உங்கள் கண்களை பராமரிப்பது எப்படி?



மழைக்காலம் வந்துவிட்டாலே நம் அன்றாட வாழ்க்கை முறையிலும் நிறைய மாற்றங்கள் எட்டிப் பார்க்கும். வண்ணவண்ணக் குடைகள் மற்றும் மழைக் கோட்டுடனும் பலர் அலைவார்கள். இந்த மழைக்காலத்தின் பிரச்னைகளான காய்ச்சல், சளி மற்றும் இருமல் ஏற்படாமல் இருக்க, நாம் பலவிதமான தடுப்பு முறைகளைக் கையாள்வோம். ஆனால், நம் உடலின் பிரதான பாகமான கண்கள் விஷயத்தில் நாம் எந்தவிதமான தடுப்பு முறைகளை மேற்கொள்கிறோம்?

மின்னும் கண்கள் எப்போதும் அழகின் அடையாளமாகத் திகழ்வதுடன் ஒருவரின் தோற்றச் சிறப்பைக் கூட்டுகிறது மற்றும் நமது கண்களுக்கு எப்போதுமே அதிகமான மற்றும் சிறப்பான கவனம் இருக்க வேண்டியது அவசியம். மழைக்காலம் என்பது, பலவிதமான கண் பிரச்னைகள் ஏற்பட காரணமாக அமைகின்றது. அவற்றை விரிவாகச் சொல்கிறார் டாக்டர் அமர் அகர்வால்.

கன்ஜன்க்டிவிட்டிஸ், ஸ்டை, கார்னியல் அல்சர்ஸ் மற்றும் கண் வறட்சி உள்ளிட்ட பல்வேறான சிக்கல்கள் இந்தக் காலகட்டத்தில் உண்டாகின்றன. நாம் மிகவும் விரும்பும் மழைக்காலம், நமது கண்களுக்கு நாம் அறியாமல் சில கெடுதல்களை செய்துவிட்டுப் போய்விடுகிறது தெரியுமா?

டியர் ஃபில்ம் எனப்படும் கண்ணின் இயற்கையான கவசமாய் இருக்கக்கூடிய ஒன்றை மழைக்காலம் நீக்கிவிடுகிறது. இதனால், கண்களுக்கான இயற்கைப் பாதுகாப்பு வளையம் நீக்கப்பட்டு, பலவிதமான தொற்றுகள் மற்றும் கண் எரிச்சல் தோன்ற வழிவகை ஏற்படுகிறது. கண்களின் ஆரோக்கியத்தை மழைக்காலத்தின்போது கவனமாக பராமரித்துக்கொள்வதற்கான சில முன்னெச்சரிக்கை தடுப்பு முறைகள்:

* சுகாதாரமே அனைத்திற்குமான திறவுகோல். உங்கள் கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்யுங்கள். அழுக்கான கைகளை கண்களுக்குக் கொண்டு செல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

* மழைக்காலத்தில், நாம் எதேச்சையாக மழையில் நனையும்போது, கண்மை போன்ற அரிதாரங்கள் மழையில் நனைந்து கரைந்து, நம் கண்களுக்குள் சென்றுவிட வாய்ப்புண்டு. அந்தச் சமயத்தில் நமது கண்களில் தொற்றுகள் ஏற்படும். எனவே, அரிதாரத்தை நன்றாக சுத்தம் செய்துவிட்டு, கண் இமை மற்றும் அதைச் சுற்றியப் பகுதிகளை தேவையான அளவில் முறையாக சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில், நீரில் பாதிப்படையாத வாட்டர் ப்ரூஃப் அலங்காரத்தில் நாம் ஈடுபடலாம்.

* நீங்கள் கண்களை ஒப்பனை செய்ய பயன்படுத்தும் பிரெஷ்ஷை பிறரோடு பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும்.

* உங்களுடைய முக்குக்கண்ணாடியை, மழையில் வெளியே செல்லும்போது சுத்தம் செய்யவும். கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவோர் எப்போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். ஏனெனில், மழைக்காலத்தின்போது, கான்டாக்ட் லென்ஸ் மூலம் கண் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள், மற்ற நேரங்களைவிட மிக அதிகம்.

கண்கள் சிவந்து போதல் உள்ளிட்ட தொற்று கள் ஏற்பட்டால், கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவதை உடனடியாக தவிர்க்கவும். கான்டாக்ட் லென்ஸ்களை வைத்திருக்கும் சிறு பெட்டியை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். அந்த சிறுபெட்டியையோ அல்லது கான்டாக்ட் லென்சையோ பிறரிடம் பகிர்ந்து கொள்ளுதல் கூடாது.

கன்ஜன்க்டிவிட்டிஸ் என்பது, பருவமழைக்காலங்களில் சாதாரணமாக பரவக்கூடிய ஒரு கண் தொற்றாகும். கண்கள் சிவந்து போதல் மற்றும் கண் மடல்கள் ஒன்றுக்கொன்று ஒட்டிக் கொள்ளுதல் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். இந்த கன்ஜன்க்டிவிட்டிஸ் என்ற தொற்று உங்களுக்கு ஏற்பட்டுள்ளது என நீங்கள் கருதினால், நீங்கள் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உங்கள் கண்களை சுகாதாரமான முறையில் நீரால் கழுவி, ஒரு குளிர்ந்த துணியால் அதைத் துடைக்கவும்.

அதற்கடுத்து நீங்கள் செய்ய வேண்டியது, ஒரு நல்ல கண் மருத்துவரை அணுகுவதே. இந்த வகைத் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் முக்கியமாக செய்ய வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில், வெளியில் செல்லும்போது கட்டாயம் கருப்புக் கண்ணாடி அணிந்துகொள்ள வேண்டும் என்பதே. ஏனெனில் அப்போதுதான், சூரிய வெப்பத்தின் பாதிப்பிலிருந்து உங்களுடைய கண்கள் பாதுகாக்கப்பட்டு, கண்களில் ஏற்படும் வலியைக் குறைக்க முடியும்.
 
இந்த கன்ஜன்க்டிவிட்டிஸ் தொற்று, பொதுவாக, ஃபிசிகல் டச் முறையிலேயே பரவுகிறது. அதாவது, கையால் தொடுதல், ஒரே துண்டை பயன்படுத்துதல் மற்றும் இதர தொடுதல் அம்சங்களின் மூலமாக  பரவுகிறது. எனவே, உங்களின் துண்டு உள்ளிட்ட இதர தொடு பொருட்களை பகிர்வதை தவிர்க்கவும். பாதிக்கப்பட்ட கண்களுக்கு சொட்டு மருந்தை ஊற்றிய பிறகு, மறக்காமல் உங்களுடைய கைகளை கழுவிக் கொள்ளவும்.

ஐ ஸ்டை என்பது மற்றொரு பொதுவான கண் தொற்றாகும். இதுவும் மழைக்காலத்தில் பரவக்கூடிய தொற்று வகையைச் சேர்ந்தது. இதன்மூலம் கண் மடல் குவிவுப் பகுதியில் வலி ஏற்படும். இதற்கு நாம் வீட்டிலேயே மேற்கொள்ளக்கூடிய ஓர் எளிய மற்றும் உடனடி பலன் கொண்ட சிகிச்சைமுறை என்னவெனில், வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் துணியைக் கொண்டு கண்களை சுத்தம் செய்வதே.

இந்த வகைத் தொற்றுக்கு கண் மருத்துவர்கள், பொதுவாக ஆன்டிபயோடிக் சொட்டு மருந்துகள் அல்லது ஆய்ன்மென்ட்டுகளை பரிந்துரைக்கிறார்கள். நாம் வெளியில் பயணம் செய்யும்போது கண்ணாடி அணிவது ஒரு சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை. இதன்மூலம் கண்ணுக்கு சேதம் ஏற்படுவதையோ அல்லது வேறு ஏதேனும் வெளிக் கிருமி கண்ணில் நுழைந்து அதன்மூலம் வேறு பிரச்னைகள் நிகழ்வதையோ தடுத்துவிடலாம்.

மழை, நாம் வாழும் பகுதிகளில் ஆங்காங்கே  புதிய சிறு நீர்நிலைகளை உருவாக்கும். அதுபோன்ற குட்டைகள் விளையாட்டுக்கு உகந்தது என்றாலும் அந்த நீர்நிலைகளில் பல தேவையற்ற பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, குழந்தைகளை நீர்நிலைகளிலிருந்து தள்ளியே வைத்திருத்தல் நலம். விளையாட அனுமதிக்க வேண்டாம். மேலும், பொதுவாக பெருநகரங்களில் இருக்கும் அல்லது இன்னபிற நீச்சல் குளங்களை பயன்படுத்த வேண்டாம். அதன்மூலமும், கண் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தொகுப்பு: ஸ்ரீதேவி மோகன்