனர். சில மணி நேரம் கழித்து தூக்கத்திலிருந்து எழுவதுபோல் எழுந்தார் நரேந்திரர். சமாதி நிலை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், தான் தொடர்ந்து அந்நிலையிலேயே இருக்க உதவிட வேண்டும் என்றும் பகவான் பரமஹம்சரிடம் கேட்டார் நரேந்திரர். ‘‘தவறு தம்பி. இதை நீ மட்டும் அனுபவித்தால் போதாது. உலகத்தில் இருப்பவர்கள் எல்லோருக்கும் இந்த சமாதி நிலை, இறை அனுபவம் பெறும் ஆற்றலை போதிக்க வேண்டிய குருவாக நீ மாற வேண்டும். அதுதான் உன் போன்ற தியாக சீடர்களுக்கு அழகு’’ என்று பரமஹம்சர் வழிகாட்டினார்.
மின்சாரக் கண்ணா
பகவான் பரமஹம்சரின் வழிகாட்டுதலால் சமாதி நிலை அடையும் வித்தை நரேந்திரருக்கு கிடைத்தது. நரேந்திரர், புதிதாக எதைக் கேட்டாலும், பார்த்தாலும் அதை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார் அல்லவா? தெய்வீக சக்தி தன்னுள் படர்வதையும், யோக நிலையின் உச்சத்தை தன் உடல் அடையும்போது, அது புற உணர்ச்சிகளில் இருந்து விடுபட்டுப் போய் விடுவதையும் உணர்ந்தார். இதை பிறருக்கு உணர்த்த வேண்டும், யாரிடமாவது வெளிப்படுத்திட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
ஒருநாள் சிவ தியானம் செய்ய நரேந்திரரும் பிற சீடர்களும் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது நரேந்திரர் தன் அருகில் இருந்த ‘காளி’ என்ற சக சீடரிடம், ‘‘நான் தியானத்தில் ஆழ்ந்து கொஞ்ச நேரம் சென்ற பிறகு என்னைத் தொட்டுப் பார்’’ என்றார். அதுபோலவே அவர் நரேந்திரனைத் ெதாட்டுப் பார்த்தார். என்ன ஆச்சர்யம்! மின்சாரக்கம்பியைத் தொட்டது போல ‘ஷாக்’ அடித்தது. அதைக் கேட்டதும் நரேந்திரருக்கு பயங்கர சந்தோஷமாகிவிட்டது.
ஆனால் பூஜைகளையெல்லாம் முடித்து விட்டு பரமஹம்சரை சந்திக்கப் போனால், அவர் கோபத்தோடு இருந்தார். ‘‘நரேந்திரா! முழு அனுபவத்தையும், சக்தியையும் பெற்றுக்கொண்டு, நீ முழுமை அடைந்த பின்புதான் அடுத்தவருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். எப்போது யாருக்கு உன் சக்தியைக் காட்ட வேண்டும், யாருக்கு என்ன சொல்லித் தர வேண்டும் என்ற உத்தரவு உனக்குக் கிடைக்கும். அப்போது தான் உன் சக்தியை பிறருக்கு உணர்த்த முயல வேண்டும். ஆர்வக்கோளாறு காரணமாக எதையும் செய்யக்கூடாது’’ என்று கடுமையாகக் கூறினார். அதன்பிறகு தன் சக்தியையும், திறனையும் செலவிடாமல் தேக்கி வைக்கத் தொடங்கினார் நரேந்திரர்.
(தொடரும்)
|