வயிற்றுப்போக்கை ஒழிக்கப் பிறந்த மருந்துகள்!



டாக்டர் கு.கணேசன்

மழைக்காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு அதிகம் வேட்டு வைப்பது இரண்டே இரண்டு நோய்கள்தான். ஒன்று, நெஞ்சுச்சளி. மற்றொன்று, வயிற்றுப்போக்கு. பாக்டீரியா, வைரஸ், புரோட்டோசோவா போன்ற கிருமிகள் குழந்தைகளைத் தாக்கும்போது வயிற்றுப்போக்கு ஏற்படும். இவற்றில் ‘ரோட்டா’ வைரஸால் ஏற்படும் வயிற்றுப்போக்கு மிகவும் கடுமையானது; கொடுமையானது. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிறுநீர் போல மலம் போகும். தொடர்ந்து வாந்தி வரும். காய்ச்சல் ஏற்படும். குழந்தை சீக்கிரமே நீர்ச்சத்தை இழந்துவிடும். சீக்கிரமே சிகிச்சை அளிக்கத் தவறினால், குழந்தையின் உயிருக்கு ஆபத்து வந்து சேரும்.

எங்கெல்லாம் சுத்தமும் சுகாதாரமும் இல்லையோ அங்கெல்லாம் ரோட்டா வைரஸ் ஆதிக்கம் செலுத்துகிறது. இது ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத்தான் அதிகம் பாதிக்கிறது. மாசடைந்த உணவு, குடிநீர் மற்றும் நோயாளி உபயோகித்த பொருள்கள் மூலம் இது மற்றவர்களுக்குப் பரவுகிறது. குழந்தைகளுக்குப் புட்டிப்பால் கொடுக்கும்போது சுத்தம் பேணப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் ஃபீடிங் பாட்டில், நிப்பிள், பாட்டில் மூடி... இந்த மூன்றையும் சுத்தமாகக் கழுவி, 10 நிமிடங்களுக்குத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆற வைத்த பிறகுதான் பயன்படுத்த வேண்டும். அப்படி முறையாக கிருமி நீக்கம் செய்யாமல் குழந்தைக்குப் பால் கொடுப்பது, பிளாஸ்டிக் டப்பாக்கள் மூலம் பால் தருவது போன்றவற்றாலும் ரோட்டா வைரஸ் பரவுகிறது. சில குழந்தைகள் எந்த நேரமும் வாயில் ரப்பரைத் திணித்துக்கொள்ளும். சுத்தம் பேணப்படாத அந்த ரப்பர் மூலமும் இது பரவுகிறது.

அசுத்தமான இடங்களிலும் மாசு நிறைந்த சூழலிலும் வளரும் குழந்தைகளையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளையும் இது சுலபமாகத் தாக்கிவிடும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு இதன் தாக்கம் சற்று குறைவாக இருக்கும், காரணம், தாயிடம் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு வந்துவிடும். புட்டிப்பால் மற்றும் பசும்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு  நோய் எதிர்ப்பு சக்தியானது குறைவாக இருக்கும் என்பதால், இவர்கள் ரோட்டா வைரஸால் மிகச் சுலபமாகத் தாக்கப்படுகின்றனர்.

ரோட்டா வைரஸை அழிப்பதற்கான மருந்துகள், இதுவரை எந்த நாட்டிலும்  கண்டுபிடிக்கப்படவில்லை.  ஆனால், இது நம்மைத் தாக்காமல் இருப்பதற்காக ரோட்டாடெக் (RotaTeq), ரோட்டாரிக்ஸ் (Rotarix), 116 இ (116 E)  என மூன்று வகை தடுப்புச் சொட்டு மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் ரோட்டாடெக் மருந்து 2004ல் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவில் ஏற்கனவே பல தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்து பிரபலமான விஸ்டார் நிறுவனம்தான் இதைக் கண்டுபிடித்தது. 2005ல் மெர்க் நிறுவனம் இதை மருந்தாகத் தயாரித்துக் கொடுத்தது. இந்தக் கண்டுபிடிப்பு குறித்து விஸ்டார் நிறுவனத்தின் தலைவர் ருசல் காஃப்மேன் அளித்த பேட்டியைப் படியுங்கள்...

‘‘1980ம் ஆண்டில் அமெரிக்கக் குழந்தைகளை அலற வைத்துக்கொண்டிருந்தது ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கு. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பச்சிளம் குழந்தைகள் இதனால் இறந்து கொண்டிருந்தனர். எனவே, இதற்கு எப்படியும் ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஃபிரட் கிளார்க், ஸ்டேன்லி பிளாட்கின் என்ற இரு விஞ்ஞானிகள் களத்தில் இறங்கினர். அப்போது வேறு ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பால் ஆஃபிட் என்ற விஞ்ஞானி. பக்கத்து வீட்டில் ஒன்பது மாதக் கைக்குழந்தை இந்த நோயால் தன் கண்ணெதிரில் இறந்துபோனதைப் பார்த்ததும், தன்னுடைய பழைய ஆராய்ச்சியை விட்டுவிட்டு இவர்களோடு கைகோத்துக்கொண்டார்.



இவர்கள் மூவரும் முதலில் பசுங்கன்றுக்கு ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி, அதன் ரத்தத்தில் காணப்பட்ட வைரஸ் கிருமிகளிலிருந்து ஒரு மருந்தைத் தயாரித்தனர். இது ஆரம்பத்தில் நோயைக் கட்டுப்படுத்த உதவியது என்றாலும், போகப் போக இதன் பலன் குறைந்தது. இதற்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்துகொள்ள  மீண்டும் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தனர். அப்போதுதான் இதற்குக் காரணம் புரிந்தது. அதாவது, இந்த வைரஸ் வளர்ந்து வரும்போது ஆரம்பத்தில் இருந்த இனமாகவே தொடர்ந்து இருப்பதில்லை. பல இனங்களாக உருமாற்றம் அடைந்துவிடுகிறது. எனவே ஒரு இனத்துக்காக அவர்கள் தயாரித்த மருந்து, இந்தப் புதிய இனத்துக்கு எதிராகச் செயல்படவில்லை.

இந்தப் பின்னடைவைத் தவிர்க்க ஒரு புது வழியை மேற்கொண்டனர். ஏற்கனவே தாங்கள் தயாரித்திருந்த பசுங்கன்று வைரஸ் கிருமிகளோடு மனித ரத்தத்தில் வளர்க்கப்பட்ட ரோட்டா வைரஸ் துணை இனங்களில் ஜி1, ஜி2, ஜி3, ஜி4, பி1ஏ (G1, G2, G3, G4, P1A) என்று மொத்தம் 5 வகைக் கிருமிகளைக் கலந்து 1993ல் ஒரு புதிய மருந்தைக் கண்டுபிடித்தனர். இதை 2004 வரை உலகில் 11 நாடுகளில் எழுபதாயிரம் கைக்குழந்தைகளுக்குக் கொடுத்துப் பார்த்தனர். இது கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படவே இல்லை என்பது உறுதியானதும் 2005 டிசம்பர் 14 அன்று இந்த மருந்தை மனிதப் பயன்பாட்டுக் கொண்டு வந்தனர்.  சுமார் 25 ஆண்டுகள் மூன்று விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பில் பிறந்த இந்த மருந்து, இன்றைக்கு உலக அளவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கைக்குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு வராமல் தடுத்துக்கொண்டிருக்கிறது.’’

எப்படிக் கொடுப்பது?

குழந்தைக்கு ஒன்றரை மாதம் முடிந்ததும் முதல் தவணை மருந்தைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கத் தவறினால், 15 வாரம் முடிவதற்குள் கொடுத்துவிட வேண்டும். இரண்டாம் தவணையை இரண்டரை மாதம் முடிந்ததும் கொடுக்க வேண்டும். இந்த 2 தவணைகளுக்கு இடையில் 4 வாரம் வரை இடைவெளி இருக்க வேண்டும். மூன்றாம் தவணை மருந்தை மூன்றரை மாதம் முடிந்ததும் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கத் தவறினால், குறைந்தது 8 மாதங்களுக்குள் கொடுத்து விட வேண்டும்.

 (தொடரும்...)