மழைக்காலச் சுற்றுலா



மழைக்காலம்

கோடை விடுமுறையில் கோடை வாசஸ்தலங்களுக்கு குடும்பத்தோடு சென்று, இரண்டு மூன்று நாட்கள் சுற்றி விட்டு, நிறைய புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அதன் நினைவுகளோடு ஊர் திரும்புவதுதான் நம்மில் பெரும்பாலானோரது சுற்றுலா அனுபவமாக இருக்கும். ஊட்டி என்றால் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லத்துடன் நமது சுற்றுலா நிறைவு பெற்று விடுகிறது.

இயற்கையின் பேரழகைக் கண்டு களிப்புறுவதற்கு மசினக்குடி போன்ற இடங்கள் நமது சுற்றுலா பட்டியலில் இருக்காது. சுற்றுலா என்பது அளப்பரிய அனுபவத்தைத் தரவல்லதாய் இருக்க வேண்டும். வந்து விட்டது மழைக்காலம். இந்த மழைக்காலத்திலும் நீங்கள் தாராளமாக ஒரு சுற்றுலா சென்று வரலாம். நிச்சயம் அது உங்களுக்கு ஓர் பேரனுபவத்தைத் தரும். மழைக்காலத்துக்கு உகந்த தட்பவெப்பநிலை கொண்ட, பாதுகாப்பான சுற்றுலாத்தலங்கள் சிலவற்றைப் பற்றியான குறிப்புகள் உங்களுக்காக...

அந்தமான்

குட்டிக் குட்டியாய் நூற்றுக்கும் மேற்பட்ட தீவுகளால் ஆனது அந்தமான்&நிகோபர் தீவுகள். இன்னமும் பலர் இதை வெளிநாடு என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இது இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்று. இதன் தலைநகரம் போர்ட் ப்ளேயர். இங்குள்ள பல தீவுகளில் காட்டுவாசிகள் தங்களது தொன்மை மாறாமல் வாழ்ந்து வருவதால் அந்தத் தீவுகளுக்குச் செல்வதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை. குறிப்பாக சென்டினல் பழங்குடிகள் வாழும் தீவுகளில் அந்நியர்களின் காலடித் தடம் பதியக் கூட அவர்கள் அனுமதித்ததில்லை.

சுற்றுலாப் பயணிகளுக்கென்றே பல தீவுகள் இருக்கின்றன. சீர்கெட்டுப் போன சுற்றுச்சூழலில் வாழ்ந்து வருகிறவர்களுக்கு, பெரிதளவில் சூழல் சீர்கேட்டுக்கு ஆளாகாத அந்தமான் புது அனுபவமாக இருக்கும். போர்ட் ப்ளேயர் நகரத்துக்குள்ளேயே அந்தமான் சிறை, ஆசியாவிலேயே மிகப்பெரிய மர அறுப்பு தொழிற்சாலையான சா மில், மானுடவியல் அருங்காட்சியகம், ரோஸ் தீவு, நார்த் பே தீவு ஆகியவை உள்ளன. நார்த் பே தீவில் ஸ்கூபா டைவிங் மற்றும் கடல் நடை (sea walk) ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. படிகம் போன்று சுத்தமாக இருக்கும் கடல் நீருக்குள் மூழ்கி நாம் பார்த்தேயிராத கடல் உயிரினங்களை ஸ்கூபா டைவிங்கில் பார்க்கலாம்.

போர்ட் ப்ளேயர் பேருந்து நிலையத்திலிருந்து பல பகுதிகளுக்கு பேருந்து வசதி இருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறைதான் என்பதால் விசாரித்து அறிவது நலம். மிடில் அந்தமான் பாரா தாங்கில் உள்ள அலையாத்திக் காடுகளும் சுண்ணாம்புப் பாறை குகையும் நல்ல அனுபவத்தைத் தரும். ஜார்வா எனும் ஆதிவாசி மக்கள் உலவும் பகுதி என்பதால் அவர்களை பார்க்கவும் வாய்ப்பிருக்கிறது.

ஆனால், அவர்களிடம் பேசுதல், அவர்களுக்கு உணவு கொடுத்தல் மற்றும் புகைப்படம் எடுத்தல் சிறைத்தண்டனைக்குரிய குற்றம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். போர்ட் ப்ளேயரில் சர்வதேச விமான நிலையம் இருக்கிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களிலிருந்து விமானத்தில் செல்லலாம். இரண்டரை மணி நேர விமானப் பயணத்தில் அந்தமானை அடைய முடியும். நேரம் இருக்கிறவர்கள் கப்பலில் செல்லலாம். வாரத்துக்கு இரு முறை சென்னையிலிருந்து அந்தமானுக்கு கப்பல் புறப்படுகிறது.

மேகமலை

தேனி மாவட்டத்தில் இருக்கிறது மேகமலை. மேகங்கள் தவழும் மலை என்கிற அர்த்தத்தில் இதற்கு மேகமலை எனப் பெயர் வந்ததாகக் கூறுகின்றனர். சின்னமனூரிலிருந்து பிரிந்து செல்லும் மலைப்பாதை வழியே சென்று மேகமலையை அடையலாம். காபித்தோட்டங்களும், தேயிலைத்தோட்டங்களும் நிறைந்து காணப்படும் மேகமலை பச்சையான போர்வையைப் போர்த்திக் கொண்டது போல் இருக்கும்.

பசுமையைத் தவிர வேறேதும்இல்லை என்பது போல் இயற்கையின் ஆட்சி நிலை கொண்டிருக்கும் மேகமலைக்குச் சென்று வரலாம். அங்கே தங்குவதற்கென உள்ளாட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் பயணிகள் விடுதி இருக்கிறது. தனியார் ரிசார்டுகள் சில இருந்தாலும் அவை பராமரிப்பின்றி இருக்கும். மேகமலையைச் சுற்றி பச்சக்குமாச்சி, மகாராஜா மெட்டு, இரவங்கலார் என சில கிராமங்கள் இருக்கின்றன.

இங்குள்ள தூவானம் அணை நீர்தான் சுருளி அருவிக்கு வருகிறது. தூவானம் அணையிலிருந்து பார்க்கும்போது கம்பம் பள்ளத்தாக்கின் காட்சி தெரியும். தமிழ்நாடு அரசால் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டிருந்தும் சுற்றுலாத்தலத்துக்கான வசதிகள் பலவும் செய்யப்படவில்லை. பேருந்தும் கூட குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும்தான் இருக்கிறது. சில குறைபாடுகள் இருந்தாலும் மேகமலையின் எழில்மிகு காட்சி அவற்றை மறக்கச் செய்து விடும். மேகமலையிலிருந்து சென்னை: 550 கி.மீ, கோவை: 263 கி.மீ, மதுரை: 116 கி.மீ, திருச்சி: 219 கி.மீ.

ஆலப்புழா

கேரளாவில் இருக்கிறது இந்தியாவின் வெனிஸ் என புகழப்படும் மிதவை நகரம் ஆலப்புழா. கழிமுகத்தில் உருவாகி உள்ள இந்நகரில் காணுமிடமெல்லாம் நீராக இருப்பதால் இது நீரில் மிதக்கும் நகரமாக உவமைப்படுத்தப்படுகிறது. படகுப் போக்கு வரத்து கொண்டாட்டமான ஒன்று. நீரால் சூழ்ந்திருக்கும் அந்நகரே ஓர் அழகுதான். படகுப் போக்குவரத்துத் துறையின் பயணிகள் படகில் மக்களோடு மக்களாக சென்று வருவது நல் அனுபவமாக இருக்கும். டிக்கெட் 6 ரூபாயிலிருந்து 10 ரூபாய்க்குள்தான் இருக்கும். அதுவே தனிப்பட்ட முறையில் படகை வாடகைக்கு எடுத்துக் கொண்டும் வலம் வரலாம்.

பத்துக்கும் மேற்பட்டோர் செல்லும் நிலையில் இல்லப்படகு (house boat) வாடகைக்கு எடுக்கலாம். 24 மணி நேரக் கணக்கில் அது வாடகைக்கு விடப்படுகிறது. படகிலேயே தங்குமிடம், சமையலறை என சகல வசதிகளும் அடங்கியிருக்கும். மழையளவு அதிகம் கொண்ட கேரளத்தில் எங்கு திரும்பினாலும் பச்சையாகவும், ஈரப்பதத்துடனுமேதான் இருக்கும். அதுவும் மழைக்காலத்தில் கேரளத்துக்குச் செல்வதென்பது மேலும் அலாதியான அனுபவமாய் இருக்கும். ஆலப்புழாவிலிருந்து சென்னை: 705 கி.மீ, கோவை: 233 கி.மீ, மதுரை: 275 கி.மீ, திருச்சி: 374 கி.மீ.

கோவா

கோவா என்றாலே மணமுடிக்காத வாலிபர்களுக்கான கொண்டாட்டத்தலம் என்கிற பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே  வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை புரியும் இடம் கோவாதான். இது யூனியன் பிரதேசம் என்பதால் இரட்டைக் குடியுரிமை உள்ள பிரெஞ்ச் மக்கள் பலரைப் பார்க்க முடியும். இது கடற்கரை நகரம். கோவாவின் கடற்கரைகள் அவ்வளவு அழகு. பளிங்கு போல் தெரியும் அரபிக்கடல் நீரில் குளித்து மகிழலாம்.

கடலுக்குள்ளேயே ஆங்காங்கே தெரியும் குன்றுகளின் காட்சி பேரற்புதமாக இருக்கும். கோவாவில் நீர் விளையாட்டுகள் பிரசித்தி பெற்றவை. ஸ்கூபா டைவிங், பாராசூட், வாட்டர் பைக் என விதம் விதமான விளையாட்டு களில் நேரம் கடந்து போவதே தெரியாது. கோவாவில் 35க்கும் மேற்பட்ட கடற்கரைகள் இருக்கின்றன. இவற்றில் கண்டோலிம், காலாங்கூட், பாகா ஆகிய கடற்கரைகள் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்தேர்வாக இருக்கின்றன. எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியை விரும்புவோர் தெற்கு கோவாவில் உள்ள  கடற்கரைகளுக்குச் செல்லலாம்.

கடற்கரைக் காட்சி தெரியும்படியான தங்கும்  விடுதிகளும், உணவகங்களும் உண்டு. கோவா செல்ல வாரம்தோறும் வெள்ளிக்கிழமை  சென்னையிலிருந்து வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் உள்ளது. மற்ற நாட்கள் எனில்  பெங்களூர் சென்று மாற வேண்டும். ஆம்னி பஸ்களும் இருக்கின்றன. சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களிலிருந்து விமானங்கள் இருக்கின்றன. கோவாவிலிருந்து ஹூப்ளி வழியாக மேற்கொள்ளும் ரயில் பயணம் அவ்வளவு இனிமையானதாக இருக்கும். கர்நாடகக் காடுகளைக் கடந்து வரும் ரயிலின்  புறக்காட்சிகளை கண்டு களிப்புறலாம். மலைகளிலிருந்து வழிந்தோடும் ஓடைகள்  ரயிலுக்குள்ளும் கொட்டுகிற அனுபவம் அபாரமானதாய் இருக்கும். கோவாவிலிருந்து சென்னை: 916 கி.மீ, கோவை: 827 கி.மீ, மதுரை: 1004 கி.மீ, திருச்சி: 910 கி.மீ.

வால்பாறை

தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என அழைக்கப்படும் இடம் வால்பாறை. அதிகம் மழை பெய்யும் இடமான வால்பாறைக்கு எல்லா நாளுமே சீசன்தான் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு  உட்பட்ட வால்பாறைக்கு  தமிழகத்திலிருந்து செல்ல வேண்டுமென்றால் பொள்ளாச்சி வழியாகச் செல்லலாம். தேயிலைத்தோட்டங்களால் நிறைந்திருக்கும் வால்பாறையின் சிறப்பம்சம் அதிக குளிரும், அதிக வெப்பமும் இல்லாத மிதமான தட்பவெப்பநிலைதான்.

லோயர் பள்ளத்தாக்கு, அக்காமலை, கல்லார் அணை, சோலையாறு அணை, நல்லமுடி பள்ளத்தாக்கு என வால்பாறையைச் சுற்றி வரலாம். வால்பாறை ஒரு நகராட்சியும் கூட. இங்கு தங்குமிட வசதிகள் தொடங்கி உணவகங்கள் வரை அனைத்துத் தரப்பினருக்குமான அளவிலும் இருக்கின்றன. வால்பாறை அதிக செலவில்லாத எளிமையான பயணமாக இருக்கும். வால்பாறையிலிருந்தே கேரளாவுக்கும் செல்ல முடியும். ‘புன்னகை மன்னன்’ அருவி எனச் சொல்லப்படும் அதிரப்பள்ளி அருவி 76 கி.மீ. தொலைவில்தான் உள்ளது. வால்பாறையிலிருந்து சென்னை: 603 கி.மீ, கோவை: 110 கி.மீ, மதுரை: 238 கி.மீ, திருச்சி: 275 கி.மீ.

பாபநாசம்

அகத்தியர் எழுந்தருளிய மலை என்கிற தொன்மத்தைக் கொண்ட பொதிகை மலையின் அடிவாரத்தில் இருக்கிறது பாபநாசம். பாபநாசத்தின் நிலவியல் அமைப்பே அவ்வளவு அற்புதமானது. இங்கிருந்து 30 கிலோ மீட்டரில்  குற்றாலம் இருக்கிறது. தலையணை வழியாகச் சென்றோமேயானால் அகத்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோயில், பானத்தீர்த்தம் அருவி என வரிசையாக அருவிகளால் நிறைந்திருக்கும். எந்தக் கலப்பும் இல்லாது தூய்மையான, மூலிகை மணம் கமழும் தாமிரபரணி ஆற்று நீரில் நீராடும் வாய்ப்பு இந்த அருவிகளில் கிடைக்கப்பெறும்.

பாபநாசத்திலிருந்து அம்பாசமுத்திரம் வழியே மாஞ்சோலைக்குச் செல்லலாம். மாஞ்சோலைக்குச் செல்லும் வழியிலேயே மணிமுத்தாறு அணையும், அருவியும் இருக்கிறது. அதைக் கடந்து மலைப்பாதையில் பயணப்பட்டால் மாஞ்சோலையை அடையலாம். மனதுக்கு இதமான தட்பவெப்ப நிலை அங்கு நிலவும். சுற்றிலும் பச்சைப் பசேலென தேயிலைத்தோட்டங்களும், வனங்களுமாய் புறக்காட்சிகள் இருக்கும். மாஞ்சோலையிலிருந்து மேலே குதிரைவெட்டி வரை செல்வதற்கான பேருந்து வசதி இருக்கிறது. பாபநாசத்திலிருந்து சென்னை: 678 கி.மீ, கோவை: 421 கி.மீ, மதுரை: 215 கி.மீ, திருச்சி: 347 கி.மீ.

ராமக்கல் மேடு

தமிழக - கேரள எல்லைப்பகுதியான குமுளிக்கு அருகே இருக்கிறது ராமக்கல் மேடு. எல்லோராலும் அறியப்பட்ட சுற்றுலாத்தலம் இல்லையென்றாலும் இப்போது வளர்ந்து வரும் சுற்றுலாத்தலமாக இருக்கிறது. இங்குள்ள குறவன்-குறத்தி சிலையும், தட்பவெப்பநிலையும், மலைமுகடுகளின் காட்சிகளுமே ராமக்கல் மேட்டின் சிறப்பம்சங்கள். மேற்குத் தொடர்ச்சி மலைகளையும், பள்ளத்தாக்குகளையும் உயரமான இடத்தில் நின்று கண்டு களிக்கிற வாய்ப்பு ராமக்கல் மேட்டில் கிடைக்கும். ராமக்கல் மேட்டுக்குச் சென்ற அனைவரும் நிறைவான மனத்துடன்தான் அங்கிருந்து திரும்புவர்.

பலரது விருப்பத்திற்குரிய இடமாக இருக்கிறது ராமக்கல்மேடு. பிரபல ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டி காப்ரியோ ‘‘இந்த பூமியில் சொர்க்கம் என்று ஒன்று உண்டானால் அது ராமக்கல்மேடுதான்’’ என்று சிலாகித்துக் கூறியிருக்கிறார். ராமக்கல்மேட்டில் தங்குவதற்கான வசதி இல்லை. மேகமலைக்குப் பயணப்படுகிறவர்கள் அதனூடாகவே ராமக்கல்மேடு, கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய பகுதிகளுக்கும் பயணம் செய்யலாம். ராமக்கல் மேட்டிலிருந்து சென்னை: 566 கி.மீ, கோவை: 278 கி.மீ, மதுரை: 136 கி.மீ, திருச்சி: 235 கி.மீ.

ஜோக் அருவி

‘கும்கி’ படத்தில் பிரமாண்டமான காட்சி அமைப்பில் காட்டப்பட்ட அருவி ஜோக் அருவி. தென்னிந்தியாவின் மிகவும் உயரமான அருவி இதுதான். மேற்குத் தொடர்ச்சி மலையின் பெரும்பகுதி கர்நாடகாவில்தான் உள்ளது. அடர்த்தியான காடுகள் நிறைந்ததாக இருக்கிறது கர்நாடக மாநிலம். அங்கு சிமோகா நகரத்துக்கு அருகே இருக்கிறது ஜோக் அருவி.

பிரமாண்டமான அந்த அருவியின் காட்சியும், தட்பவெப்பநிலையும் ஒரு சேர நமக்குள் ஏற்படுத்தும் உணர்வு அபாரமானது. ஜோக் அருவியிலிருந்து  மங்களூர், உடுப்பி ஆகிய ஊர்களுக்கோ அல்லது கார்வார் வழியாக கோவாவுக்கும்  பயணம் செய்ய முடியும். ஜோக் அருவியிலிருந்து சென்னை: 916 கி.மீ, கோவை: 563 கி.மீ, மதுரை: 735 கி.மீ,
திருச்சி: 772 கி.மீ.

- கி.ச.திலீபன்