எந்த நகை வாங்கலாம்?



இந்துக்களுக்கு அட்சய த்ருதியை...ஜெயின்களுக்கு ஆகாத்தீஜ்...சித்திரை மாதத்தில் த்ருதியை திதியில் அமாவாசையை அடுத்த 3வது நாளில் வரும். அது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அன்று பலராம ஜெயந்தி. அதாவது, விஷ்ணுவின் 6வது அவதாரமான பரசுராமன் அவதரித்த நாள். வருடத்தில் 3 முக்கியமான திதிகள் உள்ளன. அந்தத் திதிகளில் எது செய்தாலும் அமோகமாக இருக்கும் என்பது நம்பிக்கை. அதாவது, வருடப் பிறப்பு, விஜயதசமி மற்றும் அட்சய த்ருதியை. அதாவது, ரோகிணி நட்சத்திரம், அட்சய த்ருதியை திங்கட்கிழமையில் வந்தால் இன்னும் விசேஷம் எனச் சொல்வதுண்டு.

த்ரேதாயுகம் ஆரம்பித்து கங்கை பூமியில் பிரவகித்த முதல் நாள். அன்னப்பூரணி அவதரித்த நாள். குபேரன் சகல வளங்களும் பெற்ற நாள். உதிஷ்டன் அட்சய பாத்திரம் பெற்ற நாள். கிருஷ்ண னுக்கு அன்புடன் அவலைக் கொடுத்து, குசேலன் குபேரன் ஆன நாள். திரவுபதியை துரியோதனன் துகிலுரித்தபோது, கிருஷ்ணன் உடை கொடுத்துக் காப்பாற்றிய நாள். ஆதிசங்கரர் ஒரு ஏழைத் தம்பதியிடமிருந்து பசிக்காக நெல்லிக்கனியைப் பெற்று, கனகதாரா ஸ்தோஸ்திரம் சொன்ன முதல் நாள். கேரளா, கோவா, தமிழ்நாடு, வட இந்தியா முழுவதும் இது மிக மிக முக்கியமான நாள். ஒடிசாவில் அன்றுதான் விதை விதைக்கும் முதல் நாளாகக் கொண்டாடுகிறார்கள். பூரியில் ரதயாத்திரை தொடங்கும் நாள்.

கொல்கத்தாவில் கணக்குப்புத்தகங்களை வைத்துப் பூஜை செய்யும் நாள். சுதர்சன குபேர எந்திரம் வைத்துப் பூஜை செய்யும் நாள். தீர்த்த சங்கர ரிஷப தேவன் ஜெயின் கரும்புச் சாற்றைக் குடித்து விரதம் முடித்த நாள். ஜெயின் மதத்தவர் ஒருவருக்கொருவர் கரும்புச்சாறு கொடுத்து மகிழ்வார்கள் இந்த நாளில். ஸ்ரீவியாசர் மகாபாரதத்தை எழுதத் தொடங்கிய நாள். கருடனுக்கு லட்சுமி தங்கத்தில் அட்சய பாத்திரம் அருளியதாக புராணம் சொல்கிறது.

இத்தனை முக்கியத்துவம் பெற்ற நாளில் எந்த ஒரு புதுக் காரியத்தைத் தொடங்கினாலும் அது அமோகமாக வெற்றி பெறும் என்பதே நம்பிக்கை. மற்ற நாட்களில் கணவரோ, குடும்பத்தாரோ தங்கம் வாங்க ஆட்சேபித்தாலும், அட்சய த்ருதியை யில் தங்கம் வாங்கவே பல பெண்களும் விரும்புகிறார்கள். இந்த நாளில் தங்க விற்பனையாளர்கள் பலரும் கூலி, சேதாரத்தைக் குறைத்துக் கொண்டு சிறப்பு விற்பனை செய்கிறார்கள். அதற்காக கடன் பட்டாவது தங்கம் வாங்கி வைக்கத் தேவையில்லை. அன்றைய தினம் அவரவர் கையிருப்புக்குத் தகுந்த வாறு அளவாக தங்கம் வாங்கினாலே சிறப்பானது தான். ஒரு கிராம் வாங்கினாலும், 100 கிராம் வாங்கினாலும் ஒரே பலன்தான். அட்சய த்ருதியையில் தங்கம் வாங்கிய திருப்தியும் இருக்கும். அன்றைய நாளில் கிடைக்கக்கூடிய சுபிட்சமும் கிடைக்கும்.

உண்மையில் அட்சய த்ருதியை என்பது தானம், தர்மம், பூஜை போன்றவற்றுக்கு மிகவும் உகந்த நாள் என்று புராணம் சொல்கிறது. அப்போது ஏன் அட்சய த்ருதியையில் நகை வாங்குவதை நகைக்கடைக்காரர்கள் பிரபலப்படுத்தினார்கள்? 20 வருடங்களுக்கு முன்பு வரை மிகச் சிலரால் மட்டுமே தங்கம் வாங்கப்பட்டு வந்தது. அந்தக் காலகட்டத்தில் பல நகைக் கடைக்காரர்களுக்கு இது பற்றி எதுவுமே தெரியாது. பிராக்டிகலாக பார்த்தோமானால், மார்ச் என்பது வங்கிக் கணக்கு ஆண்டுப்படி வரவு வற்றி, இருப்பு இருக்கும்... ஆனால், பணம் இருக்காது என்கிற மாதம். வரிகளைக் கட்டி முடிக்கிற காலம். மட்டுமின்றி பள்ளிக்கூடம், காலேஜ் கட்டணம் என செலவுகள் மிகுந்த காலமாக இருந்தாலும், கடனை வாங்கியாவது அட்சய த்ருதியையில் மலிவாக தங்கம் வாங்கி விட நினைக்கிற மனநிலை வந்தது.

அட்சய த்ருதியையில் நீங்கள் நினைத்த காரியங்கள் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றால், வெறும் தங்கத்தில் மட்டுமே முதலீடு செய்யாமல், ஒரு பகுதியை தங்கம் வாங்கவும், இன்னொரு பகுதியை தான தர்மத்துக்கும், இன்னொரு பகுதியை பூஜைக்கும் ஒதுக்கினால், இன்னும் முழுமையான பலனைப் பெறலாம் என்பது என் கருத்து. தலைச்சிறந்த ஜோதிடர்கள், ‘அட்சய த்ருதியை என்பது தங்கம் வாங்க உகந்த நாள் அல்ல.... குரு பூசம்... வியாழன் அன்று தான் தங்கம் வாங்க சிறந்த நாள்’ என்று சொன்னாலும் பிரபலமாகவில்லை. ஒருவேளை இன்னும் சில வருடங்கள் கழித்து, குருபூசம் அன்று தங்கம் வாங்கும் விஷயம் பிரபலமாகுமோ என்னவோ... ஆனால், அட்சய த்ருதியை என்பது உலகமெங்கும் இந்தியர்கள் வாழும் இடங்களில் எல்லாம் பிரபலமாகி விட்டது!

இன்றும் மக்களுக்கு பிசிகல் கோல்டு வாங்குவதிலேயே அதிக ஆர்வம் இருக்கிறது. ஏனென்றால், நாம் கொடுக்கும் பணத்துக்கேற்ப தங்கம் கையில் கிடைத்து விடுகிறது. அட்சய த்ருதியையின் பின்னணி தெரியாமலே அன்றைய தினம் தங்கம் வாங்கும் டிரெண்ட் பிரபலமாகி விட்டது. அன்றைக்கு எப்படியாவது தங்கம் வாங்க வேண்டும் என்பதற்காக கூட்ட நெரிசலில் சிக்கி, யோசிக்க கால அவகாசம் இன்றி, எதையோ வாங்கிவிட்டுப் பிறகு விருப்பமில்லாமல் தவிக்கிற மக்களும் உள்ளனர். எதை வாங்க வேண்டும் என்பதைப் பற்றிய தெளிவு வேண்டும்.

பிள்ளைகளுக்குத் திருமணத்துக்கு நகை வாங்க நினைப்பவர்கள், தாலிக்குத் தங்கமாக வாங்கி வைக்கலாம். 6 மாதங்களில் திருமணம் வைத்திருப்பவர்கள், அந்தத் திருமணத்துக்குத் தேவையான நகையை இப்போதே வாங்கி வைக்கலாம்.லேட்டஸ்ட்டாக வாங்க நினைக்கிறவர்கள் ஒரு ரகம். லேட்டஸ்ட் என்றால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அப்படி இருக்கும். அதன் பிறகு  நீங்கள் அதை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு வருவீர்கள் அல்லது பரவாயில்லை என வைத்துக் கொண்டாலும் மற்றவர்கள் போடுகிற நகைகளைப் பார்க்கும் போது, உங்களிடம் உள்ளது பிடிக்காமல் போகும். பொதுவாக கையால் செய்யப்பட்ட ஆபரணங்கள் காலத்தால் அழியாதவை. ஆன்ட்டிக் ஃபினிஷ் தரக்கூடியவை. விதம் விதமான டிசைன்களிலும் கிடைக்கும். இப்போதெல்லாம் எடை குறைவாகவே கையால் செய்யப்பட்ட ஆபரணங்கள் கிடைக்கின்றன. அதை எப்போது அணிந்தாலும் பொருத்தமாக இருக்கும்.

இப்போது வருகிற லேட்டஸ்ட் மாடல்கள் பலதிலும் நிறைய கல் பதித்திருப்பதைப் பார்க்கலாம். என்னதான் 916 ஹால்மார்க் தங்கமாக வாங்கினாலும் திரும்ப விற்கும் போது கல்லை நீக்கிவிட்டுத்தான் தங்கத்தை எடைக்கு எடை வாங்கிக் கொள்வார்கள். இந்த இழப்பைத் தவிர்க்க முழுக்க கற்கள் பதித்த (தள்ளி வைத்துப் பார்த்தால் தங்கம் மட்டுமே தெரியும். உற்றுப் பார்த்தால்தான் பொடிக் கற்கள் பதிக்கப்பட்டிருப்பது தெரியும்) நகைகளை வாங்குவதைத் தவிர்க்கலாம். ப்ரீசியஸ் ஸ்டோன்ஸ் எனப்படுகிற ரூபி, எமரால்ட் கற்கள் வைத்த நகைகள் வாங்குவதில் தவறில்லை. அது உங்கள் கையிருப்பைப் பொறுத்தது.

அடுத்து பார்ப்பதற்கு லைட் வெயிட்டாகவும், பாந்தமாக, பெரிதாக இருக்கிற நகைகளையும் சிலர் வாங்கி விடுகிறார்கள். அந்த நகைகள் அப்போது அணிய ஏற்றதாக இருக்கலாம். பின்னாளில் ரிப்பேர் செய்ய முடியாதவை. ரிப்பேர் செய்தாலும் வாங்கிய போது இருந்த பொலிவை இழந்து விடும். அதனால், மிகவும் லைட் வெயிட் ஆபரணங்களைத் தவிர்க்கவும். எப்போதாவது அணிகிறவர்கள், மிக ஜாக்கிரதையாகக் கையாள்பவர்கள் லைட் வெயிட் ஆபரணங்களை வாங்கலாம்.

வீட்டில் நான்கு பேர் இருந்தால் ஆளுக்கொரு கடையில் தங்கம் வாங்கச் சொல்வார்கள். எல்லோரையும் திருப்திப்படுத்தும் எண்ணத்தில் ஒவ்வொரு கடையிலும் 1 கிராம், 2 கிராம் எனப் பிய்த்துப் பிய்த்து வாங்குவோரும் உண்டு. அதைத் தவிர்த்து எல்லோரும் சேர்ந்து பேசி, ஒரு கடையைத் தேர்வு செய்து, மொத்தமாக வாங்குவதே சிறந்தது. கடையில் நெரிசல் அதிகமுள்ள அட்சய த்ருதியை நாள் போன்ற காலங்களில் நாம் சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். பழைய தங்கத்தைக் கொடுத்து புதியது வாங்குவதைத் தவிர்க்கவும். அந்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் கவனச் சிதறல் ஏற்படுவது சகஜம்.

பழைய தங்கத்துக்கு சரியான விலை போட்டிருக்கிறார்களா, ஏதாவது தவறு நடந்திருக்கிறதா என்றெல்லாம் கணக்குப் போட்டுப் பார்க்க அவகாசமே இருக்காது.
எவ்வளவு பட்ஜெட்டோ... கையில் என்ன பணமிருக்கிறதோ அதற்கேற்ப வாங்கலாம். 3 அல்லது 4 கிராம் வாங்கும் எண்ணத்தில் கடைக்குப் போவார்கள். அதில் தோடுதான் கிடைக்கும் என நினைத்துக் கொண்டு, பிடிக்காத டிசைனாக இருந்தாலும் வேறு வழியின்றி வாங்கி வருவார்கள். அதே 4 கிராமில் செயின் கூட கிடைக்கும். உழைக்கக்கூடியதாகவும் இருக்கும். அதை வாங்கினால் உபயோகப்படும். டிசைன் பிடிக்காமல் அட்சய த்ருதியைக்கு ஏதோ வாங்க வேண்டும் என்று பிடிக்காததை வாங்கி, வீட்டில் வைப்பதிலும், பிறகு அதைத் திரும்பக்கொடுப்பதிலும் அர்த்தமே இல்லை.

வீட்டையும் குழந்தைகளையும் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ள பெரியவர்கள் இருந்தால் ஒருவிதமான நிம்மதி உணர்வு இருக்கும் அல்லவா? தங்கத்தை வீட்டில் வைத்திருப்பதும் அப்படியொரு உணர்வுக்கு இணையானதுதான். எப்போதும் பிரச்னைக்குத் தோள் கொடுக்கக்கூடிய அந்த மங்களகரமான மஞ்சள் உலோகம் சுபிட்சங்களைத் தரும் என நம்பக்கூடிய அட்சய த்ருதியையிலும் வாங்குவதில் தவறில்லையே! அட்சய த்ருதியையில் தங்கப் பாத்திரம்தான் வாங்க வேண்டும் என்றில்லை. தங்கப் பத்திரம் வாங்கினால்கூட சுபிட்சம்தான்!

அட்சய த்ருதியை என்பது தானம், தர்மம், பூஜை போன்றவற்றுக்கு மிகவும் உகந்த நாள் என்று புராணம் சொல்கிறது. அப்போது ஏன் அட்சய த்ருதியையில் நகை வாங்குவதை நகைக் கடைக்காரர்கள் பிரபலப்படுத்தினார்கள்?

டிசைன் பிடிக்காமல் அட்சய த்ருதியைக்கு ஏதோ வாங்க வேண்டும் என்று பிடிக்காததை வாங்கி, வீட்டில் வைப்பதிலும், பிறகு அதைத் திரும்பக் கொடுப்பதிலும் அர்த்தமே இல்லை.

(தங்கத் தகவல்கள் தருவோம்!)

எழுத்து வடிவம்: எம்.ராஜலட்சுமி