வல்லமை தாராயோ



குற்றச்சாட்டுகளுக்கு நல்லபதில் நாம்  ஜெயிப்பது மட்டுமே!

இயக்குநர் மதுமிதா

நூற்றாண்டு கொண்டாடக் காத்திருக்கும் தமிழ் சினிமா வரலாற்றில் 10 பெண் இயக்குநர்களின் பெயர்களைக் கூட நினைவுபடுத்திச் சொல்ல முடியவில்லை. பானுமதி, சுஹாசினி, ஸ்ரீப்ரியா, லட்சுமி ராமகிருஷ்ணன் போன்ற நடிகைகள் ஆசைக்காக ஒரு படம் இயக்கியதிலிருந்து அதிகபட்சமாக 3 படங்கள் வரை முயற்சித்திருக்கிறார்கள். அடுத்தகட்டமாக ப்ரியா, அஞ்சனா, ஐஸ்வர்யா தனுஷ், கிருத்திகா என சில பெண் இயக்குநர்கள் கவனிக்க வைத்தார்கள். இந்த சவால்களை எல்லாம் தாண்டி ‘மூணே மூணு வார்த்தை’ படம் மூலம் 4 படங்கள் இயக்கியவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் இயக்குநர் மதுமிதா. ‘வல்லமை தாராயோ’, ‘கொல கொலயா முந்திரிக்கா’ படங்களைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ‘மூணே மூணு வார்த்தை’யை முடித்திருக்கும் மதுமிதாவிடம் பேசினோம்...

‘‘எளிமையான நகைச்சுவை கலந்த காதல் கதை இது. ஆனால், காதல் சம்பந்தப்பட்ட வார்த்தைகளும் ஆங்கிலக் கலப்பும் இல்லாமல் தலைப்பு வேண்டும் என்று யோசித்த போதுதான், ‘ஐ லவ் யூ’ என்பதை ஞாபகப்படுத்தும் ‘மூணே மூணு வார்த்தை’ உருவானது’’ என்று டைட்டில் பற்றி அறிமுகம் கொடுத்தவர், இரண்டு மொழிகளில் படம் இயக்கிய அனுபவம் பற்றித் தொடர்கிறார்.

‘‘படப்பிடிப்புக்குக் கிளம்புவதற்கு முன் பட்ஜெட் முடிவு செய்வதற்காக தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண் சாரும்  நானும் பேசிக்கொண்டிருந்தோம். ‘தெலுங் கிலும் படம் எடுத்தால் வர்த்தகரீதியாக லாபம் கிடைக்கும். ஒன்றரை சினிமா எடுக்கும் செலவில் இரண்டு சினிமா எடுத்துவிடலாம்’ என்றார். மணிரத்னம் சார் மாதிரி ஒரு ஜீனியஸ் இயக்குநர் இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் படம் பண்ண முடியும். வளர்ந்து வருகிற என்னைப் போன்றவர்களுக்கோ இது மிகவும் சவாலான விஷயம். அதிலும் எனக்கு தெலுங்கு பேசத் தெரியாது. ஆங்கிலத்தில் பேசினால் எல்லா நடிகர்களுக்கும் புரியுமா என்பது சந்தேகம். அதனால், தெலுங்கு தெரிந்த ஒரு உதவி இயக்குநரை ஏற்பாடு செய்து, இரண்டு வாரங்களில் தெலுங்கிலும் ஸ்க்ரிப்ட் எழுதி, நடிகர்களை முடிவு செய்து படப்பிடிப்புக்குக் கிளம்பினோம். ஒரு காட்சி முடிந்ததும், ‘அர்ஜூன் வெளியில் வா... ராக்கி உள்ளே போ’ என்று இரண்டு விதமாக இயக்கியது மன அழுத்தம் தரும் விஷயம்தான் என்றாலும் அது புது அனுபவம்!

இன்று திரைப்படம் எடுப்பது 10 சதவிகித வேலைதான். படத்தை வெளியிடுவதும், மக்களைப் பார்க்க வைப்பதும்தான் 90 சதவிகித வேலை. வெள்ளிக்கிழமை வெளியாகிற படம் திங்கட்கிழமை வரை ஓடினாலே பெரிய விஷயமாகிவிட்டது. அதனால், இயக்குநராக எனக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதைவிட தயாரிப்பாளருக்கும் லாபம் கிடைக்க வேண்டும் என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் சார், லட்சுமி மேடம், பாக்யராஜ் சார், வெங்கி, அதிதி எனப் பலரும் கடினமாக உழைத்திருக்கிறோம். எல்லோரின் ஒத்துழைப்பும் கிடைத்ததால்தான் 70 நாட்களில் படத்தை முடிக்க முடிந்தது...’’

பெண் இயக்குநர்கள் தொடர்ந்து படங்கள் இயக்குவதில்லையே... ஏன்?‘‘ஒளிப்பதிவாளரோ, நடிகரோ படப்பிடிப்பு முடிந்தவுடன் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியும். பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபட முடியும். இயக்குநருக்கு அந்த படம்தான் வாழ்க்கை என்பதால் அதைப்பற்றியே 24 மணி நேரமும் யோசித்துக்கொண்டு, அதற்காகவே வேலை பார்க்க வேண்டியிருக்கும். ஆண் இயக்குநர் என்றால் வீட்டுக் கடமைகளை மனைவியோ, அம்மாவோ பார்த்துக்கொள்வார். அதனால் பிரச்னைகளுக்கு வாய்ப்பு இல்லை.

பெண் இயக்குநர்களுக்கோ குடும்பத்தை கவனித்துக் கொள்கிற பொறுப்பும் இருக்கிறது. அப்பா, அம்மா, கணவர், குழந்தைகள், குடும்பம், உறவுகள், இன்று இரவு என்ன சாப்பாடு என்பது வரை எல்லா விஷயங்களிலும் நம் மீதான எதிர்பார்ப்பு இருக்கும். வீட்டில் நடக்கிற ஒரு விசேஷத்தில் ஓர் ஆண் இயக்குநர் இல்லாவிட்டால், அவர் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் என்று பெருமையாகச் சொல்ல முடியும். ஆனால், ஒரு பெண் இயக்குநர் இல்லையென்றால், ‘அப்படியென்ன ஷூட்டிங் வேண்டியிருக்கு?’ என்று சொல்வார்கள்.

வீடு, குடும்பம், அதற்கு அடுத்ததுதான் வேலை என்று ஒரு பெண்ணால் இங்கு இயங்க முடியும். வழக்கமாக ஒரு பெண் தன்னுடைய துறையில் வெற்றிகரமாக இருக்க ஒரு குடும்பம் தருகிற ஆதரவைவிட, இரண்டு மடங்கு ஆதரவு தந்தால்தான் பெண் இயக்குநர்களால் சினிமாவில் சாதிக்க முடியும். நிலைமை அப்படி இல்லையே...படத்தின் ஒரு கேரக்டர் மது அருந்துகிற மாதிரி இருந்தால் கூட, ஒரு பெண் இப்படி படம் எடுக்கலாமா என்று கேட்பார்கள்.

சினிமாவில் அது ஒரு கேரக்டர் என்று நினைக்க மாட்டார்கள். ஒவ்வொரு காட்சியையும் இயக்குநருடன் தொடர்புபடுத்தி இப்படியெல்லாம் விதிமுறைகளை
உண்டாக்கினால் பெண்களால் எப்படி தொடர்ந்து இயங்க முடியும்? பெண் இயக்குநர்களின் மீதும் தவறு இருக்கிறது. ரொம்பவும் உணர்வுப்பூர்வமாக படங்களை எடுக்காமல் ஜனரஞ்சகமான படங்களை இயக்க வேண்டும். ஹிந்தியில் ஷாருக்கான் போன்ற பெரிய ஹீரோவின் நடிப்பில் ஃபராகான் போன்ற பெண் இயக்குநர் பிளாக்பஸ்டர் மூவி கொடுக்கிறார். அந்த மாற்றம் நம்மிடமும் வர வேண்டும். பெண் இயக்குநரை நம்பி பணம் முதலீடு செய்ய தயாரிப்பாளர்களும் முன் வர வேண்டும்...’’

‘நீங்கள் கௌதம் மேனனின் உதவி இயக்குநரே இல்லை...’, ‘மதுமிதாவுக்கு டைரக்ஷன் தெரியவில்லை’ என்றெல்லாம் ஆரம்பத்தில் வந்த விமர்சனங்களை எப்படி
எடுத்துக்கொண்டீர்கள்? ‘‘விமர்சனங்கள் நம்மை பாதிக்காது என்று பொய் சொல்லவெல்லாம் முடியாது. ஆனால், அந்த கஷ்டங்களை எல்லாம் தாண்டி வர வேண்டும். அந்த வேகம் எனக்குள் எப்போதும் உண்டு. அதை திமிர் என்று சொன்னாலும் சரி, ஆணவம் என்று சொன்னாலும் சரி, கொழுப்பு என்று சொன்னாலும் சரி... எனக்கு டைரக்ஷன் தெரியாமல் தமிழக அரசு விருது கொடுத்து விட மாட்டார்களே? 21 நாடுகளில் என் படம் திரையிடப்பட்டிருக்காது. பொருளாதார ரீதியாகவும் படம் வெற்றி பெற்றிருக்கிறது. நல்ல விஷயங்களை விட்டுவிட்டு யாரோ சிலர் விமர்சிப்பதை மட்டும் ஏன் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்?

‘வல்லமை தாராயோ’வுக்குப் பிறகு வீடு, குடும்பம் என்று நான் ஒதுங்கியிருந்தால், என் மேல் சுமத்திய குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மை என்று ஆகியிருக்கும். அப்படியெல்லாம் நான் விட்டுவிட்டுப் போய்விட மாட்டேன். இயக்குநராகவோ, தயாரிப்பாளராகவோ ஏதோ ஒரு வகையில் சினிமாவில்தான் வாழ்க்கை முழுவதும் இருப்பேன். நம் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் நல்ல பதில் நாம் ஜெயிப்பது ஒன்றுதான்!’’

வழக்கமாக ஒரு பெண்  தன்னுடைய துறையில்  வெற்றிகரமாக இருக்க  ஒரு  குடும்பம் தருகிற  ஆதரவைவிட, இரண்டு  மடங்கு  ஆதரவு  தந்தால்தான் பெண்  இயக்குநர்களால் சினிமாவில்  சாதிக்க முடியும்...

ஹிந்தியில் ஷாருக்கான் போன்ற பெரிய ஹீரோவின் நடிப்பில் ஃபராகான் போன்ற பெண் இயக்குநர் பிளாக்பஸ்டர் மூவி கொடுக்கிறார்...

- ஞானதேசிகன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்