தேவை மைக்ரோ பிரேக்



பெண்கள் அதிகாலை எழுந்து வாசல் தெளித்தல், கோலமிடுதல், கிணற்றில் தண்ணீர் எடுத்தல், உரலில் அரிசி தீட்டுதல், புடைத்தல், சமைத்தல், பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் என வீட்டு வேலைகளையே விதம் விதமாகச் செய்தனர்.  இயந்திர ஆதிக்கம் இன்று அனைத்தையும் தலைகீழாக மாற்றிவிட்டது.

பெண்கள் விவசாய நிலங்களிலும் பல வித வேலைகளைப் பார்த்தனர். அந்தக் காலகட்டத்தில் வேலைச் சூழலே ஆரோக்கியத்துக்கான உடற்பயிற்சியாக இருந்தது. இன்றைய வீட்டு வேலை, தொழில் நிறுவனங்களிலும் இயந்திரங்களின் ஆதிக்கம் பெண்களையும் ஒரே மாதிரியான இயக்கத்தில் தள்ளியுள்ளது.

பிரின்டிங்கில் பிசியாக இயங்கும் அச்சு இந்திரம், நூற்பாலையில் இமைக்க மறந்து இயங்கும் இயந்திரங்கள் என இயக்கம் சார்ந்து ஒரே வகையான பணியில் ஈடுபடுத்தப்படும் இயந்திரங்களில் குறிப்பிட்ட காலகட்டத்தில் தேய்மானம் ஏற்படும். அதை அவ்வப்பொழுது கவனித்து சரி செய்யாவிட்டால் இயந்திரமே பழுதாகவும் வாய்ப்புண்டு.

பேசும், சிரிக்கும், சிந்திக்கும் மனித இயந்திரம் அதற்கும் மேல். இல்லையா? வேலையைக் கூட அது ரசித்தே செய்யும். உடல் உறுப்புகளோடு சிந்தனையும் இணைந்தல்லவா வேலை பார்க்கிறது? ஒரே மாதிரியான வேலையாக இருப்பினும் கொஞ்சம் படைப்பாற்றல் சேர்த்து தனது தனித்தன்மையை உணர்த்த முயற்சிக்கிறது. ஒரே மாதிரியாக வேலை பார்ப்பது நாளடைவில் பல்வேறு உடல் உபாதைகளுக்கு காரணம் ஆகிறது.

பஞ்சாலை, ஏற்றுமதி ஆயத்த ஆடை நிறுவனங்கள் உள்பட  பல்வேறு தொழில் சூழலில் இயந்திரங்களோடு பெண்களும் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ெபண்களைப் பொறுத்தவரை அவர்கள் செய்வது எந்த வேலையாக இருந்தாலும் மற்றவர்களை விட தான் ஒரு படி உசத்தி என்று உணர வைக்க கடுமையாக உழைப்பதிலும் கவனம் செலுத்துகின்றனர்.

அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற உந்துதலும், குடும்பத் தேவைகளும் அவர்களை ஓய்வின்றி வேலை வேலையென இயக்குகிறது. உதாரணமாக தையல் மெஷினில் தொடர்ந்து தைக்கும் பெண்கள் கால்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடிக்க வேண்டும் என்பதற்காக மெஷினை விட்டு இறங்காமல் பல மணி நேரம் தொடர்கின்றனர். கடுமையான வேலைக்கு இடையிலும் ஆண்கள் அவ்வப்பொழுது ரிலாக்ஸ் செய்து கொள்வதைப் பார்க்கலாம்.

பெண்கள் வேலையில் காட்டும் தீவிரமே அதிகமாக இருக்கும். பெண்கள் ஆண்டுக்கணக்கில் இதுபோல் வேலை பார்ப்பது அவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. வேலைக்குச் செல்லும் பெண்களில் பலர் முதுகுவலி, இடுப்பு வலி மற்றும் கை கால்களில் வலி என புலம்புவதுண்டு. வலியை சகித்துக் கொண்டு அதே வேலைகளைத் தொடர்கின்றனர். இதை துவக்கத்திலேயே சரி செய்ய முயற்சிக்காமல் விடுவதால் கடுமையான உடல் நலக்குறைபாடுகளை சந்திக்க நேரும் என்கிறார் மனிதவள அதிகாரி சுஜாதா.

இதற்கான தீர்வுகளை எர்கோனோமிக்ஸ் என்ற தலைப்பில் முன்வைக்கிறார் சுஜாதா. ‘‘நம்மில் பலர் கை, கால் வலி, முதுகுப்பிடிப்பு, மூட்டு வலி, கணுக்காலில் வலி, மூட்டு இணைப்புகளில் வலி என பலவிதமான வலிகளால் அவதிப்படுகின்றனர். வேலைக்குச் செல்லும் கணவன் இது போல் வலிகளுடன் வீடு திரும்பினால் மனைவி சுடுதண்ணீர் ஒத்தடம், வலி நிவாரணியல் மசாஜ் செய்தும் வலியைக் குறைக்க உதவுகிறார்.

பெண்ணுக்கு இது போன்ற உதவிகள் கிடைக்க வாய்ப்பு இல்லை. இவற்றால் அன்றைய வலி மட்டுமே தீரும். அடுத்த நாளும் அவஸ்தை தொடரும். இந்த வலியின் காரணத்தை தெரிந்து ெகாண்டு தீர்வு காண யாரும் முயற்சிப்பதில்லை.  சிறிய வலியே வளர்ந்து தீரா வியாதியாக உடலில் தங்கிவிடும். இதைப்பற்றிய ஆய்வை மருத்துவர்கள் குழு ஒன்று 18ம் நூற்றாண்டிலேயே செய்துள்ளனர். அந்த ஆய்வின் முடிவு பல அதிர்ச்சித் தகவல்களை அளித்துள்ளது.

தொடர்ந்து ஒரே மாதிரியான உடலை வைத்துக்கொண்டு அதிக மணி நேரங்கள் வேலை செய்வதால் MSD அதாவது Muskelo Skeletel Disorder எனும் நோய்க்கு ஆளாகின்றனர் என்பதை கண்டுபிடித்தனர். கடந்த 20 ஆண்டு தொடர் ஆராய்ச்சிகளும் தெள்ளத் தெளிவாக RSI(Repetitive Stress Injury), RMI (Repetitive Motion Illness) ஆகியவற்றுக்கும் MSD க்கும் நேரடி தொடர்பு இருப்பதை
உறுதி செய்கின்றன.

நம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். சாதாரணமாக ஒருவர் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் முதல் 2 லட்சம் கீஸ்ட்ரோக்ைஸ மட்டுமே செய்ய முடியும். இந்த கீ ஸ்ட்ரோக்ஸை மீறி ஒருவர் வேலையில் ஈடுபடும் போது RMI யால் தாக்கப்படுகின்றனர். அப்படித் தாக்கப்பட்ட ஒருவர் நாளடைவில் MSD நோய்க்கு ஆளாகின்றனர். இந்த MSD எப்படி தாக்குகிறது? அதன் ரிஸ்க் ஃபேக்டர்களைப் பார்ப்போம்.

MSD என்பது தசைகளிலும், தசை நாண்களிலும், தசை நார்களில், நரம்புகளிலும் மென்மையான திசுக்களிலும், ரத்தநாளங்களில், மூட்டுகளில் மற்றும் குருத்தெலும்புகளில் ஏற்படும் ஒரு வகையான க்ரோனிக் டிஸ்ஆர்டர். இது பலவகையான ரிஸ்க் ஃபேக்டர்களால் உருவாக்கம் பெற்று தீவிரம் அடையும். ஒரே மாதிரியான இயக்கமோ, வழக்கத்திற்கு மாறான வேலைகளை தொடர்ந்து இயல்புக்கு மீறி செய்வதோ, ஆக்வேர்ட் பொசிஷன் என்று சொல்லப்படும் விவகாரமான போஸ்களில் உடலை நீண்ட நேரம் வைத்திருப்பது போன்றவை ரிஸ்க் ஃபேக்டர்கள் ஆகும்.

MSDயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கைகள், மணிக்கட்டு, முன் கைகள், விரல்கள், கை முட்டி, தோள் பட்டைகள், கழுத்து மற்றும் முதுகுப் பகுதிகளில் சிறிய தொந்தரவு கொடுப்பது போன்ற வலிகள் அல்லது வீக்கமோ இருக்கலாம். ஒரு சிலர் அவ்வப்பொழுது தங்களது உடல் பாகங்களை அழுந்தப் பிடித்து விட்டுக்கொள்வதோ அல்லது கை கால்களை அவ்வப்பொழுது உதறிக் கொண்டோ அல்லது ஆட்டிக் கொண்டோ இருப்பதைப் பார்க்கலாம்.

இவ்வாறு அடிக்கடி செய்வதை MSDயின் அறிகுறியாகப் பார்க்கலாம். வேலையின் இடையே இது போல் அடிக்கடி செய்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். சரி, MSDக்கும் எர்கோனோமிக்ஸிற்குமான தொடர்பு என்னவென்று பார்ப்போம். வேலையின் இடையே எர்கோனோமிக்ஸ் பயிற்சியில் அவ்வப்பொழுது நம்மை ஈடுபடுத்திக் கொண்டால் MSDயில் இருந்து தப்பிக்கலாம். தொடர்ந்து ஒரே மாதிரியான வேலையில் ஈடுபடுபவர்கள் தொடக்கக் காலத்தில் இருந்தே சின்னதாக ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம்.

இதை மைக்ரோ பிரேக்குகள் என்று சொல்லலாம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை 20 செகண்டுகள் இந்த மைக்ரோ பிரேக் அவசியம் ஆகிறது.  மைக்ரோ பிரேக்கின் போது கைகளை மட்டுமே பயன்படுத்தி வேலை செய்பவர்கள் 20 செகண்ட் பயிற்சி எடுக்கலாம். கையில் வழக்கமாக செய்யும் வேலைக்கு எதிரான செயலை செய்ய வேண்டும். இதன் மூலம் குறிப்பிட்ட இடம் ரிலாக்ஸ் ஆகும்.

நம் உடலில் கழுத்து, கை, கால் என அனைத்து இடங்களும் 90 டிகிரியில் வளைப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. நம் உடல் அமைப்பு நிற்கும்போதும், அமரும்போதும் 90 டிகிரியில் உள்ளது. அமர்ந்து வேலை செய்யும்போதும் 90 டிகிரியை பின்பற்ற வேண்டும். எடையை தூக்கும் போதும் கீழே அமர்ந்து எடையைத் தூக்க வேண்டும். வேலைகளின் போது உடலை சரியான கோணங்களில் பயன்படுத்த வேண்டும். அஷ்டகோணல்களே அவஸ்தைக்கு காரணம் ஆகின்றன.

மைக்ரோ பிரேக் எடுக்கும்போது சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள ஜவ்வு ரிலாக்ஸ் ஆகிறது. மைக்ரோ பிரேக் எடுக்காமல் வேலை பார்ப்பதால் தசை இறுகுகிறது. இதுவே வலியாகத் துவங்கி வியாதியாக பரிணமிக்கிறது. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறிய நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். ரிலாக்ஸ் செய்து கொள்ள 20 விநாடிகள் ஒதுக்கினாலே போதும்.

நம் உடலை எந்த வித பிரச்னையும் இன்றி கட்டுக்கோப்பாக வைத்திருப்பது அவசியம். ஒரே மாதிரியான நிலையில் உடலை வைத்துக்கொள்ளாமல் அவ்வப்பொழுது மாற்றிக் கொள்ளலாம். நாம் சார்ந்திருக்கும் இடத்தின் தன்மையை மாற்றி அமைத்துக் கொள்வது, நம் வேலையை சார்ந்த இடத்ைத சீரான முறையில் அமைத்துக் கொள்வது ஆகியவற்றை பின்பற்றி இது போன்ற குரோனிக் டிஸ்ஆர்டரில் இருந்து தப்பிக்கலாம்’’ என்கிறார் சுஜாதா.

தொகுப்பு: யாழ் ஸ்ரீதேவி