பேட்ச் ஒர்க் பிரமாதம்!



சேலையோ, ஜாக்கெட்டோ, சல்வாரோ... எந்த உடையானாலும், சின்னதாக ஏதேனும் வேலைப்பாடு செய்யப்பட்டதாக இருப்பதையே இன்றைய பெண்கள் விரும்பு கிறார்கள். அதிலும் பிளெயின் சேலை அல்லது ஜாக்கெட்டில் விருப்பமான டிசைனைப் பதியச் செய்கிற பேட்ச் ஒர்க்குக்கு இன்று எக்கச்சக்க மவுசு. பேட்ச் ஒர்க் செய்யப்பட்ட பிறகு அந்த உடைகளின் மதிப்பே வேறு. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அம்பிகா, துணிகளில் பேட்ச் ஒர்க் செய்து கொடுப்பதில் மட்டுமின்றி, பேட்ச்சுகள் தயார் செய்வதிலும் நிபுணி!


‘‘பத்தாவது முடிச்சிட்டு, பியூட்டீஷியன் கோர்ஸ் பண்ணினேன். பேட்ச் ஒர்க் செய்த உடைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது தெரிஞ்சு நானாவே அதைக் கத்துக்கிட்டேன். கடைகள்ல பேட்ச் ஒர்க் செய்த சேலைகளும், சல்வாரும் கிடைக்குது. ஆனா, அது நம்ம விருப்பத்துக்கேத்த டிசைன்லயோ, கலர்லயோ கிடைக்கும்னு சொல்ல முடியாது. பேட்ச் ஒர்க் செய்யறவங்கக்கிட்ட கொடுத்துப் பண்ணினா, நமக்குத் தேவையான டிசைன்ல,  பட்ஜெட்ல செய்யலாம். பட்டு, ஜார்ஜெட், சிந்தெடிக், நெட், கிரேப் சில்க்னு எல்லா மெட்டீரியல்லயும் இன்னிக்கு பேட்ச் ஒர்க் பண்ண முடியும்’’ என்கிற அம்பிகா, பேட்ச் ஒர்க் செய்யக் கற்றுக்கொள்கிற பெண்கள், வேலைக்குச் செல்பவர்களைவிட அதிகம் சம்பாதிக்கலாம் என நம்பிக்கை தருகிறார்.

‘‘இந்த வேலை செய்ய ஸ்பெஷல் கட்டில் அவசியம். சேலைக்குப் போட பெரிய அளவுலயும், சல்வார், ஜாக்கெட்டுக்கு போட சின்ன அளவுலயும் வேணும். சின்னது 2,500 ரூபாய்க்கும், பெரிசு
5 ஆயிரம் ரூபாய்க்கும் கிடைக்கும். காடா துணி, ஊசி, எம்பிராய்டரி செய்யற ஒயர் திரெட், ஸ்டோன், செயின் ஸ்டோன், மணிகள், சின்னக் குழல் மாதிரியான டிக்லி, ஃபேப்ரிக் கம்... இதுக்கெல்லாம் 500 ரூபாய் முதலீடு தேவை. 500 ரூபாய்க்கு வாங்கற பொருட்களை வச்சு 3 ஜாக்கெட்டுகளுக்கு பேட்ச் ஒர்க் பண்ணலாம். ஜாக்கெட் வேலையை ஒரே நாள்லயும் சல்வாரை 2 நாள்லயும், சேலையை 3 நாள்லயும் முடிக்கலாம். சிம்பிள் டிசைனா இருந்தா 1,000 ரூபாயும், ஆடம்பர டிசைனுக்கு 6 ஆயிரம் வரைக்கும் பணம் வாங்கலாம்.

முழு பேட்ச் ஒர்க்கும் செய்து கொடுக்கற அளவுக்கு நேரமோ, பொறுமையோ இல்லைங்கிறவங்க, வெறும் பேட்ச்சுகளை மட்டும் ரெடி பண்ணிக் கொடுத்தாலே பெரிய லாபம் பார்க்கலாம். அளவைப் பொறுத்து ஒரு நாளைக்கு 50 முதல் 100 பேட்ச் வரை பண்ணலாம். பேட்ச்சுகளோட டிசைனை பொறுத்து 50, 100 முதல் 500 ரூபாய் வரைக்கும் கூட விற்கலாம். இந்த ரெண்டு வேலைகள்லயுமே 75 சதவிகித லாபம் நிச்சயம்’’ என்கிற அம்பிகாவிடம், 5 மாடல் பேட்ச்சுகளை 3 நாட்களில் 1,000 ரூபாய் கட்டணத்திலும், சேலை, ஜாக்கெட்,
சல்வாரில் பேட்ச் வைத்துத் தைப்பதை  2 நாட்களில் 1,000 ரூபாய் கட்டணத்திலும் கற்றுக் கொள்ளலாம். (தொடர்பு கொள்ள: 81483 64035

சிம்பிள் டிசைனா
இருந்தா 1,000 ரூபாயும்
ஆடம்பர டிசைனுக்கு
6 ஆயிரம் வரைக்கும்
வருமானம்...

ஜம் ஜம் சமிக்கி வேலை!

வேலைக்குச் செல்வதற்கும் சரி, விசேஷங்களுக்கு அணியவும் சரி... இன்றைய பெண்களின் சாய்ஸ் சமிக்கி வேலைப்பாடுகள் செய்த சேலைகள். இவற்றிலேயே தினசரி உபயோகத்துக்கு சிம்பிளாகவும், விசேஷங்களுக்கு அணிய ஆடம்பரமாகவும் எப்படி வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சமிக்கி வேலைப்பாடு செய்த உடைகள் பார்ப்பதற்கு எத்தனை அழகோ, விலையும் அத்தனை அதிகம். ‘வேலை அதிகம், நுணுக்கமா செய்யணும்...’ எனக் கடைக்காரர்கள் அதற்கு பல காரணங்களையும் அடுக்குவார்கள்.

‘‘அதெல்லாம் அந்தக் காலம். இப்ப சமிக்கி வேலை செய்யறது ரொம்ப சிம்பிள்’’ என்கிறார் கல்பனா. சமிக்கி வேலைப்பாடு செய்யப்பட்ட சேலை மற்றும் சல்வாருக்கான பிரத்யேக கடையே வைத்திருக்கிற இவர், விருப்பமுள்ளவர்களுக்கு அதை சுலபமான வழிகளில் கற்றுத் தரவும் தயாராக இருக்கிறார். ‘‘சேலை வாங்க வர்றவங்கள்ல பலரும் சமிக்கி வேலை செய்ததை தேடறதும், அதே நேரம் விலை கம்மியா இருக்கணும்னு நினைக்கிறதையும் பார்க்க முடிஞ்சது. பொதுவா பெரிய பெரிய துணிக்கடைகள் கூட, சமிக்கி வேலையை வெளியே கொடுத்துதான் செய்து வாங்கறாங்க. அந்தக் கூலியெல்லாம் சேர்த்து வைக்கிறப்ப விலை அதிகமாகிறதைத் தவிர்க்க முடியாது. இதைப் பத்தி யோசிச்சிட்டிருந்தப்பதான்,

ரெடிமேடா கிடைக்கிற சமிக்கியை அப்படியே சேலை, சுடிதார்ல வச்சுத் தைக்கிறது பத்தித் தெரிய வந்தது. அதைக் கத்துக்கிட்டு, பிசினஸா செய்யறேன். முன்னல்லாம் ஒவ்வொரு சமிக்கியா ஒட்டி, தைக்கிறதுனு இது பெரிய வேலை. இப்ப ரெடிமேடா கிடைக்கிற ஸ்டோன்ஸ், சமிக்கி, லேஸ்களை தையலே இல்லாம, உடைகள்ல பொருத்தற சுலபமான முறை இருக்கு. இது தவிர கட் ஒர்க் செய்யறது, சீக்வன்ஸ் செய்யறதுனு பல வேலை களையும் செய்யலாம். டெய்லரிங் தெரியணும்னு அவசிய மில்லை. தையல் மெஷினும் வேண்டாம். லேஸ் ரோல், மணிகள், அயர்னிங் ஸ்டோன்ஸ், கோல்டன் திரெட், டிஷ்யூ ஒர்க் செய்யற நூல், ஊசி, அயர்ன் பாக்ஸ்னு இந்தத் தொழிலுக்கான தேவைகளுக்கெல்லாம் சேர்த்து

2 ஆயிரம் முதலீடு போட்டா போதும். சிம்பிளான டிசைனுக்கு 100 ரூபாய்தான் நமக்கு  அடக்கமாகும். அதுக்கு 350 ரூபாய் வரைக்கும் வாங்கலாம். மெஷின்ல தச்சதைவிட சிறப்பா, அழகா இருக்கும். ரெண்டு மடங்கு லாபம் பார்க்கலாம்’’ என்கிற கல்பனாவிடம்,  2 நாள் பயிற்சியில் 500 ரூபாய் கட்டணத்தில், சமிக்கி வேலைப்பாடு களைக் கற்றுக் கொள்ளலாம்.(97101 12751)

‘‘டெய்லரிங் தெரியணும்னுஅவசியமில்லை. தையல் மெஷினும் வேண்டாம்!’’

துணிகளில் ஸ்கிரீன் பிரின்டிங்!

காகிதங்களில், விசிட்டிங் கார்டுகளில், போஸ்டர்களில், அழைப்பிதழ்களில் செய்கிற ஸ்கிரீன் பிரின்டிங்  பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அதையே துணிகளிலும் செய்ய முடியும் என்பது தெரியுமா? சாதாரண காட்டன் சேலையைக் கூட காஸ்ட்லியான டிசைனர் சேலையாக மாற்றும் அளவுக்கு சூப்பராக்க முடியும் ஸ்கிரீன் பிரின்டிங்கில். ஸ்கிரீன் பிரின்டிங் முறையில் சேலை,
சல்வாரில் மட்டுமின்றி, தலையணை உறை, படுக்கை விரிப்பு, திரைச்சீலை என எல்லாவற்றையும் அழகுப்படுத்துகிறார் சென்னையைச் சேர்ந்த மகாலட்சுமி.

‘‘அதிக உடலுழைப்பும் முதலீடும் தேவைப்படாத ஒரு தொழில் இது. பேப்பர், சணல், காட்டன், சிந்தெடிக்னு எல்லா மெட்டீரியல்லயும் ஸ்கிரீன் பிரின்டிங்ல டிசைன் பண்ணலாம். பிளெ
யின் காட்டன் சேலையோ,  சல்வார் மெட்டீரியலோ வாங்கி, அதுல நமக்கு விருப்பமான டிசைன்களை பிரின்ட் பண்ணலாம். முன்னல்லாம் இந்தத் தொழிலுக்கான ஸ்கிரீன்களை நாமளே ரெடி பண்ண வேண்டியிருக்கும். இப்ப எல்லாமே கடைகள்ல கிடைக்குது. ஸ்கிரீன் பிரின்டிங் செய்யறதுக்கான சின்ன டேபிள் அல்லது 4க்கு 4 அளவுள்ள மனை தேவை. தவிர பைண்டர்,

ஃபிக்சர், கலர், கியூஸ், டிசைன்ஸ், துணினு 5 ஆயிரம் முதலீடு போதும். மனையில எத்தனை லேயர் கோணி, மல் துணி வைக்கணும்னு ஒரு கணக்கு இருக்கு. மனையைக்கூட நாமளே சுலபமா ரெடி பண்ணலாம். புடவை, சல்வாருக்கு செய்ய முடியாதவங்க, வெறும் தலையணை உறை, பெட்ஷீட், திரைச்சீலைக்கு மட்டுமே பண்ணிக் கொடுத்தாலே நிறைய பிசினஸ் கிடைக்கும். செலவெல்லாம் போக 50 சதவிகித லாபம் பார்க்கலாம்’’ என்கிற மகாலட்சுமியிடம் ஒரே நாள்  பயிற்சியில் 500 ரூபாய் கட்டணத்தில் துணிகளில் ஸ்கிரீன் பிரின்டிங் செய்யக் கற்றுக் கொள்ளலாம்.(ணூ99400 54517)

‘‘தலையணை உறை, பெட்ஷீட், திரைச் சீலைக்குப் பண்ணிக் கொடுத்தாலே அதிக லாபம் பார்க்கலாம்...’’

 ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்