சூப்பர் ஸ்டார்!



ஆண்கள் கோலோச்சிக் கொண்டிருந்த துப்பாக்கிச் சுடுதலில் முதல் பெண்ணாகக் கால்பதித்து, உலக அளவில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தவர் ஆனி ஓக்லே! அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தில் 1860 ஆகஸ்ட் 13 அன்று  பிறந்தார். ஜேக்கப் - சூசன் மோசஸ் தம்பதியின் ஐந்தாவது குழந்தை இவர். வறுமையான சூழல்.

5 வயதிலேயே ஆனி, உணவுக்காக தோட்டங்களில் பறவைகளையும் அணில் களையும் வேட்டையாடிக்கொண்டு வருவார்.  ஒருநாள் ஜேக்கப் பனிச்சூறாவளியில் சிக்கி, மரணம் அடைந்தார். வீட்டின் சூழ்நிலை மிகவும் மோசமானது. 7 குழந்தைகளை எப்படிப் பராமரிப்பது என்று சூசன் திணறியபோது, பெரிய குழந்தைகள் ஐந்து பேரும் வேலை செய்து, ஓரளவு குடும்பத்தைக் காப்பாற்றினார்கள்.

அப்பாவின் பழைய துப்பாக்கியை எடுத்துப் பயிற்சி செய்தார் ஆனி. நிறைய பறவைகளை அவரால் வீழ்த்த முடிந்தது. வீட்டுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு, மீதியை விற்று, தன் பங்கு வருமானத்தை அளித்தார். குழந்தைகளின் வருமானமும் சூசனின் வருமானமும் குடும்பத்துக்குப் போதவில்லை. வீட்டு வேலைசெய்தால் படிக்க வைப்பதாக ஒரு
வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. 8 வயதான ஆனியை அனுப்பினார் சூசன். அதிகாலை 4 மணிக்கு எழ வேண்டும். பால் கறக்க வேண்டும். கன்றுகளுக்கு உணவளிக்க வேண்டும். பன்றிகளுக்கும் ஆடுகளுக்கும் தண்ணீர் வைக்க வேண்டும். கோழிகளுக்குத் தீவனம் போட வேண்டும்.

அழும் குழந்தையைக் கவனிக்க வேண்டும். தோட்டத்தைச் சுத்தப்படுத்த வேண்டும். பிளாக்பெர்ரிகளையும் காய்கறிகளையும் பறிக்க வேண்டும். உணவு தயார் செய்ய வேண்டும். நடுவில் கிடைக்கும் நேரங்களில் வேட்டைக்குச் செல்ல வேண்டும். குழந்தை ஆனியால் இத்தனைச் சுமைகளையும் தாங்கவே முடியவில்லை. அம்மா வந்து
அழைத்துச் செல்ல மாட்டாரா என்று ஏங்கினார்.

வீட்டின் உரிமையாளர்களோ, ஆனி பள்ளிக்குச் செல்வதாகவும், அவளை நன்றாகப் பார்த்துக்கொள்வதாகவும் சூசனுக்குக் கடிதம் எழுதினார்கள். 2 ஆண்டுகள் அவர்கள் செய்த கொடுமைகளை அனுபவித்த ஆனி, அவர்களை ‘ஓநாய்கள்’ என்று தனக்குள் அழைத்துக்கொண்டார். ஒருநாள் இரவு கடும் பனிப்பொழிவு. காலில் செருப்பு கூட இல்லை. ஆனியை வீட்டைவிட்டுத் துரத்தினார்கள். கால்கள் குளிரில் மரத்துப் போயின. உதடுகள் வெடித்தன. ஆனாலும், ‘ஓநாய்களிடமிருந்து விடுதலை பெற்ற சந்தோஷம்’ அவரை உத்வேகம் கொள்ள வைத்தது. பிரார்த்தனை செய்தபடி ஓடினார். 20 மைல்களைக் கடந்த போது, ரயில் நிலையம் வந்திருந்தது. டிக்கெட் வாங்க பணம் இல்லை.

ஆனியின் நிலை கண்ட ஒருவர் டிக்கெட் வாங்கிக் கொடுத்தார். ஓநாய்களிடமிருந்து காப்பாற்றிய அந்த நல்ல மனிதருக்கு ஒவ்வொரு நாளும் நன்றி சொல்லிக்கொண்டிருந்தார் ஆனி. மகள் திரும்பி வந்ததில் சந்தோஷமாக இருந்தாலும் சூசனால் வைத்துக் காப்பாற்ற வழியில்லை. மீண்டும் வேறோர் இடத்துக்கு வேலைக்கு அனுப்பினார். 3 ஆண்டுகள் வேலை செய்த பிறகு, ஆனி தன் அம்மாவிடம் வந்து சேர்ந்தார்.

தன்னுடைய நேரத்தை துப்பாக்கிச் சுடுதலில் செலவிட்டார். அவருடைய திறமையைக் கண்டு பலரும் பாராட்டினார்கள். அப்போது அமெரிக்காவில் துப்பாக்கிச் சுடும் விளையாட்டு மிகவும் பிரபலமாக இருந்தது. பறவைகளைச் சுடுதல், கண்ணாடிப் பந்துகளைச் சுடுதல், பொம்மைகளைக் குறி பார்த்துச் சுடுதல், மனிதனின் தலையில் ஒரு பொருளை வைத்துச் சுடுதல் என மிகவும் ஆபத்தான  போட்டிகள் நடந்து கொண்டிருந்தன. 

1881ம் ஆண்டு புறா சுடும் போட்டி ஒன்றில் ஆனி கலந்து கொண்டார். இந்தப் போட்டி வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையப் போவது அப்போது அவருக்குத் தெரியாது. ஃப்ராங்க் பட்லர்  என்ற பிரபல துப்பாக்கிச் சுடும் வீரர், 24 முறை சரியாகச் சுட்டார். ஒருமுறை தவறிவிட்டது. அடுத்து ஆனின் முறை. 25 முறையும் சரியாகச் சுட்டு, வெற்றி பெற்றார். ஃப்ராங்குக்கோ ஆச்சரியம்.
தன்னைவிட 10 வயது சிறிய பெண், எத்தனை லாகவமாக, எத்தனை அழகாக, எத்தனை அர்ப்பணிப்புடன் செய்திருக்கிறார் என்று வியந்தார். உடனே ஆனியை மனம் விட்டுப் பாராட்டினார். இருவருக்கும் கடிதங்கள் மூலம் நட்பு தொடர்ந்தது. அடுத்த ஆண்டே  திருமணம் செய்து கொண்டனர்.

ஃப்ராங்க் பங்கேற்கும் போட்டிகளுக்கு ஆனியும் செல்வார். ஒருமுறை ஃப்ராங்கின் நண்பருக்கு உடல் நலமில்லை. அந்த வாய்ப்பு ஆனிக்குக் கிடைத்தது. எடை மிக்க அந்தத் துப்பாக்கியை எளிதாகக் கையாண்டார் ஆனி. பார்வையாளர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தார்கள். அடுத்து வந்த போட்டிகளில் ஆனியும் ஃப்ராங்கும் சேர்ந்து கலந்து கொண்டனர். பட்லர்-ஓக்லே ஷோவுக்குப் புகழ் அதிகரித்தது.

ஒருமுறை அமெரிக்க பூர்வகுடி மக்களின் தலைவர் சிட்டிங் புல் சிறப்பு விருந்தினராகப் போட்டிக்கு வந்திருந்தார். ஃப்ராங்கின் வாயில் இருந்த சிகரெட்டைக் குறி பார்த்து ஆனி சுட்டதில் அசந்து போனார். ஆனியைத் தத்தெடுத்துக் கொள்வதாகக் கூறினார். 5 அடி உயரமே கொண்ட ஆனிக்கு  லிவீttறீமீ ஷிuக்ஷீமீ ஷிலீஷீt என்ற பட்டத்தையும் வழங்கினார்! வாழ்க்கை முழுவதும் ஆனிக்கு நல்ல நண்பராக இருந்தார் புல்.

1884 டிசம்பர்... கடுமையான மழை. அவர்கள் வேலை செய்த சர்க்கஸ் மூடப்பட்டது. ஆனியும் ஃப்ராங்கும் புதிய வேலை தேடும் முயற்சியில் இறங்கினர். வைல்ட் வெஸ்ட் ஷோவில் வேலை கிடைத்தது.  விரைவில் அந்த நிறுவனத்தின் ஸ்டாராக இருந்தவர் விலகிக்கொள்ள, ஆனிக்கு அந்த வாய்ப்பு வந்தது. கடினமாகப் பயிற்சி செய்து, தன்னை மேலும் மேலும் மெருகேற்றிக்கொண்டார் ஆனி. அதுவரை அசையாமல் இருக்கும் பொருட்களைக் குறிபார்த்து சுட்டுக்கொண்டிருந்த ஆனி, அசையக்கூடிய குதிரை மீது பொருட்களை வைத்துச் சுட ஆரம்பித்தார்.

அதேபோல தன் முதுகுக்குப் பின்புறம் உள்ள பொருளைத் திரும்பிப் பார்க்காமல் (எதிரில் கத்தியில் பிரதிபலித்த உருவத்தை வைத்து),  குறி வைத்துச் சுட ஆரம்பித்தார். இவ்விரு நிகழ்ச்சிகளும் ஆனியை புகழின் உச்சத்துக் கொண்டு சென்றன. மனைவியின் திறமையைப் புரிந்துகொண்ட ஃப்ராங்க், தன்னை விடுவித்துக்கொண்டு, ஆனிக்கு அனைத்து விதங்களிலும்
உதவினார்.

1887... லண்டனுக்குச் சென்றனர். அங்கே விக்டோரியா மகாராணியின் பொன்விழா கொண்டாட்டத்தில் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு கிடைத்தது. ஆனியின் திறமை கண்டு ராணி மகிழ்ந்து போனார். 6 மாதங்கள் லண்டனில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடந்தன. ஏறக்குறைய இரண்டரை லட்சம் பார்வையாளர்கள் மகிழ்ச்சியில் பரிசுகளை வாரி வழங்கினர்.
1889... பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளுக்கு 3 ஆண்டுகள் தொடர்ந்து பயணம் செய்து, நிகழ்ச்சி நடத்தினர். அப்போது ஒவ்வொரு நாட்டிலும் கண்ட மக்களின் ஏழ்மை அவர் மனதை வருத்தியது. ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் பொருளாதார உதவி செய்ய முடிவெடுத்தார் ஆனி.  அதற்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் ஈட்டியதை ஏழைகளின் நலனுக்கே அர்ப்பணித்தார்.
1894... தாமஸ் ஆல்வா எடிசன் ஆனியை அழைத்தார். அவருடைய கண்டுபிடிப்பான கைனடோஸ்கோப் என்ற திரைப்படக் கருவியை வைத்து, பறக்கும் நாணயத்தை ஆனி சுடுவதைப்
படமாக்கினார்.
1901... ரயில் பயணத்தின் போது ஒரு விபத்து நிகழ்ந்தது. உயிர் பிழைத்த ஆனியும் ஃப்ராங்கும் நிகழ்ச்சிகளில் இருந்து விலகிவிட முடிவெடுத்தனர். இருவரும் வெவ்வேறு வேலைகளைச் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தினார்கள்.
1903... ஆனியின் வாழ்க்கையில் ஒரு சூறாவளி. போதைப்பொருள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, ‘ஏனி ஓக்லே’ என்பவர் கைது செய்யப்பட்டார். சில நாட்களில் இந்தச் செய்தி, ‘போதைப்பொருள் குற்றத்தில் ஆனி ஓக்லே கைது செய்யப்பட்டார்’ என வேகமாகப் பரவியது. ஆனியால் இந்தப் பெயர் குழப்பத்தையும் செய்யாத தவறுக்குக் கிடைத்த அவப்பெயரையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு செய்தித்தாள் மீதும் வழக்கு தொடுத்தார். 6 வருடப் போராட்டத்தின் முடிவில் 55 செய்தித்தாள்கள் மீது வழக்கு நடந்து முடிந்தது. 8 லட்சம் டாலர்கள் அவருக்கு நிவாரணமாகக் கிடைத்தன.
மீண்டும் ஆனி துப்பாக்கிச் சுடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போதும் அவருக்கு விசிறிகள் பெருகினர். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வெடுத்துக்கொண்டார். அதன் பிறகு பெண்களுக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சி வகுப்புகளை ஆரம்பித்தார். இதற்காக எந்தவிதமான கட்டணத்தையும் அவர் பெற்றுக்கொள்ளவில்லை. சுமார் 2,000 பெண்களைத் துப்பாக்கிச் சுடும் வீராங்கனைகளாக்கியிருக்கிறார். 20 பெண்களை செவிலியராகப் படிக்க வைத்திருக்கிறார். கணவனை இழந்த பெண்களின் குடும்பங்களுக்கு நிதி அளித்து, காப்பாற்றியிருக்கிறார். ஏராளமான குழந்தைகளுக்குப் படிக்க வசதி செய்து கொடுத்திருக்கிறார். தன்னுடைய பிரபலத்தை வைத்து அறக்கட்டளைகள், மருத்துவமனைகளுக்காக நிதி திரட்டிக்
கொடுத்திருக்கிறார் ஆனி. 
1922... ஆனியும் ஃப்ராங்கும் கார் விபத்தில் சிக்கினர். மோசமாகப் பாதிக்கப்பட்டனர். அவர்களால் முழுமையாக நலம் பெறவே
முடியவில்லை.
1926 நவம்பர் 3... 66 வயதில் மரணத்தைச்
சந்தித்தார் ஆனி. 18 நாட்களில் அன்பு கணவரும் ஆனியிடமே சேர்ந்தார்.  ஆனியின் ஆரம்பகால வாழ்க்கை இருண்டிருந்தாலும், ஆயிரக்கணக்கான மக்களின்  வாழ்க்கையில் ஒளியேற்றியிருக்கிறார்!

ஆனி மொழிகள்

* உயர்வான லட்சியத்தைக் கொண்டு,
சரியாகக் குறி வைத்தால் எளிதில் வெற்றியைப் பறித்துவிடலாம். முதல் தடவையோ, இரண்டாவது தடவையோ, மூன்றாவது
தடவையோ அல்ல... ஆயிரக்கணக்கான தடவை பயிற்சி செய்தால் லட்சியத்தைச் சரியாக அடைந்துவிடலாம். முயற்சியும் பயிற்சியுமே வெற்றிக்கான படிகள்!
* ஒரு குழந்தையை எப்படிக் கையாள வேண்டும் என்பது இயற்கையாகவே பெண்களுக்குத் தெரியும். அதே போலத்தான் நான் துப்பாக்கியைக் கையாண்டேன்.
* சும்மா இருப்பதைப் போல கடினமான வேலை வேறு ஒன்றும் இல்லை.
*  14 நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்திருக்கிறேன். எவ்வளவோ சம்பாதித்து
இருக்கிறேன். நான் இறந்த பிறகு, நான் பிறந்த அமைதியான நிலத்தில் என்னைப் புதைக்கவே விரும்புகிறேன்.

அசையக்கூடிய குதிரை மீது பொருட்களை வைத்துச் சுட ஆரம்பித்தார் ஆனி. அது மட்டுமல்ல... முதுகுக்குப் பின்புறம் உள்ள பொருளைத் திரும்பிப் பார்க்காமலே சுட ஆரம்பித்தார்!

சஹானா