வானில் பறந்த முதல் இந்தியத் தேவதை!



1914ம் ஆண்டு ஒன்றுபட்ட இந்தியாவில் உள்ள லாகூரில் பிறந்தார் சரளா. 16 வயதில் பி.டி. சர்மாவுடன்திருமணம். கணவர் குடும்பத்தில் 9 பேர் விமானியாக இருந்தனர். ஏர்மெயில் விமானியாக இந்தியாவில் உரிமம் வாங்கிய முதல் நபர் சர்மாதான். இந்தக் குடும்பத்துக்குச் சொந்தமாக ஹிமாலயா ஃப்ளையிங் கம்பெனி என்ற விமான நிறுவனம் இருந்தது.


துறுதுறுப்பும் ஆர்வமும் மிக்க சரளாவை ஒரு விமானியாக்க வேண்டும் என்று மாமனாரும் கணவரும் மிகவும் விரும்பினார்கள். உடனே லாகூர் ஃப்ளையிங் கிளப்பில்
பயிற்சிக்காகச் சேர்த்துவிட்டனர்.  21 வயதில் ஜிப்சி மாத் என்ற சிறிய விமானத்தைத் தனியாக ஓட்டிக் காட்டினார் சரளா! விமானம் ஓட்டிய பிறகுதான் சைக்கிள், கார் போன்றவற்றை ஓட்டக் கற்றுக்கொண்டார் சரளா. அதுவரை ஆண்கள் மட்டுமே கால்பதித்து வந்த இந்தத் துறையில் துணிச்சலுடன் இறங்கினார். லாகூர் ஃப்ளையிங் கிளப் விமானத்தில் ஆயிரம் மணி நேரம் பறந்து காட்டினார். அதற்குப் பிறகு ஏ பிரிவுக்கான விமானி உரிமம் வழங்கப்பட்டது. தொழில் முறை விமானியாக முயற்சி செய்தார்.

1939ம் ஆண்டு சர்மா விமான விபத்தில் உயிரிழந்தது, இரண்டாம் உலகப் போர் நடைபெற்றதால் உள்நாட்டு விமானப் பயிற்சிகள் தடை செய்யப்பட்டது போன்ற  காரணங்களால் சரளாவின் தொழில் முறை விமானியாகும் லட்சியம் தள்ளிப் போனது. லாகூர் கல்லூரியில் சேர்ந்து, நுண்கலையில் பட்டயப் படிப்பை முடித்தார். வங்காள பாணி ஓவியத்தில் தன் தனித் திறமையைக் காட்டினார்.
1947... பாகிஸ்தானில் கலவரங்கள் வெடித்தன. சரளா தன் இரு பெண் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு டெல்லிக்குக் குடி வந்தார். ஓவியங்கள் வரைவதையும் ஆடை, ஆபரணங்களை வடிவமைப்பதையும் தொழிலாகச் செய்ய ஆரம்பித்தார். ஆரிய சமாஜத்தின் தொடர்பு கிடைத்தது. அவர்களின் சீர்திருத்த கொள்கையின் மூலம் 1948ம் ஆண்டு பி.பி.தாக்கரல் என்பவரை மறுமணம் செய்து கொண்டார் சரளா.

அவருடைய விமானப் பயிற்சியை மீண்டும் ஆரம்பித்தார். விரைவில் தொழில் முறை விமானி உரிமம் பெற்றார். அந்த நேரம் ராஜஸ்தான் அரச குடும்பத்துக்குச் சொந்தமான விமானத்தை ஓட்டும் வாய்ப்பு கிடைத்தது. 6 மாதங்கள் சிறப்பு விமானியாகப் பணியாற்றினார்.

பிற்காலத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வடிவமைப்புச் செய்து கொடுத்தார். அவர் வடிவமைத்த புடைவைகளும் நகைகளும் பலரையும் கவர்ந்தது. விஜயலஷ்மி பண்டிட் இவருடைய முக்கியமான வாடிக்கையாளராக இருந்தார். 94 வயதில் மரணம் அடையும் வரை சரளா ஓயாத உழைப்பாளியாக இருந்தார்!

“ஒவ்வொரு நாள் காலை எழும்போதும் அன்று செய்ய வேண்டிய வேலைகளைத் திட்டமிட்டு, கச்சிதமாகச் செய்து முடிப்பேன். அதுதான் எனக்கு மகிழ்ச்சி. ஏனென்றால் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மிக அரிதானதல்லவா!’

- சஹானா