இன்னும் நிறைய நிறைய உழைக்கணும்!



‘முன் தினம் பார்த்தேன்...’
‘ஐயையையோ நெஞ்சு அலையுதடி’
இந்தப் பாடல்களுக்குப் பிறகு ஆளையே காணோம் பிரஷாந்தினியை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘அன்னக்கொடி’க்குப் பிறகு ‘பண்ணையாரும்  பத்மினி’யுமில் பாடி மறுபடி பிஸியாக ஆரம்பித்திருக்கிறார்!

‘‘என் பையன் ரித்விக் மூணாவது படிக்கிறான். அவன் ரொம்பச் சின்னவனா இருந்ததால நிறைய வாய்ப்புகளை கமிட் பண்ண முடியலை. அப்பப்ப ஒண்ணு, ரெண்டு பாட்டு பாடிட்டுதான் இருந்தேன். ‘எங்கேயும் காதல்’ல ‘லோலிட்டா’, ‘கண்டேன்’ல ‘உன்னைக் கண்டேனே...’ -  எல்லாம் நான் பாடினதுதான்... ஆனா, ‘வாரணம் ஆயிர’த்தையும், ‘ஆடுகள’த்தையும் தாண்டி, நிறைய பேருக்கு என் பாடல்கள் தெரியலை... பையன் இப்ப ஓரளவுக்குப் பெரிசாயிட்டான். மறுபடி பிஸியாகிட்டேன்...’’ - உற்சாகமாக ஆரம்பிக்கிறார் பிரஷாந்தினி... பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் இசை வாரிசு!

‘‘அப்பா ரெக்கார்டிங் போறதைப் பார்த்திருக்கேன். சும்மா வீட்ல ஏதாவது பாடிட்டிருப்பேன். டென்த் படிக்கிற போது, மியூசிக்கை ஏன் கேரியரா எடுத்துக்கக் கூடாதுனு தோணினது. அந்த ஐடியாவை கூட அப்பாகிட்ட டிஸ்கஸ் பண்ணலை. அப்பாவுக்கே தெரியாம, ஹாரிஸ் ஜெயராஜ் சாரை பார்த்துட்டு வந்தேன். வாய்ஸ் டெஸ்ட்டெல்லாம் முடிஞ்சு, ஒரு வாரம் கழிச்சு, ‘12பி’ படத்துல ‘புன்னகைப் பூவே’ பாட அழைப்பு வந்தது. அது முடிஞ்சதும் ‘வின்னர்’ படத்துல ‘கோழி கொக்கரக்க கோழி’ பாடினேன்.

அப்ப நான் ஸ்கூல் படிச்சிட்டிருந்ததால முழு நேரமும் பாட்டுக்கு ஒதுக்க முடியலை. படிப்பை முடிச்சு, கல்யாணமான பிறகுதான் மறுபடி பிஸியானேன். ஜி.வி.பிரகாஷ் இசையில ‘வெயில்’ படத்துல ‘இறைவனை உணர்கிற தருணமிது’ பாடினேன். என் குரலைப் பத்தி ஏற்கனவே தெரிஞ்சதால, மறுபடி ஹாரிஸ் ஜெயராஜ் சார் கூப்பிட்டு, ‘வாரணம் ஆயிரம்’ல ‘முன்தினம் பார்த்தேனே’ பாடச் சொன்னார். ஆடியோ ரிலீஸ் வரைக்கும் அது அந்தப் படத்துக்கான பாட்டுங்கிறது எனக்குத் தெரியாது.

அந்தப் பாட்டுதான் எனக்கு மிகப்பெரிய பிரேக் தந்தது. அதுக்கு முன்னாடி எத்தனையோ பாடல்கள் பாடியிருந்தாலும், பார்க்கிற எல்லாரும் ‘முன் தினம்தான் உங்க முதல் பாட்டா’னு கேட்கற அளவுக்கு அது என்னைப் பத்திப் பேச வச்சது. அடுத்து ‘ஆடுகளம்’ படத்துல எஸ்.பி.பி. சாரோட, ‘ஐயையையோ நெஞ்சு அலையுதடி...’ பாடற வாய்ப்பு... நாலாங்கிளாஸ் படிக்கிறப்ப, அவர் கூட ஒரு மேடையில ‘ஓ பட்டர்ஃபிளை...’ பாடியிருக்கேன். அதுக்குப் பிறகு ஒரு படத்துலயே அவர்கூட பாடுவேன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை. அப்பா இறக்கறதுக்குக் கொஞ்ச நாள் முன்னாடி பாடினேன். அதைக் கேட்டுட்டு அப்பாவுக்கு ரொம்ப திருப்தி. கடைசி காலத்துல அப்பாவை சந்தோஷப்படுத்தினதுல எனக்கும் திருப்தி...’’ - நெகிழ்ந்து பேசுகிறார் பிரஷாந்தினி.

‘‘மலேசியா வாசுதேவனோட பொண்ணுங்கிறதுல பிளஸ்சும் இருக்கு... மைனசும் இருக்கு. ‘அவரோட பொண்ணா’ங்கிற மரியாதை ரொம்பப் பெரிய விஷயம். அதே நேரம் அவரோட அனுபவத்தை வச்சு, அவர் அளவுக்கு என் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகிடுது. அதை நிறைவேத்தறது சாதாரண விஷயமில்லை. அதுக்கு நான் இன்னும் நிறைய நிறைய உழைக்கணும்...’’ - அடக்கமாகச் சொல்பவரின் புது அவதாரம் பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர்!

‘‘ரொம்ப நாளா ஒரு காஸ்பெல் ஆல்பம் பண்ணணும்னு ஆசை. ஒரு வருஷ முயற்சிக்குப் பிறகு ‘என்றும் மாறாதவர்’னு ஒரு ஆல்பத்துல நானே 5 பாடல்களை எழுதி, மியூசிக்கும் போட்டு பாடிருக்கேன்... இசையமைப்பாளரா என்னோட முதல் முயற்சி இது...’’ - ஆர்வமாகச் சொல்கிறவருக்கு அடுத்து படங்களுக்குப் பாடல் எழுதவும் இசையமைக்கவும் ஐடியா இருக்கிறது.

‘‘பாட வர்றதுக்கு முன்னாடியே எனக்கு நடிக்க வாய்ப்புகள் வந்ததா அம்மா, அப்பா சொல்லியிருக்காங்க. எனக்கும் நடிக்கிற ஐடியா இருந்ததில்லை. மியூசிக்கை தவிர எனக்கு வேற எதுவும் தெரியாது. அது தொடர்பான எந்த வாய்ப்பும் எனக்கு ஓ.கே...’’ என்கிறார்.
ஓ.கே... ஓ.கே..!