காதுகளில் தேன் பாய்ச்சும் கலைவாணர் பேத்தி!



‘ஆரம்பம்‘ படத்தின் ‘என் ஃபியூஸு போச்சே...‘வும், ‘பிரியாணி‘ படத்தின் ‘பாம் பாம் பெண்ணே‘வும் டாப் டென் பாடல் பட்டியலில் முன்னணியில் இடம்பிடிக்க, தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்கிற மாதிரி சிரிக்கிறார் இவற்றைப் பாடிய ரம்யா என்.எஸ்.கே!


‘‘கனடா, யு.எஸ்., ஆஸ்திரேலியானு இளையராஜா சாரோட வேர்ல்ட் டூர் போயிட்டு இப்பதான் வந்தோம். அந்த இன்ப அதிர்ச்சியிலேருந்து நான் இன்னும் வெளியில வரலை...’’ - பிரமிப்பு விலகாமல் பேசுகிறவரின் குரலில் ஒலிக்கக் காத்திருக்கும் படங்களில் ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’, ‘இங்க என்ன சொல்லுது’ உள்பட பல... கலைவாணர் குடும்பத்திலிருந்து கலைத்துறைக்கு வந்திருக்கிற இன்னொரு வாரிசு. யெஸ்... கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பேத்திதான் ரம்யா. ஆனாலும், தான் இன்னாரின் பேத்தி என்பதை தனக்கான விசிட்டிங் கார்டாக எங்கேயும் உபயோகிப்பதில்லை ரம்யா. பெயரைத் தொக்கி நிற்கும் இனிஷியல்தான் அடையாளம் காட்டுகிறது.

‘‘யார்கிட்டயும் நானா போய் நான் இன்னாரோட பேத்தினு சொல்லிப் பெருமையடிச்சுக்கறதோ, வாய்ப்பு தேடறதோ இல்லை. இளையராஜா சார்கிட்ட கூட, அவருக்குப் பாடி முடிச்ச பிறகுதான் தாத்தா பத்தி சொன்னேன்’’ என்பவர், சினிமா விதிப்படி பார்த்தால் நடிகையாக அல்லவா அறிமுகமாகியிருக்க வேண்டும்? ‘‘அப்பாவோட அப்பா என்.எஸ்.கிருஷ்ணன். அம்மாவோட அப்பா கே.ஆர்.ராமசாமி. நடிப்புப் பாரம்பரியம் உள்ள குடும்பத்துலேருந்து வந்தாலும், எனக்கு நடிப்புல சுத்தமா ஐடியாவே இல்லீங்க... இன்னும் சொல்லப் போனா, கேமரான்னாலே அவ்ளோ கூச்சம்.

சின்ன வயசுலேருந்து எனக்கு போட்டோகிராபி, ஓவியம், மீடியா... இதுல எல்லாம்தான் ஆர்வம். அதுக்காகத்தான் விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சேன். எங்கம்மா கலைச்செல்விக்கு என்னைப் பாடகியாக்கிப் பார்க்கணும்னு ஆசை. ‘பாடு... பாடு’ன்னு சொல்லிட்டே இருப்பாங்க.  சித்ராம்மா, ஜானகியம்மா குரல்களை எல்லாம் கேட்கறப்ப, எனக்கு என் குரலை நினைச்சு சிரிப்புதான் வரும். 8 வருஷம் கர்நாடிக் மியூசிக் கத்துக்கிட்டேன். இப்போ வெஸ்டர்ன் மியூசிக் கத்துக்கறேன். கிடார் டீச்சர்தான், ‘விஜய் ஆண்டனி சார், வெஸ்டர்ன் வாய்ஸ் தேடிட்டிருக்கார், போய் பாரு’ன்னு சொன்னாங்க. அப்படிக் கிடைச்ச வாய்ப்புதான், ‘காதலில் விழுந்தேன்’ படத்துல ‘உனக்கென நான்...’ பாடற வாய்ப்பு. அப்புறம் தமன் மியூசிக்ல ‘துக்குடு’ பாட்டு, சூப்பர் டூப்பர் ஹிட். அதைப் பார்த்துட்டு  ‘நீதானே என் பொன்வசந்தம்’ல பாட வாய்ப்பு வந்தது.

ராஜா சார் மியூசிக்ல பாடறதுக்கு வாய்ப்பு வந்தப்ப, நம்பவே முடியலை. மனசு முழுக்க பயத்தோடவே ரெக்கார்டிங் போனேன். ஆனா, நான் பயந்த அளவுக்கு ஒண்ணுமே நடக்கலை. தப்பு பண்ணினா சொல்லிக் கொடுத்து, தானே பாடிக் காட்டி, என்கரேஜ் பண்ணிப் பாட வச்சார். அந்த பிரமிப்பு நீங்கறதுக்குள்ளே, அதே இசைஞானி மியூசிக்ல ‘மேகா’னு இன்னொரு படத்துக்கும் 3 பாட்டு பாடிட்டேன். ராஜா சார் ஒரு சிரிப்பு சிரிச்சாலே, அது ஆஸ்கார் வாங்கினதுக்கு சமம்... நான் பாடின ‘சற்று முன்பு’க்கு அப்படியொரு சிரிப்பு எனக்குப் பதிலா கிடைச்சது’’ - வார்த்தைக்கு வார்த்தை ராஜா புகழ் பாடிப் பூரிக்கிறார் ரம்யா.

‘‘கடவுள் புண்ணியத்துல என்னோட குரல் கொஞ்சம் வித்தியாசமா அமைஞ்சிருக்கு. இந்தியன் ஸ்டைல்ல வெஸ்டர்ன் கலந்து பாட முடியும். பத்தோட ஒண்ணா இல்லாம, தனிச்சு நிற்க அந்தத் திறமைதான் என்னோட பிளஸ். அதனாலயே எனக்குப் போட்டிகள் இல்லை’’ என்கிறவர், சமீப காலமாக ‘யு... மீ... அண்ட் ஹிம்’ என்கிற காஸ்பெல் பேண்டில் தன்னைத் தீவிரமாக இணைத்துக் கொண்டிருக்கிறார்.

‘‘இங்கிலீஷ்ல பாடறது பிடிக்கும். கடவுளுக்குப் பாடறது அதைவிடப் பிடிக்கும். காஸ்பெல் பேண்ட்ல பாடறதுங்கிறது தனி ஃபீல்... அது வேற உலகம்...’’ - கண் மூடி உலகம் மறப்பவரின் எதிர்கால வாழ்க்கையிலும் இசையே நீக்கமற நிறைந்திருக்குமாம்.

‘‘இப்ப சினிமாவுல பிஸியா பாடறேன். இதுவே நிரந்தரம்னு சொல்ல முடியாது. எனக்கு மியூசிக்கை விட்டா வேற எதுவும் தெரியாது. பாடகியாகறதுக்கு முன்னாடி ஒரு தனியார் எஃப்.எம்.ல மியூசிக் மேனேஜரா இருந்தேன்.  சினிமா... இன்னொரு பக்கம் காஸ்பெல்னு இப்பவும் என் உலகத்துல இசை மட்டும்தான் இருக்கு. இனியும் அப்படித்தான்... ஏதோ ஒரு வகையில இசையோட இணைஞ்சிருப்பேங்கிறதை மட்டும் உறுதியா சொல்ல முடியும்...’’ - என்.எஸ்.கே. பேத்தியின் வார்த்தைகளில் அத்தனை கம்பீரம்!