காற்றில் நடனமாடும் பூக்கள்



நெஞ்சில் நின்ற நிலவும் கிளியும்

‘சரியானது எது என்று உணர்ந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதுதான் மகா கோழைத்தனமானது’ என்கிறார் கன்பூஷியஸ். மனிதர்களாகிய நாம் பழக்கவழக்கங்களின் அடிமைகளாகத்தான் இருக்கிறோம் என்றால் அது மிகையல்ல. எவற்றை எல்லாம் செய்தால் நல்லது? எவற்றையெல்லாம் செய்யாது இருந்தால் நல்லது? இவை நம் ஒவ்வொருவருக்கும் ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும், நாம் உடனடியாக நம்மை மாற்றிக் கொள்ள முடிவதில்லை. அதற்குப் பெரிதாக முயற்சிப்பதும் இல்லை. அதற்கான பிரதான காரணம்... தொடக்கத்திலிருந்தே நாம் அப்படிப்பட்ட பழக்கங்களில் இல்லாமல் போனதுதான். பின்னாட்களில் தீயவை எனத் தெரிந்தும் சிலவற்றைத் தவிர்க்க முடியாது தவிக்கிறோம்.

இப்படித்தான் நன்னெறி, நீதிபோதனைக் கதைகளைத் தவிர்ப்பதன் மூலம், இளைய தலைமுறையினர் உன்னதமான பல கதைகளை அறிந்து கொள்ள இயலாமல் போகின்றனர். அதோடு, ஆரோக்கியமான பற்றும் பாசமும் நேர்மை உணர்வும் உள்ள மனநிலையை வளர்த்தெடுப்பதற்கான கடமையிலிருந்து தவறிய குற்றவாளிகளாகவும் காலப்போக்கில் ஆகிவிடக்கூடும் நாம். அறிவின் பயன் பண்புதான் என்றாலும், அந்த பண்பைச் சொல்லாமல் சொல்லி உணர்த்தும் முந்தைய நாட்களின் கதைகளும் பாடல்களும் எல்லா இடங்களிலும் குறைந்து வருவதை மௌனமாக பார்த்துக் கொண்டிருப்பது, நம் பிள்ளைகளுக்கு நாம் செய்யும் நன்மையாக இருக்க முடியாது.

கோடைக்காலங்களில் முன்னிரவில் தண்ணீர் தெளித்த வாசலில் பாய் போட்டு காற்றாட உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் வழக்கம், முன்பு கிராமங்களில் இருந்தது. அப்போது வீட்டுப் பெரியவர்களிடமும், பேசிச் செல்ல வரும் பக்கத்து வீட்டுப் பெரியவர்களிடமும் குழந்தைகள் கதை சொல்லும்படி கேட்பார்கள். அவர்களும் தங்களுக்குத் தெரிந்த கதைகளை அழகாக நகைச்சுவையுடன் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அது போன்ற ஒரு நாளில் எங்கள் அம்மா எங்களுக்குச் சொன்ன ஒரு கதை, பொய்யைக் குறைக்கவும், முடிந்த அளவு தவிர்க்கவும் இன்றளவும் எனக்கு உறுதுணையாக உள்ளது. அந்தக் கதையை சுருக்கமாகச் சொல்கிறேன்.

ஒரு முழு நிலவு நாளில், பின்னிரவில் ஒருவர் தன் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காகச் சென்று, வாய்க்காலின் மடையைத் திறந்து விடுகிறார். அப்போது அங்கு வந்த அவரின் பக்கத்து வயல்காரர், ‘முதலில் என் வயலுக்கு தண்ணீர் பாயட்டும்... நாளைக்கு உன் வயலுக்கு திறந்து விடலாம்’ எனக் கூறுகிறார். இவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால், இருவருக்கும் பேச்சு முற்றி, ஒருவர் மற்றொருவரை மண்வெட்டியால் ஓங்கி அடித்ததில், அவர் பலத்த காயமுற்று உயிருக்குப் போராடியபடி, ‘என் பாவம் உன்னை சும்மா விடாது’ என்கிறார். இவரோ, ‘நான்தான் உன்னை கொன்றேன் என்பதற்கு எந்த சாட்சியும் இல்லை... பாவமாவது, புண்ணியமாவது’ என்கிறார். அப்போது, ‘அதோ, வானத்தில் நிலவு பார்த்துக் கொண்டிருக்கிறது. அது எனக்கு சாட்சி சொல்லும்... நிலவே... நீ சாட்சி’ என்றவாறு இறந்து போகிறார்.

ஆண்டுகள் பல உருண்டோடி விடுகின்றன. கொலை செய்தவரோ, ஒரு நாள் இரவு வாசலில் படுத்தபடி, வானத்தில் தெரிந்த நிலவைப் பார்த்து, எகத்தாளமாக நகைத்ததைப் பார்த்த அவர் மனைவி, ‘ஏன் நிலவைப் பார்த்து சிரிக்கிறீர்கள்’ எனக் கேட்ட போது, ‘இல்ல... பத்து வருஷத்துக்கு முன்னால நம்ம பக்கத்து வயல்காரன நான் கோவத்துல மம்முட்டியால அடிச்சதுல அவன் செத்துட்டான். அப்ப கடைசியா, ‘நிலவே நீ சாட்சி’னு சொல்லிட்டு செத்தான். அவ்வள உயரத்துல இருக்கிற நிலவு எப்படி சாட்சி சொல்லும்னு நெனச்சேன். சிரிப்பு வந்துடுச்சி’ என்றார். அவன் மனைவியோ, தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்ற போது, நடந்த விஷயத்தை கூறியிருக்கிறார்.

அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அந்த செய்தி பரவி, இறுதியில் அவன் சிறைக்குப் போகும்படி ஆகிவிடுகிறது. ‘உண்மையை கொஞ்ச நாள்தான் ஒளித்து வைக்க முடியும். அது வெளிப்பட்டே தீரும்’ என சொல்லாமல் சொல்லும் இது போன்ற கதைகளையும் கதைசொல்லிகளையும் நமது வீடுகள் இழந்து வருகின்றன.இன்றைய யதார்த்தம், நாமே நம் பிள்ளைகளுக்கு சுயநலத்தை சொல்லிக் கொடுப்பவர்களாக இருப்பதை அன்றாடம் காண நேரிடுகிறது. பேருந்தில் வயது முதிர்ந்தோர், உடல்நலமற்றோர் என பலர் அமர இடமில்லாமல், தடுமாறியபடி நின்று தவியாகத் தவித்துக் கொண்டிருக்கையில் சிலரோ, சின்னக் குழந்தையை தனி இருக்கையில் அமரச் செய்து, முகத்தை இறுக்கமாக வைத்துக் கொள்வதைப் பார்க்கிறேன்.

அரைமணி நேரத்திலோ, கால்மணி நேரத்திலோ பேருந்திலிருந்து இறங்கி விடத்தான் போகிறோம். வலியுடன் நிற்கும் பெரியவர்களுக்கு எழுந்து தன் இருக்கையையே தராவிட்டாலும், கொஞ்சம் நகர்ந்து அவர்களுக்கு இடமளித்தால் மனதுக்கு மகிழ்ச்சியாகத்தானே இருக்கும்! அவர்களாகவே நிற்க முடியாமல் ‘கொஞ்சம் தள்ளி உட்காருங்களேன்’ என கெஞ்சி கேட்கும் போதுகூட, ‘குழந்தைக்கும் சேத்துதான் டிக்கெட் வாங்கியிருக்கேன்’ என முகத்தில் அறைந்தாற்போல நாம் பேசுவதை எல்லாம் குழந்தை பார்த்துக் கொண்டே இருப்பதுடன், அதை பழகிக் கொண்டும் இருக்கிறது என்பதை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை.

இந்தச் சூழ்நிலையில் பண்பை வளர்க்கும் நீதிக்கதைகளை கல்விக்கூடங்கள் முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எல்லாவிதமான பலகீனங்களோடும் சராசரியாக பிறந்து வளர்ந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை மகாத்மாவாக மாற்றிப் போட்டதும், உண்மைப் பேச வைத்ததும் சிறுவயதில் அவர் பார்த்த ராஜா அரிச்சந்திரா நாடகம்தான். ஒரு நீதி போதனை நாடகத்தால் நமக்கொரு உலகத் தலைவர் கிடைத்திருக்கிறார் என்பதை விட வேறென்ன சிறப்பான உதாரணம் இருக்க முடியும்? இதைத்தான் ‘நன்றின்பால் உய்ப்பது அறிவு’ என்று வள்ளுவரும் நன்மையின் திசையில் உள்ளத்தை திருப்பி விடும் ஆற்றல் கல்விக்குரிய கடமை எனச் சுட்டுகிறார்.

கவிஞர் கல்வியாளர் ரவீந்திரநாத் தாகூர் ஒரு கிளி வளர்ப்போடு, கல்வி நிலையை ஒப்பிட்டுச் சொல்லி யிருக்கும் முக்கியமான கதை இது...அரசர் ஒருவர் தான் வளர்க்கும் கிளிக்கு பாடம் கற்றுத்தர விரும்பி, அதற்காக பல்வேறுபட்ட பண்டிதர்களை அழைத்து ஆலோசித்து பாடம் சொல்லித்தர தேவையான புத்தகங்கள், கூண்டு, கூண்டைத் துடைத்து மெருகேற்றும் ஆட்கள், ஆசிரியர் ஒருவர் என ஏற்பாடு செய்கிறார். அரசருக்கு வேண்டப்பட்டோர் பலரும் அவரை ‘இதுவன்றோ சிறப்பு!’ என வெகுவாகப் புகழ்கின்றனர். வேறு சிலரோ, ‘எல்லாம் சிறப்புத்தான், கிளி மட்டும் அப்படியே இருக்கிறதே’ எனப் பேசிக் கொள்வதை அரசரால் பொறுக்க முடியவில்லை. ஒரு நாள் கிளியை நேரில் பார்த்து வரச் செல்கிறார் அரசர்.

அங்கே அவருக்கு வரவேற்பாக தாரைத் தப்பட்டைகள், மத்தளங்கள் ஒலிக்க, பாடகர்கள் உச்சக் குரலெடுத்து, அரசரைப் பாடி வரவேற்கின்றனர். பிரமாண்டமான அந்த வரவேற்பில் திளைத்துப்போன அரசர், ‘அற்புதம் இது’ என சிலிர்ப்புடன் பாராட்டி பேசிவிட்டு புறப்படும்போது ஒருவர், ‘அரசே... நீங்கள் கிளியைப் பார்க்காமல் புறப்பட்டு விட்டீர்களே?’ எனக் கேட்டவுடன், ‘அட, அதை மறந்து விட்டேனே... சரி அடுத்த முறை பார்த்துக் கொள்கிறேன்... நேரமாகி விட்டது’ என்று கிளியை பார்க்காமலேயே புறப்பட்டதோடு, ‘கல்வி குறித்து குறை சொல்வோர் காதுகளை அறுத்து தண்டனை கொடுங்கள்’ என்றும் ஆணையிடுகிறார்.

கிளியின் கூண்டு தங்கமாக்கப்படுகிறது. கிளி கத்திக் கதறுகிறது. அதனைக் கதறாமல் கட்டிப் போட உறுதியான சங்கிலிகள் செய்யப்படுகின்றன. புத்தகங்கள் மேலும் மேலும் தருவிக்கப்படுகின்றன. கிளிக்கு கூண்டு செய்தோர், சங்கிலி செய்தோர் என அனைவரும் அரசரின் பாராட்டையும் பரிசையும் பெறுகிறார்கள். இறுதியாக கிளி இறந்து விடுகிறது. கிளியின் படிப்பு பூர்த்தியாகி விட்டதாக அரசரிடம் தெரிவித்து கிளி அரசரிடம் எடுத்து வரப்படுகிறது.அரசர் அதன் உடலைத் தடவுகிறார். உள்ளே அடைக்கப்பட்டிருந்த புத்தக ஏடுகள் சலசலக்கின்றன.

இப்படி அக்கதையை முடிக்கும் தாகூர், கல்வி என்பது திணிப்பாக இல்லாமல் பண்போடு கூடிய வளர்ப்பாக இருக்க வேண்டும் என்பதைத்தான் சொல்கிறார்.
‘நன்றிது தேர்ந்திடல் வேண்டும். இந்த ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்?’ என்ற பாரதியின் கவிதைப்படி, ஊக்கத்துடன் சாதனை வாழ்வு வாழவும், வாழ்வின் மெய்ப்பொருள் உணரவும், நல்ல நல்ல கதைகளை பிள்ளைகளோடு நாமும் கேட்கவும் வாசிக்கவும் வேண்டும்.

இன்றைய யதார்த்தம், நாமே நம் பிள்ளைகளுக்கு சுயநலத்தை சொல்லிக் கொடுப்பவர்களாக இருப்பதை அன்றாடம் காண நேரிடுகிறது.

முந்தைய நாட்களின் கதைகளும் பாடல்களும் எல்லா இடங்களிலும் குறைந்து வருவதை மௌனமாக பார்த்துக் கொண்டிருப்பது, நம் பிள்ளைகளுக்கு நாம் செய்யும் நன்மையாக இருக்க முடியாது.

(மீண்டும் பேசலாம்!)