உலகம் கண்ட வெள்ளங்கள்!சில அதிர்ச்சித் தகவல்கள்

சென்னையில் வெள்ளம் வடிந்தாலும் அதன் பாதிப்பும் சோகமும் வடிந்தபாடில்லை. இப்படியும் நடக்கும் என நமக்குப் பல படிப்பினைகளைச் சொல்லியிருக்கிறது மழை. நமக்கு நேர்ந்தால் மட்டும்தான் அதிலிருந்து பாடம் பெற வேண்டுமா? உலக அளவில் பல இடங்களிலும் பெருவெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. அதிலிருந்தும் கற்கலாம். தன்னம்பிக்கையோ, தயார் மனநிலையோ... இந்த வெள்ள வரலாறுகள் நமக்கு எதையாவது தரக்கூடும்!

1931 சீன வெள்ளம்

உலகில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம் இதுதான். 1931ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சீனாவின் மஞ்சள் ஆற்றில் ஏற்பட்டது. மஞ்சள் ஆற்றை ‘சீனாவின் துயரம்’ என புவியியல் நூல்களில் குறிப்பிடுவார்கள். அடிக்கடி சீனாவை வெள்ளக்காடாக்கும் இது 1931ம் ஆண்டு மிக மோசமான பேரழிவைத் தந்தது. இதை ‘1931 மஞ்சள் ஆற்று வெள்ளம்’ என்றும் அழைக்கிறார்கள். இந்த வெள்ளத்தில் சிக்கி சுமார் 25 முதல் 37 லட்சம் பேர் உயிரிழந்ததாக வரலாறு கூறுகிறது. 

மஞ்சள் ஆறு அமைந்துள்ள மத்திய சீனாவில் அந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மட்டும் தொடர்ச்சியாக 9 புயல்கள் ஏற்பட்டதே இந்த மோசமான வெள்ளம் ஏற்படக் காரணம். இதே மஞ்சள் ஆறு வெள்ளத்தின் கோர முகம் காட்டி 1887ம் ஆண்டிலும் சீனாவை மூழ்கடித்தது. அப்போது சுமார் 9 லட்சம் பேரிலிருந்து 20 லட்சம் பேர் வரை இறந்திருக்கக்கூடும் என வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. 1938ம் ஆண்டிலும் இது மீண்டும் துயரத்தை சுமந்து வந்து சுமார் 9 லட்சம் பேரை சாகடித்தது.யாங்ஷி ஆறு வெள்ளம்

மத்திய சீனாவிலிருந்து கிழக்கு நோக்கிப் பாயும் யாங்ஷி ஆறு, ஆசியாவின் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்று. 1931ம் ஆண்டில் மஞ்சள் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு போல 1935ம் ஆண்டு யாங்ஷி ஆற்றிலும் ஏற்பட்டது. அதில் சுமார் 3 லட்சம் பேர் உயிரிழந்தார்கள். மிகப் பெரிய ஆறு என்பதால் இந்த ஆறு பயணிக்கும் இடங்கள் எல்லாமே வெள்ள அபாய இடங்களாகவே அறிவிக்கப்பட்டன. இதேபோலவே 1911, 1954ம் ஆண்டுகளிலும் இந்த ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது.

சிவப்பு ஆறு வெள்ளம்

1971ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி, தெற்கு வியட்நாமில் உள்ள சிவப்பு ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மிக மோசமான வானிலை காரணமாகக் கொட்டித் தீர்த்த மழையால் ஆறு பெருக்கெடுத்து பேரழிவை ஏற்படுத்தியது. இதில் சுமார் 1 லட்சம் பேர் உயிரிழந்தார்கள்.  வங்க தேச வெள்ளம்

பிரம்மபுத்திரா ஆற்றில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம் இது. 1974ம் ஆண்டு நவம்பரில் ஏற்பட்டது. அங்கே பருவமழை பல நாட்களுக்குக் கொட்டித் தீர்த்ததால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பிரம்மபுத்திரா ஆற்றின் கரையோரங்களில் இருந்த ஆயிரக்கணக்கான வீடுகள் மூழ்கின. வெள்ளத்தில் சிக்கி 28,700 பேர் உயிரிழந்தனர். 1974ம் ஆண்டில் கடும் பஞ்சம், ஸ்திரத்தன்மையற்ற நிலையால் தத்தளித்த வங்க தேசத்துக்கு இந்த வெள்ளம் பெரும் அடியாக இருந்தது.

வட இந்திய வெள்ளம்

இந்தியாவில் பல்வேறு காலகட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் 2013ம் ஆண்டு இமாசலப் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளமே மிக மோசமான வெள்ளமாகக் குறிப்பிடப்படுகிறது.  2013ம் ஆண்டு ஜூன் மாதம் வட மாநிலங்களில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்தது. இதனால் இமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேச மாநிலங்களில் கடுமையாக மழை பெய்தது. கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக மந்தாகினி ஆறு உள்பட பல ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதோடு மண் சரிவும் பல இடங்களில் ஏற்பட்டு குடியிருப்புகளை சின்னாபின்னமாக்கியது. வெள்ளப் பெருக்கிலும் நிலச்சரிவிலும் சிக்கி 5,897 பேர் உயிரிழந்தார்கள். இந்த வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவால் திபெத், நேபாள நாடுகளும் பாதிக்கப்பட்டன.

- கே.ஈஸ்வரி