ஏக்.. தோ... டீன்!...



‘என் ஃப்ரெண்ட் மனிஷா புதுசா ஐபேடு வாங்கியிருக்கா. எனக்கும் அதே மாதிரி வேணும்...’‘மிதுனா அவளோட பர்த் டேவை ஸ்டார் ஹோட்டல்ல செலிப்ரேட் பண்ணப் போறாளாம். என் பர்த்டேவையும் அப்படித்தான் பண்ணணும்...’ இப்படி உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகள் தினம் தினம் ஒரு கோரிக்கையுடனோ, விருப்பப் பட்டியலுடனோ உங்களை அணுகுவார்கள். உண்மையில் உங்கள் மகனுக்கோ,

மகளுக்கோ தனிப்பட்ட முறையில் அவர்கள் முன் வைக்கிற விஷயங்களில் ஆர்வம் இருக்காது. ஆனாலும், அவர்களது நண்பர்கள், சக மாணவர்கள் என அவர்களது வயதிலிருக்கிற மற்ற டீன் ஏஜ் பிள்ளைகள் செய்வதைப் பார்த்து அவர்கள் மத்தியில் தாமும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமே என்கிற நினைப்பிலேயே அப்படிச் செய்வார்கள். அதைத்தான் ‘ஒப்பானோர் வற்புறுத்தல்’ என்கிறோம். ஆங்கிலத்தில் பியர் ப்ரெஷர்!
இந்த ஒப்பானோர் வற்புறுத்தல்

பாசிட்டிவாகவும் அமையலாம். உதாரணத்துக்கு உங்கள் மகளோ, மகனோ தன் நண்பரைப் பார்த்து ஏதோ ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டலாம்.
இது நெகட்டிவாகவும் அமையலாம். தன் தோழியோ, நண்பரோ செய்வதைப் பார்த்து தனக்குப் பழக்கமில்லாத  தவறான பழக்கவழக்கங்களுக்கு அவர் களும் அறிமுகமாகலாம். உதாரணத் துக்கு சிகரெட், போதை மருந்துப் பழக்கங்கள், அதீதமாக செலவு செய்தல்...

தன் நண்பன் அல்லது தோழியைப் போன்று ஒரே மாதிரி உடை அணிவது, நகை போடுவது, ஹேர் ஸ்டைல் வைத்துக் கொள்வது, ஒரே மாதிரியான இசையை ரசிப்பது, டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என்பதில் தொடங்கி, அவர்கள் உபயோகிக்கிற வார்த்தைகளுக்குப் பழகுவது, நடை, உடை, பாவனைகளை மாற்றிக் கொள்வது, ரிஸ்க் எடுப்பது, விதிகளை மீறுவது, நன்றாகப் படிப்பது அல்லது படிப்பில் அலட்சியமாக இருப்பது, செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடுவது, குடிப்பது போன்றவை வரை எல்லா விஷயங்களிலும் இது பிரதிபலிக்கலாம்.

தன்னம்பிக்கையும் சுய மதிப்பீடும் குறைவாக இருக்கும் பிள்ளைகளும், நண்பர்கள் அதிகமில்லாதவர்களும், சிறப்புத் தேவைகள் இருக்கிறவர்களும் இத்தகைய ஒப்பானோர் வற்புறுத்தலுக்கு எளிதில் ஆளாவார்கள். தனித்து விடப்பட்டதாக உணர்கிற அவர்களுக்கு, தன் நண்பர்கள் செய்கிற விஷயங்களில் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்வதன் மூலமே அவர்களுக்கு நெருக்கமாக இருக்க முடியும் என நம்புவார்கள்.

சில பிள்ளைகள் தான் யார் என்பதை உணர்ந்திருப்பார்கள். அதே நேரம் தனது நண்பர்களுடன் இணைந்திருக்கிற, இரண்டையும் பேலன்ஸ் செய்கிற வித்தையையும் தெரிந்து வைத்திருப்பார்கள்.
சில பிள்ளைகளுக்கு சுயமதிப்பீடு மிக அதிகமாக இருக்கும். அவர்களுக்கு தன்னை வற்புறுத்தும் நட்பு அழுத்தங்களிலிருந்து விலகி இருக்கத் தெரிந்திருக்கும். அத்தகைய பிள்ளைகள் நண்பர்கள் செய்கிறார்களே என சில விஷயங்களைத் தாமும் செய்ய நினைக்க மாட்டார்கள். சுய மதிப்பீடு என்பது நல்ல உறவுகளை வளர்த்துக் கொள்ள வழிகாட்டும். அதே நேரம் நல்ல உறவுகள் இருப்பவர்களுக்கு சுயமதிப்பீடு தானாக வரும்.

பெற்றோராக, உங்கள் பிள்ளைகள் தம் நண்பர்களைப் பார்த்து ரொம்பவும் மாறிவிட்டதாகவும், தனது மதிப்பீடுகளை இழந்து விட்டதாகவும் நீங்கள் நினைக்கலாம். நண்பர்கள் வற்புறுத்தும்போது, சில விஷயங்களுக்கு ‘நோ’ சொல்லத் தெரியாமல் அதற்குப் பழகிவிடுவார்களோ என்கிற பயமும் உங்களுக்கு இருக்கலாம்.

ஒரு விஷயம்... தன் தோழி ரசிக்கிற அதே பாடலை தானும் கேட்பதாலேயோ, தன் நண்பனுக்குப் பிடித்த அதே ஹேர் ஸ்டைலை தானும் வைத்துக் கொள்வதாலேயோ அவர்கள் செய்கிற சமூக விரோதச் செயல்களுக்கும் உங்கள் பிள்ளைகள் பழகுவார்கள் என நினைக்காதீர்கள். உங்கள் பிள்ளைகளின் வளர்ப்பில் உங்களுடைய தாக்கமும் பிரதானமாக இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். தன்னைப் பற்றிய சுயமதிப்பீட்டை அறிந்திருக்கிற, தன் குடும்பத்தின் மதிப்பீடுகளைப் புரிந்திருக்கிற பிள்ளைகளுக்கு, தவறான வற்புறுத்தல்கள் தம்மை நோக்கி வைக்கப்படும் போது, அவற்றுக்கு எங்கே, எப்படி எல்லைக் கோடு வரைய வேண்டும் என்பதையும் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.

உங்கள் பிள்ளைகளுக்கு எப்படி உதவலாம்?
உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்குமான உரையாடலை எப்போதும் வரவேற்கிற நிலையில் இருங்கள்.
‘முடியாது’ என சொல்லக் கற்றுக் கொடுங்கள். உங்கள் பிள்ளைக்கு ஒரு விஷயத்தைச் செய்வதில் விருப்பமில்லாமல் இருக்கும். ஆனாலும், அதை வெளிப்படையாக நண்பரிடம் சொல்வதில் தயக்கம் இருக்கலாம். அந்த மாதிரி நேரங்களில் அடுத்தவரைக் காயப்படுத்தாத வகையில் ‘நோ’
சொல்லும் வழிகளை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.

உதாரணத்துக்கு உங்கள் டீன் ஏஜ் பிள்ளையை, அவனது நண்பர்கள் சிகரெட் பழக்கத்துக்குள் இழுக்க முயற்சி செய்யலாம். ‘முடியாது’ என கண்டிப்பாக சொல்வதை தர்மசங்கடமாக
உணரும் உங்கள் மகன், அதையே ‘இல்லை... ஸ்மோக் பண்ணினா என்னோட வீசிங் பிரச்னை இன்னும் அதிகமாயிடும்’ என்றோ, ‘ஸாரி... இந்த புகை எனக்கு அலர்ஜி’ என்றோ சொல்லித் தவிர்க்கலாம்.

உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு வேறு வேறு ஏரியாக்களில் நட்பு
வட்டத்தை வளர்த்துக் கொள்ள ஊக்கப்படுத்துங்கள். உதாரணத்துக்கு ஸ்போர்ட்ஸ், டியூஷன், அக்கம்பக்கத்து வீட்டுப் பிள்ளைகள்... இப்படி. ஒரு இடத்தில் அவர்களது நட்பில் பிரச்னை வந்தாலும், அதிலிருந்து வெளியே வர வேறு நண்பர்களின் சேர்க்கை உதவியாக இருக்கும்.

உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு முடிந்தளவுக்கு தன்னம்பிக்கையை வளர்த்து விடுங்கள். சுயமதிப்பீட்டைக் கற்றுக் கொடுங்கள். இது அவர்களுக்கு எந்த விஷயத்திலும் சுயமாக முடிவெடுக்கவும், தன்னை வற்புறுத்தும் நட்பு வட்டத்தைத் தவிர்க்கவும் கற்றுத் தரும்.

உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் உங்கள் வீட்டுக்கு வருவதையும், உங்கள் முன்னிலையில் நட்பு வளர்ப்பதையும் ஊக்கப்படுத்துங்கள். அப்போது அந்த நட்பு வட்டத்தில் உங்கள் பிள்ளையை தம் பக்கம் இழுக்கும்படியான வற்புறுத்தல் இருந்தால் உங்களால் உடனடியாகக் கண்டு பிடித்துத் தடுக்க முடியும். வற்புறுத்தும் நட்பின் மூலம் சந்திக்கிற நெகட்டிவ் உணர்வுகளைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்கிற படி, உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்குமான உரையாடலை சுமுகமாக, வெளிப்படையாக வைத்திருங்கள்.

உங்கள் பிள்ளைகளின் நட்பு வட்டம் சரியல்ல என்றும், அவர்களது தாக்கம் உங்கள் பிள்ளையை பாதிக்கிறது என்றும் உங்களுக்குத் தெரிய வரலாம். அதை நீங்கள் நேரடியாக உங்கள் பிள்ளைகளிடம் சொன்னால், உங்களுக்குத் தெரியாமல் மறைமுகமாக அந்த நட்பைத் தொடரவே செய்வார்கள். குறிப்பிட்ட யாருடனாவது நட்பே கூடாது என நீங்கள் சொன்னால், வேண்டுமென்றே அந்த நபருடன் அதிகம் நெருங்கவே உங்கள் பிள்ளைகள் விரும்புவார்கள். உங்கள் பிள்ளைகளின் நண்பர்களில் ஒருசிலரைக் குறிப்பிட்டுப் பேசுவதற்குப் பதிலாக, அவர்களிடம் உங்களுக்குப் பிடிக்காத நடத்தையை மட்டும் பேசுங்கள். அந்த நண்பர்களைப் பற்றிய உங்கள் கருத்துகளை முன் வைப்பதற்குப் பதிலாக, அவர்களது நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை மட்டும் விளக்குங்கள்.
சில விஷயங்களில் உங்கள் பிள்ளைகளுடன் நீங்கள் அனுசரித்துப் போவதுதான் நல்லது.

உதாரணத்துக்கு உங்கள் மகள் தன் தோழியைப் போல டிரெஸ் செய்ய விரும்பலாம். உங்கள் மகன் உங்களுக்குப் பிடிக்காத ஒரு ஹேர் கட் செய்து கொள்ள ஆசைப்படலாம். உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் பிடிக்காத காரணத்தினாலேயே இதையெல்லாம் கூடாது எனச் சொல்வதற்குப் பதில், அவர்கள் தங்களது நட்பு வட்டத்தோடு இணைந்திருக்கச் செய்கிற இது போன்ற ஆபத்தில்லாத
சின்னச் சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்தாமல் விட்டுக்கொடுங்கள்.

தனக்குப் பிடித்த நண்பர்கள் குழுவுடன், அவர்களுக்குப் பிடித்த மாதிரி இணைந்திருப்பது டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு ஒருவித தன்னம்பிக்கையையும் மதிப்பையும் தரலாம். அந்த நட்பின் மூலம் அவர்கள் அவசியமான சமுதாயத் திறமைகளைக் கற்றுக் கொள்வார்கள். மற்றவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கற்றுக் கொள்வார்கள்.

உங்கள் மகன் அல்லது மகளின் பழக்க வழக்கங்களில், நடை உடை பாவனைகளில், செலவு வைப்பதில் அதீத மாற்றங்களை உணர்கிறீர்கள் என்றால்... அதற்கெல்லாம் காரணம் அவர்களது நட்பு என நம்புகிறீர்கள் என்றால்...  அவர்களுடன் பொறுமையாகப் பேசிப் பாருங்கள். டீன் ஏஜில் சில பழக்க வழக்கங்கள் அடிக்கடி மாறுவது சகஜம்தான். ஆனால், அதெல்லாம் உங்கள் குடும்பத்தின் பழக்க வழக்க கோட்பாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைகின்றனவென்றால் உடனடியாக செயல்பட தயங்காதீர்கள்.

தன்னம்பிக்கைக் குறைவு, அழுகை, அதீத மன அழுத்தம், கோபம், சமுதாயத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவது, தூக்கத்திலும், உணவுப்பழக்கத்திலும் திடீர் மாற்றம், பள்ளிக்குச் செல்ல விரும்பாதது, அதற்கு முன் ஆர்வமாக இருந்த விஷயங்களில் திடீரென ஆர்வமிழப்பது போன்ற அறிகுறிகளைப் பார்த்தீர்களானால், மனநல ஆலோசகரின் உதவியை நாடுவது பாதுகாப்பானது.
-அம்மா அல்லது அப்பா என ஒருவரிடம் வளரும் டீன் ஏஜ் பிள்ளைகள்... என்னென்ன பிரச்னைகள்? என்னென்ன தீர்வுகள்? சில விஷயங்களில் உங்கள் பிள்ளைகளுடன் நீங்கள் அனுசரித்துப் போவதுதான் நல்லது. தேவையில்லாத வற்புறுத்தல்களுக்கு ‘முடியாது’ என சொல்லக் கற்றுக் கொடுங்கள்.

அது அடுத்த இதழில்!
தொகுப்பு: சாஹா
மாடல்: நந்தினி, படங்கள்: ஆர்.கோபால்