காஸ்ட்யூம் கலக்கல்



ஹோம் வொர்க்  +ஹார்டு வொர்க்=அங்கீகாரம்+சந்தோஷம்!

அனு பார்த்தசாரதி

காஸ்ட்யூம் டிசைனர் என்கிற வார்த்தைக்கு அடையாளம் கொடுத்தவர் அனு பார்த்தசாரதி. 18 வருடங்களாக தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி காஸ்ட்யூம் டிசைனராக கோலோச்சிக் கொண்டிருப்பவர். ‘ஜீன்ஸ்’ படத்தில் ஆரம்பித்த அனுவின் பயணம், இதோ ‘காஞ்சனா 2’ வரை தொடர்கிறது. ஜோதிகாவில் தொடங்கி, வித்யா பாலன், ஷில்பா ஷெட்டி என அனுவின் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டில் அத்தனை பேரும் பிரபலங்கள். ஆனாலும், அனுவின் பேச்சில் அலட்டல் இல்லை!

‘‘நேத்துதான் ஃபீல்டுக்கு வந்த மாதிரி இருக்கு. அதுக்குள்ள 17 வருஷங்கள் ஓடிப் போச்சு. எப்போதும் இல்லாத அளவுக்கு இப்ப நான் ரொம்ப நிறைவா, சந்தோஷமா ஃபீல் பண்றேன்...’’ - எனர்ஜி தூக்கலான அனுவின் பேச்சில் இறுதிவரை அது குறையாதது ஆச்சர்யம்.‘‘93ல காலேஜ் முடிச்சேன். ரிசல்ட்ஸ்கூட வரலை. ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் மகளா என்னை எல்லாருக்கும் தெரியும். பி.சி.ஸ்ரீராம் சார் கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டரா சேர்ந்தேன். அப்புறம் கொஞ்ச நாள் சாபு சிரில் கிட்ட விளம்பரப் பட டைரக்ஷன்ல வேலை பார்த்தேன். அந்த ரெண்டு அனுபவங்களும் நிறைய கத்துக் கொடுத்தது. இயல்பிலேயே எனக்கு எம்பிராய்டரிங் மேல அளவுகடந்த ஆர்வம் உண்டு.

அந்த ஆர்வம்தான் ‘ஜீன்ஸ்’ படத்துல ஜீவா மனைவி அனீஸோட சேர்ந்து ஒரு பாட்டுக்கு டிசைன் பண்ணினேன். அடுத்து ‘வாலி’யில சிம்ரன், அஜீத், ‘குஷி’யில விஜய், ஜோதிகானு என்னோட காஸ்ட்யூம் டிசைனிங் வேலை வேகமெடுக்க ஆரம்பிச்சது. திரும்பிப் பார்க்க நேரமில்லாத அளவுக்கு அத்தனை படங்கள்... அத்தனை ஆர்ட்டிஸ்ட்ஸ்...’’ - பெருமூச்சு விட்டு நிறுத்துபவருக்கு, நட்சத்திரங்களின் உடை அலங்காரங்களுக்குக் கிடைக்கிற முழு அங்கீகாரமும் காஸ்ட்யூம் டிசைனருக்கு மட்டுமே சேர்வதில் உடன்பாடில்லை.

‘‘பிளாக் அண்ட் ஒயிட் காலத்துல ஆர்ட் டைரக்டரும், கேமராமேனுமே காஸ்ட்யூமுக்கான ஸ்கெட்ச் போட்டுக் கொடுப்பாங்க. பாலுமகேந்திரா, மகேந்திரன் மாதிரியான டைரக்டர்ஸுக்கு பிரமாதமான கலர் சென்ஸ் உண்டுங்கிறதால ஆர்ட்டிஸ்ட்டோட காஸ்ட்யூம்ஸ் எப்படி இருக்கணும்னு அவங்களே ஒரு ஐடியா கொடுத்துடுவாங்க. எல்லா படங்களுக்கும் காஸ்ட்யூமர்னு ஒருத்தர் இருப்பார். அவரோட சேர்ந்துதான் காஸ்ட்யூம் டிசைனரான நாங்க ஒர்க் பண்றோம். டிசைனர் என்ற வார்த்தையும் வேலையும் பிரபலமாகாத காலத்துல காஸ்ட்யூமர்ஸ்தான் எல்லா வேலைகளையும் பார்த்தாங்க. இப்பவும் அவங்களோட துணை இல்லாம எங்களால ஒர்க் பண்ண முடியாது.

ஒரு படத்தோட காஸ்ட்யூம் டிசைனிங் பேசப்பட்டா, அதுல அவங்களுக்கும் பங்கு உண்டு...’’ - பெருந்தன்மையாகச் சொல்கிறார்.அனு அறிமுகமான காலத்தில் அனேக படங்களில் ஒன் உமன் ஷோவாக அவரே ஆடை அலங்காரத் துறையில் ஆட்சி செய்தார். இன்று படத்துக்குப் படம் புதிய முகங்களைப் பார்க்கிறோம். அவர்களில் நிலைத்து நிற்பவர்களை விரல் விடாமலேயே எண்ணி விடலாம். ஏன் இப்படி?

‘‘சினிமாங்கிறது ஸ்ட்ரெஸ் நிறைஞ்ச ஒரு துறை. அந்த ஸ்ட்ரெஸ்ஸை விரும்பறவங்களுக்குத்தான் இந்தத் துறையில தாக்குப் பிடிக்க முடியும்...’’ என்பவர் தனது அனுபவத்தையே உதாரணம் காட்டுகிறார்.‘‘‘தெனாலி’ படம் பண்ணிட்டிருந்தப்ப நான் நிறைமாச கர்ப்பம். வளைகாப்பு முடிஞ்ச அடுத்த நாளே செட்டுக்கு போயிட்டேன். அதே டைம்ல ‘ஸ்டார்’ படத்துக்கான காஸ்ட்யூம்ஸ் எல்லாம் ரெடி பண்ணி அனுப்பிட்டுத்தான் டெலிவரிக்கு போனேன். குழந்தை பிறந்த 15வது நாள் மறுபடி ஒர்க் பண்ண ஆரம்பிச்சிட்டேன். ‘டும் டும் டும்’ படத்துக்கான டிஸ்கஷன் போயிட்டிருந்த டைம்... வீட்ல குழந்தைக்குப் பால் கொடுத்துட்டு, அவனைத் தூங்க வச்சிட்டு, மணிரத்னம் சார்கூட டிஸ்கஷனுக்கு வருவேன். ‘குழந்தை எழுந்துட்டான்... உடனே வா’னு வீட்லேருந்து போன் வரும். ‘என்ன  விஷயம்’னு  கேட்பார் மணி சார். ‘குழந்தைக்குப் பால் கொடுக்கணும்னு கூப்பிடறாங்க’னு சொல்வேன்.

‘நான் வெயிட் பண்றேன்... போயிட்டு வா’னு சொல்லி அனுப்புவார். இப்பதான் குழந்தை பிறந்திருக்கு... ரெஸ்ட் எடுக்கணும்னெல்லாம் நான் எந்த வாய்ப்பையும் தட்டிக் கழிச்சதே இல்லை. குழந்தை பிறக்கறதுக்கு முன்னாடி எவ்ளோ பிஸியா இருந்தேனோ, அப்புறம் அதைவிட பிஸியா ஓடியிருக்கேன்...’’ என்பவர், இடையில் சில மாதங்கள் மட்டும் பிரேக் எடுத்த கதையையும் சொல்கிறார்.

‘‘‘மொழி’, ‘அபியும் நானும்’, ‘குருவி’னு பரபரனு இருந்த டைம்... அம்மாவுக்கு திடீர்னு உடம்பு சரியில்லை. 13 வருஷ ஓட்டத்துக்குப் பிறகு ஒரு பிரேக் எடுக்க வேண்டிய அவசியம் வந்தது. எனக்கு நானே எனர்ஜி ஏத்திக்க எனக்கும் அந்த இடைவெளி தேவைப்பட்டது. சில மாச ஓய்வுக்குப் பிறகு ‘ஆடுகளம்’ மூலமா மறுபடி பிஸியாக ஆரம்பிச்சேன். நான் ஷில்பா ஷெட்டியோட பயங்கரமான ரசிகை. அவங்ககூட ஒரு படம் ஒர்க் பண்ணணும்கிறது என்னோட நீண்ட நாள் கனவு. அதெல்லாம் நமக்கெங்கே நடக்கப் போகுதுனு நினைச்சிட்டிருந்த டைம், நடிகை ரேவதி தன்னோட இந்தி படத்துல ஒர்க் பண்ணக் கூப்பிட்டாங்க. அதுல ஹீரோயின் ஷில்பா ஷெட்டி. ‘கொஞ்சம்கூட கிளாமரே இல்லாத ஷில்பா ஷெட்டியா காட்டணும்’னு சேலஞ்சையும் வச்சாங்க ரேவதி. ரொம்ப மெனக்கெட்டு பண்ணினேன். ஷில்பாவுக்கும் நான் பண்ணின காஸ்ட்யூம்ஸ் ரொம்பப் பிடிச்சிருந்தது.

அவங்களோட நட்பு இன்னிக்கும் தொடர்ந்திட்டிருக்கு. ‘பரிணீதா’வுல வித்யா பாலனை பார்த்துட்டு, அவங்களுக்கு ஒரு படம் பண்ண மாட்டோமானு ஏங்கினேன். ‘குரு’வுல அதே வித்யாவுக்கு டிசைன் பண்ண மணி சார் கூப்பிட்டது இன்ப அதிர்ச்சி...’’ - ஆசைப்பட்ட எல்லாம் அப்படியே அமைந்ததில் அனுவுக்கு ஆத்மார்த்தமான ஆனந்தம்.

சமீபத்தில் வெளியான ‘அனேகன்’, மீண்டும் கோடம்பாக்க இயக்குநர்களை அனுவைத் தேட வைத்திருக்கிறது.‘‘அனேகன்’ படம் என் கேரியர்ல ரொம்பவே முக்கியமானது. 80ஸ் ஸ்டைல்ல பண்ணணும்னு சொன்னார் கே.வி.ஆனந்த். அது என்ன பெரிய விஷயம்னு நினைச்ச அடுத்த நொடியே, ‘80ஸ் ஸ்டைல்ஸை நிறைய பேர் நிறைய விதமா பண்ணிட்டாங்க. நீ என்ன புதுசா பண்ணப் போறேனு பார்க்கறேன்’னு ஒரு சவாலையும் வச்சார். எக்கச்சக்க ரெஃபரன்ஸ்... ஏகப்பட்ட ஹோம்ஒர்க்னு அந்தப் படத்துக்கும் ரொம்ப ஹார்டு ஒர்க் பண்ணினேன். அந்தப் படம் முடியற ஒரு வருஷம் வேற எந்தப் படத்தையும் கமிட் பண்ணலை. தொடர்ந்து குவிஞ்சிட்டிருக்கிற பாராட்டுகள் என் உழைப்புக்கு அங்கீகாரத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்திருக்கு...’’ என்பவர், அடுத்து ‘காஞ்சனா 2’வில் காஸ்ட்யூம் டிசைனர்.

‘‘இந்தப் படத்தையும் பெரிசா எதிர்பார்த்திட்டிருக்கேன். காஸ்ட்யூம் டிசைனரா எனக்குனு ஒரு இடம் கிடைச்சிருக்கு. அது மட்டுமே போதாது. படத்துக்குப் படம் என் திறமையை நான் நிரூபிச்சிட்டே இருக்கணும்...’’ - அடக்கமான பேச்சில் அசத்துகிறார் அனு.

காஸ்ட்யூம் டிசைனரா எனக்குனு ஒரு இடம் கிடைச்சிருக்கு. அது மட்டுமே போதாது. படத்துக்குப் படம் என் திறமையை நான் நிரூபிச்சிட்டே இருக்கணும்...