இந்த சந்தோஷம் எப்பவும் நிலைக்கணும்!



மியூசிக் சீசனில், பிரபல சபாக்களில் பிரதான நேரத்தில் கச்சேரி செய்கிற இளம் கர்நாடக சங்கீத இசைக் கலைஞராகவும்... மற்ற நேரங்களில் திரைப்படங்களில் பாடும் பிஸியான பின்னணிப் பாடகியாகவும்... வருடம் முழுக்க சைந்தவியின் கால்ஷீட் நிரம்பி வழிகிறது.

காதல் கணவர் ஜி.வி.பிரகாஷை கைப்பிடித்தது முதல், மனைவி என்கிற கூடுதல் பொறுப்பில் மேடம் இன்னும் பிஸி!
‘நிமிர்ந்து நில்’, ‘புலி வால்’, ‘பிறவி’, ‘என்னமோ நடக்குது’ என பின்னணிப் பாடல் பதிவுக்கான ரெக்கார்டிங் ஒரு பக்கமும், ‘சின்னஞ்சிறு கிளியே...‘வையும், ‘குறை ஒன்றும் இல்லை’யையும் கேட்கக் காத்திருக்கும் சபாக்கள் இன்னொரு பக்கமுமாக நின்று பேச நேரமின்றி ஓடிக் கொண்டிருக்கிற சைந்தவியிடம் ‘குங்குமம் தோழி’ வாசகியர் சந்திப்பு பற்றி சொன்னோம். அத்தனை வேலைகளுக்கும் அரைநாள் விடுப்பு கொடுத்துவிட்டு, தோழிகளை சந்திக்க சம்மதித்தார்.தி.நகரில் உள்ள அவரது வீட்டில், குங்குமம் தோழி வாசகிகளான கிருஷ்ணகுமாரி, மஞ்சுளா மற்றும் சவுமியா பாபு ஆகியோருடனான சைந்தவி யின் மனம் திறந்த உரையாடல் இதோ... கிருஷ்ணகுமாரி

* இசைக்கும், உங்களுக்குமான அந்த பந்தம் எப்போ, எப்படி ஆரம்பிச்சது?
சைந்தவி
‘‘பாரம்பரியமான தமிழ் பிராமணக் குடும்பத்துல பிறந்தவள். வெஸ்ட் மாம்பலத்துல அயோத்யா மண்டபத்துக்குப் பக்கத்துல வீடு. எப்போதும் ஏதாவது கச்சேரி நடக்கும். எதிர் வீட்டு மாமி, பக்கத்து வீட்டு மாமினு யாராவது பாடிண்டே இருப்பாங்க. வீட்டுக்குள்ளேயும் எல்லாரும் சங்கீத ரசனை உள்ளவங்க. அம்மாவுக்கு அந்தக் காலத்துப் பாட்டெல்லாம் மனப்பாடமா தெரியும். இப்படியொரு சூழல் எனக்குள்ளேயும் சங்கீத ஆர்வத்தைக் கொடுத்தது. 5 வயசுல பஜனைப் பாடல்களைக் கேட்டு நானும் பாட ஆரம்பிச்சேன். கோயில்கள்ல நான் பாடறது தெரிஞ்சு, நல்லா பாடறேன்னு சொல்லி, மைக் கொடுத்துப் பாடச் சொல்வாங்க. 10 வயசுலேருந்து முறைப்படி சங்கீதம் கத்துக்க ஆரம்பிச்சேன்...’’
மஞ்சுளா
* சங்கீதம்தான் எதிர்காலம்னு தீர்மானம்
பண்ணின அந்தத் தருணம் ஞாபகமிருக்கா?
சைந்தவி
‘‘நினைவு தெரிஞ்ச நாள்லேருந்து எனக்குள்ள சங்கீதம்தான் வியாபிச்சிருந்தது. ஸ்கூல் டேஸ்ல ஒரு கிளாஸ் விட்டு அடுத்த கிளாஸ் போகும் போது, ‘உன் லட்சியம் என்ன? என்னவா வரப்போறே‘ன்னு கேட்பாங்கல்ல... எல்லாரும் டாக்டர், இன்ஜினியர்னு சொல்வாங்க. நானோ ‘சிங்கர்’னு சொல்வேன். ‘அது ஹாபி... டெல் எ பிராப்பர் புரொஃபஷன்’னு சொல்வாங்க டீச்சர்ஸ். என்னைப் பொறுத்தவரை சங்கீதம் ஹாபியா தெரியலை. அதுதான் எல்லாம்கிற தெளிவு அப்பவே இருந்தது!’’
சவுமியா பாபு
*  சைந்தவிங்கிற பேர் நீங்க சங்கீதத்துக்குள்ள வந்தப்புறம் வச்சதா?
சைந்தவி
‘‘இல்லல்ல... ஒரிஜினல் பேரே அதுதான். எனக்கு 2 அண்ணா. என்னை விட 10 வயசும்,
9 வயசும் மூத்தவங்க. அவங்களுக்கு அப்புறம் பெரிய இடைவெளிக்குப் பிறகு பிறந்த ஒரே பொண்ணு நான். பிறந்ததும் ஸ்பெஷலான பேர் வைக்கணும்னு நிறைய புக்ஸை எல்லாம் தேடினாங்களாம். யாருக்குமே வைக்காத பேரா இருக்கணுங்கிற ஆசையில வர்ணம் புத்தகத்துல தேடினப்ப சைந்தவிங்கிற பேர் கிடைச்சதாம். கரகரப்ரியாவோட ஜன்ய ராகத்தோட பேர் அது!’’
கிருஷ்ணகுமாரி
* கர்நாடக சங்கீதப் பாடகியா அறியப்பட்ட நீங்க, சினிமாவுக்குள்ள வந்தது எப்படி?
சைந்தவி
‘‘ஸ்கூல் படிக்கிறபோதே நிறைய மேடைகள்ல லைட் மியூசிக் பாடியிருக்கேன்.  ஒரு முறை தேவா சாருக்கு டிராக் பாடப் போயிருந்தப்ப, என் வாய்ஸ் பிடிச்சுப் போய், நீயே மெயின் பாடும்மானு சொன்னார் தேவா. ‘உயிரெழுத்து’ங்கிற படத்துல தேவா சார் மியூசிக்ல நான் பாடினதுதான் சினிமாவுல என்னோட முதல் பாட்டு. அந்தப் படம் ரிலீசாகலை. ‘அந்நியன்’ வந்த பிறகுதான் என் பேர் சினிமா வட்டாரத்துல தெரிய ஆரம்பிச்சது!’’
சவுமியா பாபு
* பாடின முதல் படமே ரிலீசாகலையேங்கிற வருத்தம்?
சைந்தவி
‘‘முதல்ல கொஞ்சம் வருத்தமா இருந்தது. அப்புறம் எஸ்.பி.பி.சாருக்கும், சித்ராம்மாவுக்குமே முதல் படம்
ரிலீசாகலைனு தெரிஞ்சப்ப, சமாதானமாயிட்டேன்...’’
கிருஷ்ணகுமாரி
* கர்நாடக சங்கீதம்... சினிமா பாடல்கள்... ரெண்டுல உங்களுக்கு ரொம்பப் பிடிச்சது எது?
சைந்தவி
‘‘ரெண்டுமே பிடிச்சிருக்கு. கர்நாடக சங்கீதக் கலைஞரா என்னோட கேரியரை ஆரம்பிச்சாலும், சினிமாவுல பாடின பிறகு எனக்குக் கிடைச்ச அங்கீகாரம் ரொம்பப் பெரிசு. நான் பின்னணி பாடறதைப் பார்த்துட்டு, என் கர்நாடக சங்கீதக் கச்சேரிக்கு கூட்டம் அதிகம் வருதுங்கிறதையும் மறுக்கறதுக்கில்லை. கர்நாடக சங்கீதத்துல அடிப்படை ஞானம் இருக்கிறதால, என்னால எப்படிப்பட்ட பாடல்களையும் பாட முடியும்...’’
மஞ்சுளா
* கர்நாடிக் பாடறவங்க, சினிமாவுல பாட ஆரம்பிச்சா, குரல் போயிடுங்கிறது உண்மையா?
சைந்தவி
‘‘குரல் போயிடுங்கிறதெல்லாம் சும்மா... ஆனா, ரொம்ப ஈஸியா தொண்டை கட்டிக்கும். அவ்வளவுதான்!
 எம்.எஸ். அம்மாவெல்லாம் கர்நாடிக், சினிமானு ரெண்டு
லயும் பாடலையா என்ன? என் குரு யாரும், என்னை சினிமாவுல பாடாதேனு சொன்னதில்லை. இன்னும் சொல்லப் போனா, கர்நாடிக்ல மட்டுமே என் குரலைக் கேட்டுட்டு, திடீர்னு சினிமா பாட்டையும் கேட்ட எத்தனையோ பேர், ‘பிரமாதமா பாடியிருக்கியே’னு பாராட்டியிருக்காங்க. கர்நாடிக் பாடும் போது, ஒரே ஸ்ருதியில பிராக்டீஸ் பண்ணி, பாடுவோம். சினிமாவுக்கு பாடும் போது என்ன பாட்டு கொடுக்கிறாங்களோ அதுக்கேத்தபடிதான் பாடியாகணும். அப்படிப் பாடும் போது, குரலுக்கு ஸ்ட்ரெயின் இருக்கும்.
டிசம்பர் சீசன்ல கூடிய வரை கர்நாடிக் மட்டுமே பாடறது, சினிமாவை குறைச்சுக்கறதுனு இருப்பேன். இல்லைன்னா என்னோட கர்நாடக சங்கீதத்துக்கு துரோகம் பண்ற மாதிரி ஆயிடும். மியூசிக் சீசன் முழுக்க வரிசையா கச்சேரிகள் பண்ணினதுல, குரல், அதுலயே ஊறியிருக்கும். உடனே சினிமாவுக்கு பாடற போதும் குரல் ஸ்ட்ரெயின் ஆகும்.
கர்நாடக சங்கீதமோ, சினிமாவுக்கான பின்னணியோ, ரெண்டுமே கஷ்டம்தான். ரெண்டுக்கும் நிறைய உழைப்பு அவசியம்...’’
சவுமியா பாபு
* சைந்தவிங்கிற பாடகி, இன்னிக்கு இந்தளவுக்குப் பிரபலமா இருக்க முக்கியமான காரணம் யார்?
சைந்தவி
‘‘முதல் நன்றி என் அம்மா, அப்பாவுக்குத்தான். என்னோட ஃப்ரெண்ட்ஸ், கஸின்ஸ் வீட்ல எல்லாம் எக்சாம் டைம்னா, டி.வி.யை கட் பண்ணிடுவாங்க. அவ்ளோ
ஸ்ட்ரிக்ட். ‘இவ ரொம்ப ப்ரைட் ஸ்டூடன்ட். 70 பர்சென்ட் வாங்கறா... பாட்டு, பாட்டுனு ஓடாம இருந்தா, 90 பர்சென்ட் வாங்குவா’னு எங்க டீச்சர் ஒரு வாட்டி எங்கம்மாகிட்ட சொன்னாங்க. எங்கம்மாவுக்குக் கோபம் வந்துடுச்சு. ‘70 பர்சென்ட் வாங்கி பாஸ் பண்ணிட்டாளே... அப்புறம் என்ன?’னு கேட்டாங்க. அம்மா, அப்பாவோட என்கரேஜ்மென்ட் இல்லைன்னா நான் இந்தளவுக்கு வந்திருப்பேனாங்கிறது சந்தேகம்...’’
கிருஷ்ணகுமாரி
* உங்களோட பாடல்களைப் பத்தின விமர்சனங்களை எப்படி எடுத்துப்பீங்க?
சைந்தவி
‘‘ நான் ரொம்பச் சின்னவளா இருந்தப்ப, என் பாட்டை அம்மா குறை சொன்னாகூட, உடனே கோபப்படுவேன். அப்பல்லாம் அம்மா என்கிட்ட, ‘வேணுங்கிறவாதான் அழ அழ விமர்சனம் பண்ணுவா. உன்னைப் பிடிக்காதவாதான் சிரிக்க சிரிக்கச் சொல்லுவா’னு சொல்வாங்க. அது என் மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு. அதுலேருந்து ஆக்கப்பூர்வமான விமர்சனங்களைப் பொறுமையா கேட்டுப்பேன். குறைகள் இருந்தா சரி செய்துக்க முயற்சி பண்ணுவேன். மத்தபடி வேணும்னே ஏதோ சொல்லணும்னு வர்ற விமர்சனங்கள் என்னைப் பெரிசா பாதிக்காது. அதை மனசுல போட்டுக்கிட்டா, அதுவே நம்ம வளர்ச்சிக்கு ஒரு தடையாயிடும். கூடிய வரைக்கும் குறைகள் சொல்ல முடியாதபடி பாடணும்னு நினைப்பேன்...’’
மஞ்சுளா
* உங்க கணவர் ஜி.வி.பிரகாஷ், உங்களோட கர்நாடிக் கச்சேரிகளுக்கு வருவாரா? என்ன சொல்வார்? உங்க கச்சேரிகளைப் பத்தி அவர்கிட்ட டிஸ்கஸ் பண்ணுவீங்களா?
சைந்தவி
‘‘இதுவரைக்கும் வந்ததே இல்லை. மியூசிக், இப்ப நடிப்புனு அவர் ரொம்ப பிஸி. நாள் முழுக்க மியூசிக் சூழ இருக்கார். வீட்டுக்கு வந்ததும் மறுபடி அதைப் பத்தி பேச வேண்டாம்னு நினைப்பேன். மத்தபடி கச்சேரிக்கு போறதுக்கு முன்னாடி அவர்கிட்ட சொல்லிட்டுப் போவேன். கச்சேரி முடிஞ்சதும் அவர் போன் பண்ணி, ‘எப்படிப் பாடினே’னு கேட்பார்...’’
சவுமியா பாபு
* கச்சேரியில ஒரு பாட்டை முதல் முறையா பாடறதுக்கு முன்னாடி, எத்தனை முறை பிராக்டீஸ் பண்ணுவீங்க?
சைந்தவி
‘‘அதை மேடை ஏத்தலாங்கிற அளவுக்கு எனக்குள்ள
நம்பிக்கை வர்ற வரைக்கும் பிராக்டீஸ் பண்ணுவேன். இது முதல்முறை மேடை ஏத்தற பாடல்களுக்கு மட்டுமில்லை... ஒவ்வொரு வாட்டி கச்சேரிக்கு முன்னாடியும் பிராக்டீஸ் தொடரும். போன வாட்டி பாடினதைவிட, இந்த முறை இன்னும் பெட்டரா பாடலாங்கிற எண்ணம்தான் காரணம்!’’
கிருஷ்ணகுமாரி
* உங்க கணவரோட மியூசிக்ல பாடின அனுபவம்...? நீங்களும் அவரும் சேர்ந்து பாடணுங்கிறது யார் விருப்பம்?
சைந்தவி
‘‘சேர்ந்து ஒர்க் பண்றதில்லைங்கிற முடிவுலதான் ரெண்டு பேரும் இருந்தோம். எல்லா பாடல்களுமே யதேச்சையா அமைஞ்சதுதான். ‘மதராசப்பட்டினத்’துல டைரக்டர் விஜய், ‘நாங்க சேர்ந்து பாடினாதான் சரியா இருக்கும்’னு ஆரம்பிச்சு வச்சார். ‘ஆருயிரே...’ பாடினோம். அது ‘தெய்வத் திருமகள்’, ‘உதயம்’, ‘தலைவா’னு தொடர்ந்தது. மத்தபடி அவருக்கு என்னைப் பாட வைக்கணும்கிற நோக்கமோ, எனக்கு அவர் மியூசிக்ல பாடணுங்கிற திட்டமோ கிடையாது!’’
மஞ்சுளா
* மற்ற பாடகிகளுக்கு அவர் வாய்ப்பு கொடுக்கும் போது, அந்தப் பாட்டை நாமளே பாடியிருக்கலாமேனு தோணுமா? பொறாமையா இருக்குமா?
சைந்தவி
‘‘நிச்சயமா இருக்காது. அவரோட தொழில் ரீதியான விஷயங்கள்ல நான் தலையிட மாட்டேன். அதே நேரம், யாராவது வந்து டெமோ சி.டி. கொடுத்துட்டுப் போனா, அதை அவருக்கு அனுப்பிக் கேட்க வச்சு, குரல் நல்லாருந்தா வாய்ப்பு கொடுக்கச் சொல்வேன்...’’
சவுமியா பாபு
* மறக்கவே முடியாத பாராட்டு..?
சைந்தவி
‘‘நிறைய இருக்கு... காலேஜ் படிக்கிறப்ப எம்.எஸ்.அம்மாவோட பாடல்களை வச்சு ஒரு ஷோ பண்ணினாங்க. அதுல பாட அரைமணி நேர ஸ்லாட் எனக்குக் கிடைச்சது. நான் பாடி முடிச்சிட்டுப் போயிட்டேன். ஒரு கிறிஸ்டியன் புரொஃபஸர், என்னைத் தேடி வந்தார். ‘எனக்கு மியூசிக்னா என்னன்னே தெரியாதும்மா... ஆனாலும் உன் பாட்டு என்னை என்னவோ பண்ணிடுச்சு’னு சொல்லி, எம்.எஸ்.அம்மாவோட ஓவியத்தைப் பரிசா கொடுத்துட்டுப் போனார்...
பாரதியார் இல்லத்துல வருஷா வருஷம் எல்லா கலைஞர்களும் பாடுவோம். ஒரு வருஷம் ‘ஆசை முகம் மறந்து போச்சே...’ பாடினேன். முடிச்சதும் ஒரு வயசானவர் என் கால்ல விழுந்துட்டார். எனக்கு தர்மசங்கடமா போச்சு. ‘என்ன மாமா... என் கால்ல போய் விழுந்துண்டு’னு கேட்டு, கண் கலங்க ஆரம்பிச்சிட்டேன். ‘இது உன் வயசுக்கான மரியாதை இல்லம்மா... உன் பாட்டுக்கு’னு சொன்னப்ப நெகிழ்ந்து போனேன்.
அதே பாரதியார் இல்லத்துல அடுத்த வருஷம் ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடினேன். பாடும் போது கண்ணை மூடிண்டு பாடறது என் வழக்கம். என்னை மறந்து நான் பாடிண்டிருந்தேன்... எல்லா பக்க வாத்தியங்களையும் வாசிக்கிறதை நிறுத்திட்டாங்க. பாடி முடிச்சு, கண்ணைத் திறந்து பார்க்கறப்ப
என்னைச் சுத்தியிருந்த எல்லார் கண்லயும் கண்ணீர். ஒரு வயசான, ஏழைத் தாத்தா என்கிட்ட ஓடி வந்தார். ‘மூணு நாளா யாருமே சின்னஞ்சிறு கிளியே பாடலையேனு ஏக்கமா இருந்தது. அந்தக் குறையை நீ போக்கிட்டே...’னு எங்கேருந்தோ தேடி எடுத்த கசங்கின 100 ரூபாய் நோட்டை கொடுத்தார். வேண்டாம்னு சொன்னா அவரை அவமதிக்கிற மாதிரி ஆயிடுமோனு வாங்கிண்டேன். அந்த ரூபாய் நோட்டை இப்பவும் பொக்கிஷம் மாதிரி பத்திரமா வச்சிருக்கேன்... இப்படி என்னை உருக வச்ச, நெகிழ வச்ச பாராட்டுகள் நிறைய இருக்கு...’’
கிருஷ்ணகுமாரி
* மியூசிக் தவிர மற்ற ஆர்வங்கள்..?
சைந்தவி
‘‘நிறைய படிப்பேன். தமிழ், இங்கிலீஷ் ரெண்டுலயும் நாவல்கள் படிப்பேன். எங்கே டிராவல் பண்ணினாலும் என்கூட புக்ஸ் இருக்கும். ரெக்கார்டிங் போனாகூட புத்தகங்களோடதான் போவேன்...’’
மஞ்சுளா
சமைக்கிறதுண்டா சைந்தவி? உங்க சமையல்ல ஜி.வி.யோட ஃபேவரைட்?
சைந்தவி
‘‘நல்லா சமைப்பேன். ரொம்ப சின்ன வயசுலயே சமைக்க ஆரம்பிச்சிட்டேன். எங்க வீட்டு கிச்சன் மேடை கூட எனக்கு எட்டாதப்பவே, அரிசி டிரம்மை இழுத்துப் போட்டு, அது மேல ஏறி நின்னு தோசை வார்த்த நாள் இப்பவும் ஞாபகமிருக்கு. அப்புறம் நிறைய குக்கரி கிளாஸெல்லாம் போய் கத்துக்கிட்டேன். புதுப்புது ரெசிபி நிறைய ட்ரை பண்ணுவேன். நான் என்ன பண்ணிக் கொடுத்தாலும் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். குறிப்பா சொல்லணும்னா என்னோட
புளியோதரை!’’
சவுமியா பாபு
* கல்யாணத்துக்குப் பிறகான வாழ்க்கை
எப்படியிருக்கு? மாசாமாசம் கிஃப்ட் கொடுத்து
அசத்திட்டிருக்கீங்களாமே..?
சைந்தவி
‘‘கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்ததோ, அதே மாதிரிதான் இருக்கு. பெரிய வித்தியாசங்கள் தெரியலை. அப்ப இருந்தது போலவே, அவர் இப்பவும் பிஸி. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பயங்கரமா மிஸ் பண்றோம். ஆனா, என்ன பண்றது? அவரோட வேலையோட இயல்பு எனக்குப் புரியும். வேலையில இருக்கிறப்ப அவரை எக்காரணம் கொண்டும் தொந்தரவு பண்ண மாட்டேன். ஏதாவது விஷயமிருந்தா, எஸ்.எம்.எஸ் பண்ணுவேன். ஃப்ரீயா இருந்தா அவர்கிட்டருந்து நிச்சயம் பதிலோ, ஃபோனோ வரும்.
இப்ப ஹீரோவாயிட்டதால இன்னும் பிஸி.
அதனால காலையில அவர் வீட்லருந்து கிளம்பறதுக்கு முன்னாடி நான் எந்த வேலையும் வச்சுக்கிறதில்லை. அதே மாதிரி அவர் வீட்டுக்கு வர்ற நேரத்துக்கு முன்னாடியே நான் என் வேலைகளை முடிச்சிட்டு வீட்ல இருக்கப் பார்ப்பேன்.
என் வாழ்க்கையில ரொம்ப ஸ்பெஷலான அவருக்கு, மாசாமாசம் எங்க கல்யாண தேதியன்னிக்கு ஏதாவது கிஃப்ட் கொடுக்கலாம்னு யோசிச்சேன். முதல்ல சில மாசங்களுக்கு ரொம்பக் கஷ்டப்பட்டு யோசிச்சு, பிளான் பண்ணி, தேடிப் பிடிச்சு வாங்கிக் கொடுத்துண்டிருந்தேன். இப்ப அவரே, இதெல்லாம் வாங்கிக் கொடுத்துடுனு லிஸ்ட் கொடுத்துடறார்!’’
கிருஷ்ணகுமாரி
* சினிமா, கச்சேரி, பொறுப்பான மனைவினு எப்படி எல்லா வேலைகளையும் மேனேஜ் பண்றீங்க?
சைந்தவி
‘‘டைம் மேனேஜ்மென்ட் தெரிஞ்சா எத்தனை வேலைகளை வேணாலும் சமாளிக்கலாம்.
எங்கம்மா வேலைக்குப் போயிண்டிருந்தாங்க. நான் படிக்கிறப்ப, காலையில எழுந்து சமையல் உள்பட எல்லா வேலைகளையும் முடிச்சுட்டு, வேலைக்குக் கிளம்பறதை நான் பார்த்திருக்கேன். அப்புறம் நான் மியூசிக்ல பிசியான பிறகுதான் அவங்க வி.ஆர்.எஸ். வாங்கினாங்க.
காலையில எழுந்ததும் மாமனார் வீட்ல தினம் பூஜை பண்ணுவேன். அப்புறம் மாமனாருக்கும் ஹஸ்பெண்டுக்கும் டிஃபன் ரெடி பண்ணணும். அப்புறம்  லஞ்ச் ரெடி பண்ண வேண்டியிருக்கும். இதுக்கிடையில என்னோட பிராக்டீஸ், ரெக்கார்டிங்னு எல்லாத்துக்குமான நேரத்தை மேனேஜ் பண்ணிடுவேன்.  பிராக்டீஸ் பண்றதுக்காக தனியா டைம் ஒதுக்காம, என் வேலைகளைப் பார்த்துண்டே பாடறதோ, பாட்டு கேட்கறதோ நடக்கும். மனசிருந்தா எல்லாம் சாத்தியம்தான்...’’
மஞ்சுளா
* சங்கீதத்துல உங்க திறமைகளை எப்படி இம்ப்ரூவ் பண்ணிக்கிறீங்க?
சைந்தவி
‘‘சங்கீதம்கிறது ஒரு கடல். அதுல கத்துக்கறதுக்கு நிறைய இருக்கு. இன்னிக்கு ஒரு கச்சேரியில பாடிட்டு வந்ததும், மனசுக்கு அவ்ளோ திருப்தியா இருக்கும். நாளைக்கே வேற ஒரு கச்சேரியில இன்னொரு பாடகர் பாடறதைக் கேட்கறப்ப, நாம கத்துக்க வேண்டியது இன்னும் இருக்கேனு தோணும். அதனால இப்பவும் தினம் தினம் ஏதோ கத்துக்கறேன்.
சசிகிரண்கிட்ட மியூசிக் கிளாஸ் போறேன். மத்தவங்க பாடறதை நிறைய கேட்கறேன்...’’
சவுமியா பாபு
* வேற ஏதாவது திட்டங்கள்... ஆசைகள்..?
சைந்தவி
‘‘கச்சேரிகள், ரெக்கார்டிங்ஸ்னு ரெண்டுலயும் நிறைவா, பிஸியா இருக்கேன். தீமேடிக் பிரசன்ட்டேஷன்ஸ் பண்றதுல ஆர்வமா இருக்கேன். அந்த வகையில இந்த வருஷம் ‘ராமன் எத்தனை ராமனடி’ பாடப் போறேன். நிறைய பாடணும்... பாடிண்டே இருக்கணும்... இந்த சந்தோஷம்
எப்பவும் நிலைக்கணும். அவ்வளவுதான்!’’
டைம் மேனேஜ்மென்ட் தெரிஞ்சா எத்தனை வேலைகளை வேணாலும் சமாளிக்கலாம்!
எஸ்.பி.பி. சாருக்கும், சித்ராம்மாவுக்குமே முதல் படம் ரிலீசாகலைனு தெரிஞ்சப்ப, நானும் சமாதானமாயிட்டேன்...

பாடி முடிச்சு, கண்ணைத்
திறந்து பார்க்கறப்ப,
என்னைச் சுத்தியிருந்த
எல்லார் கண்லயும் கண்ணீர்...
கல்யாணத்துக்கு
முன்னாடி வாழ்க்கை
எப்படி இருந்ததோ
இப்பவும்
அதே மாதிரிதான்
இருக்கு!
ஸ்பெஷல் படம்: செல்வகுமார்

 ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.கோபால்