என்ன எடை அழகே! சீசன்2



பத்திரிகை உலகின் முதல் ரியாலிட்டி தொடர் இது!

என்ன எடை அழகே’ பகுதியில் தேர்வானவர்களுக்கான தனிப்பட்ட டயட் பட்டியலையும், தேர்வாகாத மற்ற தோழிகளுக்கான பொதுவான டயட் பட்டியலையும் கடந்த இதழில் கொடுத்திருந்தார் டயட்டீஷியன் அம்பிகா சேகர்.‘சிறுதானியங்கள் சாப்பிட்டா ஈஸியா வெயிட் குறையும்னு எல்லாரும் சொல்றாங்களே... நிஜமா?’ என்கிற சந்தேகத்தை முன் வைத்தார்கள் ‘என்ன எடை அழகே’யில் தேர்வான தோழிகள். சிறுதானியங்களைப் பற்றிய விழிப்புணர்வுக்கும், அவற்றை எப்படி தினசரி உணவில் ஒரு பகுதியாக்குவது என்பதற்கான விளக்கத்துக்கும் ஏற்பாடு செய்தார் அம்பிகா சேகர்.

‘தமநி’ (தமிழர் மரபியல் நிறுவனம்) அமைப்பின் நிறுவனரான செந்தில்குமார், அடிப்படையில் சாஃப்ட்வேர் வேலையில் இருப்பவர்... காணாமல் போய்க்கொண்டிருக்கும் பாரம்பரிய வாழ்க்கை முறையின் அழகையும் ஆரோக்கியத்தையும் மீட்டுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்... தனது அமைப்பின் ஒரு பகுதியாக ‘பாவிகா’ (பாரம்பரிய விதைகளைக் காப்போம்) என்பதை ஒரு பிரசாரமாகவே செய்பவர்... செல்லுமிடங்களில் எல்லாம் சிறுதானியங்களின் சிறப்புகளைப் பற்றி முழக்கமிடுபவர்... ‘என்ன எடை அழகே’ தோழிகளுக்காகவும் பேச முன் வந்தார்.

எடைக் குறைப்புக்கு உதவுகிற சிறுதானியங்களில் நம்பர் 1 இடம் ‘மாப்பிள்ளை சம்பா’ என்கிற அரிசிக்கு என்றார் செந்தில். அதில் நார்ச்சத்து மிக அதிகம் என்பதே காரணம். அதற்கடுத்த இடங்களில் குதிரைவாலியும், வரகு, சாமையும் இருக்கின்றனவாம். நாம் எடுத்துக்கொள்கிற பாலீஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியில் கார்போஹைட்ரேட்டை தவிர வேறு ஒன்றுமே இல்லாததையும், ‘அரிசியைத் தவிர்க்க முடியாது, எடையையும் குறைக்க வேண்டும்’ என்கிறவர்களுக்கு மாப்பிள்ளை சம்பாவும் குதிரைவாலியும் வரகு, சாமையும் சரியான மாற்று என்றும் தகவல் தந்தார்.

சிறுதானியங்களைத் தேர்ந்தெடுக்கும் முறை முதல் சமைக்கிற விதம் வரை சகலத்துக்கும் அவர் சொன்ன டிப்ஸ், தோழிகளுக்கு சுவாரஸ்யம் உருவாக்கியது. ‘பெரும்பாலான கடைகளில் கிடைக்கிற மிளகு, சீரகம் கூட எண்ணெய் நீக்கப்பட்ட வெறும் சக்கையே’ என்றவர், கடைசியாகச் சொன்ன தகவல் ஆரோக்கியம் விரும்பும் அனைவருக்குமானது.

‘‘உங்கள் வாழிடத்திலிருந்து அதிக பட்சம் 100 கி.மீ. தூரத்துக்குள் விளைகிற காய்கறி, பழங்களை மட்டுமே உண்ணுங்கள். விலை உயர்ந்த கலிஃபோர்னியா ஆப்பிளும் ஆஸ்திரேலியா ஸ்ட்ராபெர்ரியும் அவசியமே இல்லாதவை!’’

உங்கள் வாழிடத்திலிருந்து அதிகபட்சம் 100 கி.மீ. தூரத்துக்குள் விளைகிற காய்கறி, பழங்களை மட்டுமே உண்ணுங்கள். விலை உயர்ந்த கலிஃபோர்னியா ஆப்பிளும் ஆஸ்திரேலியா ஸ்ட்ராபெர்ரியும் அவசியமே இல்லாதவை!

செந்தில் சொன்ன முறைப்படி சிறுதானிய அடை செய்து தோழிகளுக்குப் பரிமாறினார் அம்பிகா சேகர்.

அதன் செய்முறை...

ஒரு கப் வரகு, கால் கப் கடலைப் பருப்பு, கால் கப் துவரம் பருப்பு ஆகியவற்றைத் தனித்தனியே 1 மணி நேரமும், கால் கப் கம்பை மட்டும் 4 மணி நேரமும் ஊற வைக்கவும். பிறகு எல்லாவற்றையும் ஒன்றாக, தேவையான அளவு இஞ்சி, காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து அரைத்து உப்பு சேர்க்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து அடையாக வார்க்கவும்.

‘அரிசியைத் தவிர்க்க முடியாது, எடையையும் குறைக்க வேண்டும்’ என்கிறவர்களுக்கு மாப்பிள்ளை சம்பாவும் குதிரைவாலியும் வரகு, சாமையும் சரியான மாற்று!

படம்: ஆர்.கோபால்