நின் கைத்தலம் பற்ற கனாக்கண்டேன்



பெங்களூரை சேர்ந்த வெரோனிகாவின் தற்போதைய பெயர் வருண். பத்து ஆண்டுகளுக்கு முன் அப்பா இறந்து விட தாயின் அரவணைப்பில் வளர்ந்த மூன்று குழந்தைகளில் ஒருவர் வெரோனிகா. பிளஸ் 2 படிப்போடு குடும்பச் சூழல் காரணமாக ஒரு கடையில் வேலைக்குச் சென்றார். வெரோனிகா வளர் இளம் பருவத்தை எட்டிய போது ஆண் போல உடுத்திக் கொண்டார். தனது பெயரையும் வருண் என மாற்றிக் கொண்டார்.

ஏன்? அவர் தன்னை ஆணாக உணர்ந்ததால்தான் அவ்வாறு நடந்துகொண்டார். ஆணாய்ப் பிறந்த ஒருவர் தன்னை பெண்ணாய் உணர்ந்தால் அவர் திருநங்கை என்று அழைக்கப்படுகிறார். பெண்ணாய்ப் பிறந்த ஒருவர் ஆணாக உணர்ந்தால் அவர் திருநம்பி என்று அழைக்கப்படுவார். வெரோனிகா தான் ஒரு திருநம்பி என்பதை உணர்ந்தார். அதனால் வருணாக மாறினார்.

வருண் தனது தோழியின் வீட்டுக்குச் செல்லும்போது பழக்கம் ஆனவர் மாலினி. இருவருக்குமிடையே துளிர்த்த காதல் ஓர் ஆண் - பெண் காதல் போன்றதே.  வெறுமனே காதல் என்றாலே சிக்கல்தான் இச்சமூகத்தில். இதில் ஒரு திருநம்பியைக் காதலித்தால்? மாலினி வீட்டில் முதலில் பிரச்னை வெடித்தது. வருணுடன் பேசக் கூடாது. பேசினால் வருண் முகத்தில் ஆசிட் வீசிக் கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். மாலினிக்கு திருமணம் செய்து வைக்கவும் ஏற்பாடுகள் நடந்துள்ளன.

வருண் வீட்டிலும் பூகம்பம் வெடித்தது. வருணுக்கும் திருமணம் செய்து வைக்க உறவுகள் முடிவு செய்தன. மாலினியை வீட்டில் சிறை வைத்து இருவரும் சந்திக்கவும், போனில் பேசவும் தடை விதித்தனர். அன்பைத் தொடர முடியாத இரண்டு மனதிலும் வேதனை புரட்டி எடுத்தது. தங்களைச் சுற்றி உருவாக்கப்பட்டிருக்கும் தடைகளைத் தகர்த்து வெளியில் வந்தனர். பிடித்த வாழ்க்கையை ரசித்து வாழ இருவரும்  மதுரை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

வருணுக்கு வயது 22, மாலினிக்கு 19 வயது. இருவரும் மேஜர் என்பதால் ‘எங்களது வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுக்கும் உரிமை எங்களிடம் உள்ளது’ என வாழ வழி தேடி பெங்களூரை விட்டு சில நாட்களுக்கு முன்னர் வெளியேறினர். சென்னை, கோவை என்று அலைந்து அவர்கள் தற்பொழுது மதுரையில் உள்ள திருநங்கை பாரதி கண்ணம்மாவின் பராமரிப்பில் உள்ளனர். ‘‘நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ வேண்டும். எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்” என மதுரை உயர்நீதி மன்றத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்தை அணுகி  கோரிக்கை விடுத்துள்ளனர்.

“எங்களது அன்பை சமூகம் கொச்சைப்படுத்துகிறது, உறவுகள் கொல்வதற்கும் தயாராக உள்ளனர். உணர்வுகளை புரிந்து கொள்ளாத, அன்பில்லாத சூழலில் வாழ்வதே நரகம் அல்லவா? ” என்கிறார்கள் இவர்கள். ‘‘வளர வளர எனக்கு ஆண் போல உடுத்திக் ெகாள்ள பிடித்தது. எனது ஹேர்ஸ்டைலையும் மாற்றிக் ெகாண்டேன். இதற்காக அம்மா வீட்டில் திட்டும், உறவுகளும் என்னை கிண்டல் செய்தனர். எனக்கோ அப்படி இருக்கத்தான் பிடித்தது. எனக்கு திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகி விடும் என்றனர். என்னையும் திருமணத்துக்கு வற்புறுத்தி வந்தனர்.

ஓர் ஆணை திருமணம் செய்து கொண்டு வாழ்வதை என்னால் கற்பனை கூட செய்ய முடியாது. என் வாழ்வில் மாலினிதான் முக்கியம். மாலினி வீட்டில் கொஞ்சம் வசதியும் இருந்தது. அவரை என்னுடன் பழக விடாமல் தடுத்தனர். மிரட்டல், ெகாடுமைகள் என இரண்டு வீடுகளும் எங்களை புழுக்களைப் போல நடத்தியது. ஒருகட்டத்தில் இருவரும் ேபசவும், பார்க்கவும் கூட முடியாமல் போனது. வீட்டை விட்டு வெளியேறி எங்காவது போய் வேலை பார்த்து பிழைத்துக் கொள்ளலாம் என்று முதலில் சென்னை வந்தோம். அங்கே ஹாஸ்டலில் தங்கி வேலை தேடினோம். பின்பு இருவரும் கோவை வந்து வேலை தேடினோம். கையில் காசும் இல்லை.

சாப்பிட எதுவும் கிடைக்காமல் பசியில் அலைந்தோம். கையில் இருந்த இருவரது போனையும் விற்றோம். அதில் கிடைத்த நான்காயிரம் ரூபாயில் சாப்பிட்டு கோயில் மற்றும் பொது இடங்களில் தங்கியபடி வேலை தேடினோம். யாரும் எங்களுக்கு வேலை கொடுக்கவில்லை. ஒரு வாரம் கழித்து ஏமாற்றத்துடன் மதுரைக்கு சென்றோம். அன்று காலை முதல் இரவு வரை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இருந்தோம். இரவில்  வெளியில் வந்த போது அடுத்து எங்கு செல்வது என்று தெரியவில்லை.

இருவரும் பெண்கள் என்பதால் பயம் கவ்வியது. அப்போதுதான் மாலினி எங்களைப் போன்றவர்களுக்கு திருநங்கைகள் தான் உதவுவார்கள் என்று சொன்னார். பக்கத்தில் உள்ளவர்களிடம் காணாமல் போன தம்பியை தேடி வந்திருப்பதாகவும், திருநங்கைகள் விலாசம் தரும்படியும் கேட்டோம். அவர்கள் எங்களை பாரதி கண்ணம்மாவிடம் அழைத்துச் சென்றனர். அவர் எங்களது கதையைக் கேட்டு அடைக்கலம் கொடுத்தார்.

எங்களது உணர்வுகளைப் புரிந்து ெகாண்ட பாரதி கண்ணம்மா எங்களுக்கு சட்டப்படி பாதுகாப்பு அளிக்க இலவச சட்ட உதவி மையம் மற்றும் வழக்கறிஞர்களுடனும் பேசி வருகிறார். இங்கு கவுன்சிலிங் கொடுக்கும் காவல்துறையினர் மற்றும் வழக்கறிஞர்கள் எங்களது ஊரில் சென்று வாழச் சொல்கின்றனர். பெங்களூர் சென்றால் எங்களைக் கொன்று விடுவார்கள். எங்களது படிப்புக்கு ஏற்ற வேலை பார்த்தபடி ஒரு விடுதியில் தங்கும் வசதி கிடைத்தால் கூடப் போதும். இங்கேயே இருந்துவிடுவோம்’’ என்கிறார் வருண்.

இனி மாலினி, ‘‘என் வீட்டில் சின்ன வயதில் இருந்து அவர்களுக்குப் பிடித்த மாதிரிதான் வளர்த்தார்கள். சின்னச் சின்ன விஷயத்தில் கூட அவர்களுக்கு பிடித்த மாதிரித்தான் இருந்தேன். சுயமாக சிந்திக்கவோ, எனக்குப் பிடித்ததை செய்யவோ வாய்ப்பே இல்லை. பெற்றோர் சொல்லிவிட்டார்களே என்று பிடிக்காத ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு வாழும் வாழ்க்கை ேபாலியானது. என்னால் அப்படி வாழ முடியாது. இவ்வளவு நாள் அவர்களுக்குப் பிடித்த மாதிரி நான் இருந்தேன். இப்போது நான் மேஜர்.

எனக்குப் பிடித்த வாழ்வை வாழ ஆசைப்படுகிறேன். எனது உணர்வுகளை வருணால்தான் முழுமையாக புரிந்து கொள்ள முடியும். சக பயணிகள் போல எங்களது விருப்பங்களை பகிர்ந்து கொண்டு வாழப் போகிறோம். இருவரும் வேலைக்கு போய், சம்பாதித்து சுயமாக வாழப் போகிறோம். எல்லோரையும் போல நாங்கள் வாழ முடியாதா? நாங்கள் மனிதர்கள் இல்லையா? எங்களுக்கான மனித உரிமையை இந்த சமூகம் புரிந்து கொண்டு மதிக்க வேண்டும். எங்களில் இருந்து இந்த சமூகம் மாற்றி சிந்திக்கத் துவங்கட்டும்,’’ என்கிற மாலினியின் வார்த்தைகள் மனித உணர்வுகளுக்கு எதிரான மூடநம்பிக்கைகளை குத்திக்கிழிக்கிறது.

இவர்கள் இருவருக்காகவும் போராடி வரும் திருநங்கை பாரதி கண்ணம்மா கூறுகையில், ‘‘இது உணர்வு ரீதியான போராட்டம். இருவரது உணர்வுகளையும் நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. உடலளவில் இருவருமே பெண்தான். வருண் பெண் வடிவத்தில் இருந்தாலும் தன்னை ஆண் போல உணரும் திருநம்பி. இந்த சமூகம் எதிர்பார்ப்பது போல அவனால் ஓர் ஆணை திருமணம் செய்து கொண்டு வாழ முடியாது. ஆணுக்கு மணமுடித்து வைத்தால், திருமணத்தின் அடிப்படையாக இருக்கும் தாம்பத்ய உறவில் வருணுக்கு மிகப்பெரிய அளவில் நாட்டம் இருக்காது. 

இது விரைவில் அவர்களுக்குள் விரிசலை ஏற்படுத்தும். இப்படி நடத்தி வைக்கப்படும் திருமணம் விவாகரத்தில்தான் முடியும். அப்போது வருண் பழிச்சொற்களோடு தனியாக நிற்க வேண்டிய நிலை உருவாகும். திருநம்பிக்கும், பெண்ணுக்கும் அன்பால் ஈர்ப்பு ஏற்படுவது இயல்பான ஒன்றே. இவர்களுக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்கவில்லை. இருவரது அன்பையும் கொச்சைப்படுத்தத் தேவையில்லை. ஆணும் பெண்ணும் லிவிங்டுகெதர் பாணியில் வாழ்கின்றனர். திருநங்கைகள் ஆணை திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றனர்.

அதுபோல் இவர்களும் வாழவேண்டுமென நினைக்கின்றனர். டெல்லி, மும்பை ஆகிய பகுதிகளில் திருநம்பிகள் தங்களது மார்பக சிகிச்சை மற்றும் கருப்பையை எடுத்துவிட்டு டெஸ்ட்டோஸ்டிரான் ஹார்மோன் ஊசி போட்டுக் கொண்டு ஆணைப் போலவே வாழ்கின்றனர். பலர் பெண்ணுடன் இணைந்து வாழ்கின்றனர். பெற்றோரின் அச்சுறுத்தல் காரணமாக முதல் முறையாக இவர்கள் பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளனர். மேலும் தங்களது விருப்பத்துக்கு மாறாக வேறு ஆணுடன் திருமணம் செய்து வைக்கக் கூடாது, தங்களது உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.

காலம் காலமாக பெண்ணென்றால் ஆணை திருமணம் செய்து இனவிருத்தி செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் ஊறியவர்கள் பெற்றோர். அவர்களுக்கும் கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரவர் மனநிலையில் நின்று இந்த விஷயத்தை அணுக வேண்டியுள்ளது. போலீசார் மற்றும் உளவியல் ஆலோசகர்கள் முன்னிலையில் மாலினி மற்றும் வருண் பெற்றோருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

நாங்கள் திருநங்கைகளாக இருப்பதால் உணர்வுப்பூர்வமாக இதில் உள்ள நியாயங்களை எடுத்துக் கூற முடிகிறது. இந்த உணர்வுப் போராட்டம் எந்த வகையிலும் சிதைக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக கையாள்கிறோம். இது இரண்டு உயிர்களுக்கான உரிமைப் போராட்டம், ’’ என்கிறார் பாரதி கண்ணம்மா. வருண், மாலினி கேள்விகளில் இருக்கும் நியாயங்களை புரிந்து கொள்ள இந்த சமூகம் தனது கண்களையும், மனதையும்  தயார்படுத்திக் கொள்ளட்டும்.

- யாழ் ஸ்ரீதேவி