என் சமையலறையில்!



சாறு பிழிவதற்கு முன் 15 நிமிடங்கள் எலுமிச்சைப்பழத்தை வெதுவெதுப்பான நீரில் போட்டு வைக்கவும். பிறகு எடுத்து பிழிந்தால் அதிக ஜூஸ் கிடைக்கும்.  வத்தக் குழம்பு வைக்கப் போகிறீர்களா? ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை மைய அரைத்து, தாளிப்பில் கொட்டவும். கொஞ்சம் வதக்கவும். பின் தேவையான அளவு புளித்தண்ணீர், மிளகாய் தூள் சேர்த்துக் குழம்பு வைக்கவும். சூப்பர் டேஸ்ட்!
- ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி-6.

முட்டையை வேக வைக்கும் போது மேல் ஓடு விரியாமல் இருக்க வேண்டுமா? தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சைச்சாறு கலந்தால் விரியாது.
- வத்சலா சதாசிவன், சென்னை-64.
 
அரிசிக் கொழுக்கட்டைக்கு மாவை ஆவியில் வேக வைத்து எடுத்த பிறகு, வெல்லத்தை சூடான தண்ணீரில் கரைத்து, வடிகட்டவும். அதே தண்ணீரில் மாவைப் போட்டு பிசைந்து தட்டி, உள்ளே பூரணம் வைத்து மூடி கொழுக்கட்டை செய்யவும். கலராக இருக்கும். புதுச் சுவையாக இருக்கும்.
- சு.கண்ணகி, மிட்டூர்.

வடாத்துக்கு பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் கார விழுது அரைப்போம். இதை சிறிது கூடுதலாக அரைத்து வைத்துக் கொண்டால், மாங்காய் ஊறுகாய்க்கும் பயன்படுத்தலாம். மாங்காயை பொடிப் பொடியாக நறுக்கி, இந்த விழுதில் சிறிதை சேர்த்து நன்றாக பிசறவும். அதில் கடுகு தாளித்துச் சேர்த்தால் சுவையான மாங்காய் ஊறுகாய் ரெடி!
- சியாமளா ராஜகோபால், சென்னை-64.

பெருங்காயம் தாளிக்கும் போது சில நேரங்களில் சரியாகப் பொரியாது. உள்ளுக்குள் பச்சையாக இருக்கும். ருசி குறையும். இதைத் தவிர்க்க, பெருங்காயக் கட்டியை மைக்ரோவேவ் அவனில் ஒரு கண்ணாடி தட்டில் இரண்டு நிமிடங்கள் வைத்திருக்கவும். மறுபடியும் திருப்பிவிட்டு ஒரு நிமிடம் வைக்கவும். முழுக்கட்டியும் சீராகப் பொரிந்திருக்கும். இதை மிக்ஸியில் பொடி செய்து வைத்துக் கொண்டு, தேவைப்படும் போதெல்லாம் சமையலுக்கு உபயோகிக்கலாம்.
- எஸ்.கனகவல்லி சாரங்கபாணி, ஸ்ரீரங்கம்.

மீனில் சிறிதளவு கடுகை அரைத்துக் கலந்தால் மீன் உதிர்ந்து போகாது. கருவாட்டில் அதிக அளவு உப்பு இருந்தால் அதை கஞ்சி தண்ணீரில் அரை மணி நேரம் போட்டு வைக்கவும். உப்பு பெருமளவு குறைந்துவிடும். கிழங்குகளை வேக வைக்கும் போது, ஒரே அளவாக வெட்டி வேக வைக்கவும். அப்போதுதான் அனைத்தும் சீராக வேகும். இல்லையென்றால் ஒன்று வெந்தும் மற்றது வேகாமலும் இருக்கும். சீக்கிரம் வேக வேண்டும் என்பதற்காக அடுப்பின் தீயை அதிகரிப்பதும் சரியல்ல. தண்ணீரை நன்கு கொதிக்க வைத்த பிறகு கிழங்குகளை வேகப் போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.

வாழைக்காயை வெளியில் வைத்தால் பழுத்துவிடும். ஃப்ரிட்ஜிலும் வைக்க முடியாது. என்ன செய்யலாம்? காயை தோல் சீவி, நறுக்கி உப்பு, காரம், மஞ்சள் தூள் சேர்த்து பிசறி ஃப்ரிட்ஜில் வைத்து விடவும். ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
- என்.ஜரினாபானு, திருப்பட்டினம்.  

முருங்கைக்காய் அதிகமாக இருக்கிறதா? விரல் நீளத்துக்கு வெட்டி, ஒரு கவரில் போட்டு ஃப்ரீஸரில் வைத்துவிடவும். சமைக்கும் போது அப்படியே எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இரண்டு நிமிடத்தில் வெந்துவிடும். ஒரு துண்டு இஞ்சியை சேர்த்து முட்டைக்கோஸை சமைத்தால் மணமாக இருக்கும். கோஸின் தன்மை மாறாமலும் இருக்கும். வடை மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால், ஒரு டீஸ்பூன் நெய் விடவும். மாவு இறுகி விடும்... தனிச்சுவையோடு இருக்கும்.
- அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

கேழ்வரகை ஊற வைத்து, அரைத்து, பால் எடுத்து கோதுமை அல்வா போலவே செய்யலாம். ருசியாக இருக்கும். மசால் வடை செய்யப் போகிறீர்களா? குக்கரில் சிறிது கருணைக்கிழங்கை வேக வைத்து, அதை மசால் வடை மாவுடன் சேர்த்து அரைக்கவும். வடை வித்தியாச சுவையில் இருக்கும்.
- மல்லிகா அன்பழகன், சென்னை-78.