ஹார்ட்டிகல்ச்சர்



தோழிகளுக்காக ஒரு தோட்டம்!

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வீட்டு வேலை,அலுவலக வேலை என எப்போதும் இரட்டைச் சுமை. வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் மன அழுத்தம் இருக்கவே செய்கிறது. பெண்களது மன அழுத்தத்தை போக்குவதில் தோட்டக்கலைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

ஆண்களுக்கு வாழ்க்கை அத்தனை கஷ்டமானதாக இருப்பதில்லை. மன அழுத்தத்தில் இருந்து விடுபட அவர்களுக்கு எத்தனையோ வழிகள் உள்ளன. செய்தித்தாள் படிப்பது, ஜிம் போவது, வாக்கிங் என எதை வேண்டுமானாலும் அவர்களால் எளிதில் செய்ய முடியும். பெண்களின் நிலைஅப்படியல்ல. காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்கிற வரை அவர்களுக்கு ஏதேனும் ஒரு யோசனை. காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளுக்கும் என்ன சமைப்பது, இன்று சரியான நேரத்துக்கு அலுவலகம் போய் விடுவோமா?

அலுவலக வேலைகளை முழுமையாக முடித்து விடுவோமா என ஏகப்பட்ட கவலைகள். இல்லத்தரசிகளுக்கும் கவலைகளுக்குப் பஞ்சமிருப்பதில்லை. வீட்டில் இருந்தாலும் ஏதோ ஒரு வேலை தொடர்ந்து கொண்டே இருக்கும். எப்படிப் பார்த்தாலும் எல்லா பெண்களுக்கும் ஏதோ ஒரு வருத்தம், மன அழுத்தம். தனக்காக நேரம் ஒதுக்கவோ, சிந்திக்கவோ முடிவதில்லை. பெண்களின் உடலில் இயற்கையாக உண்டாகிற மாற்றங்கள், ஹார்மோன் கோளாறுகள் போன்றவையும் சேர்ந்து கொண்டு அவர்களது மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன.

சில பெண்கள், ‘நான் 24 மணி நேரமும் உழைக்கிறேன்’ எனச் சொல்வதைக் கேட்டிருப்போம். ‘24 மணி நேரம் உழைக்கிறேன்’ என்பதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. அவர்களுக்கு நேர நிர்வாகம் தெரியவில்லை என்பதுதான் உண்மை. அந்த 24 மணி நேரத்தில் ‘குவாலிட்டி டைம்’ எனப்படுகிற பயனுள்ள பொழுது எவ்வளவு என்பதுதான் முக்கியம். இதற்கு முதலில் நம்மை நாம் ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் அதே 24 மணி நேரம்தான். 7 மணி நேரத்தைத் தூக்கத்துக்கு ஒதுக்குவதாக வைத்துக் கொள்வோம். மீதமுள்ள நேரத்தில் மற்ற வேலைகள் போக, வெறும் அரை மணி நேரத்தை நமக்காக ஒதுக்கிக் கொள்ளலாம். யோகா செய்யச் சொன்னாலோ, வாக்கிங் போகச் சொன்னாலோ 20-30 நிமிடங்களை எப்படி ஒதுக்குவது என யோசிக்கிறோம். இப்படியெல்லாம் யோசிப்பவர்களுக்கு தோட்டக்கலை சரியான சாய்ஸ். வீட்டிலேயே வெறும் 5 செடிகளோ, 10 செடிகளோ வைத்து தினமும் 20 நிமிடங்களை அவற்றுடன்செலவழித்தால் போதும். அது ஒருவிதமான உடற்பயிற்சியும் கூட. அது மறைமுகமான ஒரு தியானப் பயிற்சியாகவும் அமையும்.

செடிகளுடன் இருக்கும் போது பிராண வாயு கிடைக்கிறது. தூக்கி வைப்பது, மண்ணைக் குத்தி விடுவது, தண்ணீர் விடுவது என கைகளுக்கும் கால்களுக்கும் அது ஒருவித பயிற்சியாக இருக்கிறது. பசுமை நிறைந்த அந்தச் சூழல் உங்களுக்கு நாள் முழுவதற்குமான ஒரு புத்துணர்ச்சியைத் தரும்.‘இதெல்லாம் ஆகாத வேலை... எனக்கு அந்த 10-20 நிமிடங்கள் கூட கிடையாது. என்ன செய்ய?’ எனக் கேட்பவர்களும் உண்டு. அதற்கும் வழி உண்டு. வேலையிடத்தில் உங்களுக்கென ஒரு சின்ன கேபினோ, டேபிளோ இருக்குமில்லையா? அங்கே வாட்டர் சேவிங் பாட்ஸ் என வைத்துக் கொள்ளலாம். அது எப்படி இருக்கும் தெரியுமா? கீழே உள்ள ஒரு பகுதியில் தண்ணீர் இருக்கும். அதிலிருந்து செடி, தண்ணீரை எடுத்துக் கொள்ளும். இதை நீங்கள் உங்கள் டேபிளில் வைத்திருந்தால் தண்ணீர் வெளியே கசியாது. மண்ணும் வெளியில் கொட்டாது. மேல் மண் ஈரமாக இருப்பதால் கொசுவோ, வேறு பூச்சிகளோ வருமோ என்றும் பயப்படத் தேவையில்லை.

இதில் மேல் மண்அவ்வளவாக ஈரமாக இருக்காது. இண்டோர் பிளான்ட்ஸ் எனச் சொல்லப்படுகிற செடிகளை இதில் வைக்கலாம். அதாவது, அறையின் அந்த வெளிச்சத்தைத் தாங்கி வளர்கிற செடிகளை வைக்கலாம். இந்த மாதிரிச் செடிகளைப் பார்க்கிற அந்த சில நொடிகள் உங்கள் வேலைச் சுமை, மன அழுத்தம் எல்லாம் சட்டென மாறி, மனம் சமன்படும். ‘இதுவும் வாய்ப்பில்லை’ என்பவர்கள் மலர் அலங்காரம் செய்து வைக்கலாம். ஒரு சின்ன குடுவையில் ஒற்றை மலர்களை ஒரே மாதிரி வைப்பதும் உங்கள் மனதுக்கு அமைதி தரும்.

ஒரு வழக்கறிஞரைப் பார்க்கவோ, மருத்துவரைப் பார்க்கவோ போகிறோம் என வைத்துக் கொள்வோம். மருத்துவரைப் பார்க்கப் போகும் போது உடல் உபாதைகள் இருக்கும். வழக்கறிஞரைப் பார்க்கிறோம் என்றால் ஏதோ பிரச்னைகள் இருக்கும். இந்த இரண்டு இடங்களில் நுழையும் போதும் நாம் நார்மலான மனநிலையில் இருக்க மாட்டோம். அந்த வழக்கறிஞரோ, டாக்டரோ தன் டேபிளில் சிறியதாக ஒரு தொட்டியில் செடியோ, பூச்சாடியில் மலர் கொத்தோ வைத்திருப்பதைப் பார்த்தால் நமது மன அழுத்தமானது 15 சதவிகிதமாவது குறையும். மருத்துவரோ, வக்கீலோ நம் பிரச்னைக்குத் தீர்வு சொல்வார் என்கிற நம்பிக்கை கிடைக்கும். அதே போல நீங்கள் வேலை பார்க்கிற இடத்தில், உங்களை சந்திக்க யாரோ வருகிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் செய்த வேலை சரியில்லை எனத் திட்ட வருகிறார்கள். அப்படியொரு சூழலின் கடுமையைத் தணிக்கும் தன்மை உங்கள் டேபிளின் மேல் நீங்கள் வைத்திருக்கிற செடிகளுக்கும் பூக்களுக்கும் உண்டு. எப்படிப்பட்ட மனிதரையும் சமன்படுத்தும் சக்தி செடிகளுக்கு உண்டு. தோட்டங்களும் அதை நிரப்புகிற செடிகளும் உங்களுக்கு ஒரு செல்லப் பிராணி வளர்க்கிற உணர்வையும் உற்ற தோழி உடனிருக்கிற உணர்வையும் தரும். உங்கள் எண்ணங்களை அவற்றுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

வீட்டிலோ, வேலையிலோ ஒரு பிரச்னைக்கு உங்களால் முடிவெடுக்க முடியாத சூழல் என வைத்துக் கொள்வோம். உங்கள் செல்லச்செடிகளுக்கு தண்ணீர் விடுவது, காய்ந்த இலைகளை சுத்தப்படுத்துவது என அவற்றுடன் சில மணித்துளிகளை செலவழித்துவிட்டு மறுபடி உங்கள் பிரச்னை பற்றி யோசித்துப் பாருங்கள். மனம் புத்துணர்வு பெற்றிருக்கும். மனம் லேசானதும் வேலையின் மீதான உங்கள் கவனம் தானாக அதிகரிக்கும். வேலையின் மீதான சலிப்பு நீங்கும். இதை ஆணோ, பெண்ணோ, எந்த வயதினரும், எந்தப் பதவியில் இருப்பவரும் முயற்சி செய்யலாம்.

வீட்டிலேயே வெறும் 5 செடிகளோ, 10 செடிகளோ வைத்து தினமும் 20 நிமிடங்களை அவற்றுடன் செலவழித்தால் போதும். அது ஒருவிதமான உடற்பயிற்சியும்கூட. அது மறைமுகமான ஒரு தியானப் பயிற்சியாகவும் அமையும்.

அதென்ன டேபிள் டாப் பிளான்ட்ஸ்?

செடிகள் வைக்கும் இடத்தின் தரையில் துளிக்கூட தண்ணீர் சிந்தாது. அலுவலக டேபிள்களில் வைத்துக் கொள்ள வசதியானவை. பராமரிக்கச் சுலபமானவை.
தண்ணீரை மிச்சப்படுத்தக்கூடியவை. உள்ளே இருக்கும் பச்சை நிறகோப்பையில் தண்ணீர் வற்றியதும், அரை கப் தண்ணீர் விட்டால் போதும். ஒரு வார காலம் நீங்கள் விடுமுறை யில் சென்று விட்டாலும் தாக்குப் பிடிக்கக் கூடியது. மண்ணின் மீது ஈரம் தங்காது என்ப தால் கொசுத் தொல்லை இருக்காது.

இந்தச் செடிகளைப் பார்க்கிற அந்த சில நொடிகள் உங்கள் வேலைச் சுமை, மன அழுத்தம் எல்லாம் சட்டென மாறி, மனம் சமன்படும்!

எழுத்து வடிவம்: மனஸ்வினி
படங்கள்: ஆர்.கோபால்