சிறுகதைதான் எனக்குப் பிடித்தமான தளம்



-உஷா சுப்ரமணியன்

எண்பதுகளில் இவர் கதைகள் வராத பத்திரிகைகள் இல்லை எனும் அளவிற்கு 400க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 30க்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதியவர். பல டிவி தொடர்களை எழுதி இயக்கியவர். உலக எழுத்தாளர் மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட முதல் பெண் எழுத்தாளரும் இவர்தான். யுனிசெஃப், உலக வங்கிகள் போன்ற பல உலகளாவிய நிறுவனங்களுக்கு ஆவணப்படங்களை எடுத்துத்  தந்தவர் என்றொரு பெருமை இவருக்கு உண்டு. பழம் பெரும் எழுத்தாளர் உஷா சுப்ரமணியன் உற்சாகமாகப் பேசத் துவங்குகிறார்.

‘‘வாரணாசியில் பிறந்தேன். பிறந்த உடன் என்னைத் தூக்கியது பாரதியாரின் தங்கை லஷ்மி அம்மாள். அப்பா விஞ்ஞானி. அத்துடன் அப்பாவும் அம்மாவும் நல்ல இசைக் கலைஞர்கள். படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான்.”
 
பத்திரிகைத் துறையில் சந்தித்த சவால்கள்?
இதழியல் படித்திருந்தாலும் பெண் என்ற காரணத்தினாலே பத்திரிகைத்துறையில் எங்கும் வேலை கிடைக்கவில்லை. அப்போதெல்லாம் பத்திரிகைத் துறையில் பெண்களை வேலைக்கு எடுப்பது சிரமம். அப்புறம் பயிற்சிக்காக ஒரு பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தேன். அதுவும் சில நாட்கள்தான். அதற்குப் பிறகு சுதந்திர பத்திரிகையாளராக தனியாக எழுத ஆரம்பித்தேன். முதலில் ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு எழுதினேன். பிறகுதான் தமிழ் பத்திரிகைகளுக்கு எழுத ஆரம்பித்தேன். 
 
எழுத ஆரம்பித்தது விபத்தா? லட்சியமா?
எழுத ஆரம்பித்ததற்கான காரணம் சூழ்நிலை என்று வேண்டுமானால் சொல்லலாம். நான் ஒரு பரதநாட்டிய கலைஞர், டென்னிஸ் வீராங்கனை. இப்படி என்னிடம் இருந்த பல திறமைகளும் திருமணத்திற்குப் பின் குடும்ப பொறுப்புகள் காரணமாக வீணடிக்கப்பட்டன. வீட்டில் வேலைகள், பொறுப்புகள் எல்லாம் இருந்தாலும் என்னிடம் இருந்த திறமையை ஏதாவது ஒருவழியில் வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆழ்மன உந்துதலில்தான் எழுத ஆரம்பித்தேன்.
 
முதல் படைப்பு வெற்றியா, தோல்வியா?
கட்டாயமாக வெற்றியே. நான் எழுதி பிரசுரத்துக்கு அனுப்பி ஒன்று கூட திரும்ப வந்தது கிடையாது. நான் எழுதிய ‘வடிகால்’ என்னும் முதல் சிறுகதை பிரபல பத்திரிகை ஒன்றில் முத்திரைக் கதையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. பலரின் பாராட்டுக்கும் உட்பட்டது. முதல் கதையை அடுத்து வெளிவந்த குறுநாவல் ஒன்றும் பலரின் பாராட்டையும் கவனத்தையும் ஈர்த்தது. அடுத்தடுத்து பல கதைகள் வெளிவந்தன.
 
எழுத்து மட்டுமே முழு நேர வேலையா?
எழுத்து என்பது எனது ஆதர்சம். அது தவிர்த்து ‘ஆப் மீடியா டெக்னிக்’ என்னும் நிறுவனத்தை 1984 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை நடத்தி வந்தேன். அதில் 450க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் படங்கள் செய்திருக்கிறேன். மத்திய அரசின் மனிதவளத்துறைக்காக தமிழ்நாட்டின் நதிகள், இசை, கட்டிடக் கலை குறித்து பல படங்கள் செய்திருக்கிறேன்.
 
மனதுக்கு நெருக்கமான படைப்பு எது?
சிறுகதைதான் எனக்குப் பிடித்தமான தளம். எழுத விரும்பும் தளமும் அதுவே. நிறைய கதைகள் எழுதி இருந்தாலும் என்னை மக்களிடையே அதிகம் கொண்டு சேர்த்தது எனது கட்டுரைகள்தான். அதற்கும் உடனடியாக கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியாக இருந்தது. நிறைய பெண்கள் அந்த கட்டுரைகளால் தன் வாழ்வில் நம்பிக்கை ஏற்பட்டு ஜெயித்ததாக கூறி இருக்கிறார்கள்.  எனவே எனது கட்டுரைகள் என் மனதுக்கு நெருக்கமானவை எனலாம்.  
 
ஆரம்பக்கட்டத்தில் தடைக்கற்கள் ஏதாவது இருந்தனவா?
முதல் கதை வெளிவந்தபோது முன்னூறுக்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்தன. அதில் பாதிக்கும் மேல் எதிர்ப்புக் கடிதங்களாக இருந்தன. பெண் பெயரில் எழுதும் பொறுக்கி என்றெல்லாம் திட்டி எழுதி இருந்தனர். கலாசாரத்தை சீரழிக்கிறீர்கள் என்று கொதித்திருந்தனர். சமூகத்தில் நிறைய எதிர்ப்புகள் இருந்தன. அந்த எதிர்ப்புகளே என்னை பிரபலமாக்கியது.

உங்கள் எழுத்துகள் யதார்த்த வகையை சார்ந்தவை. வேறு வகை இலக்கிய போக்குகளை எடுத்தாண்டு இருக்கிறீர்களா?
எழுத ஆரம்பித்த புதிதிலே ‘புகை’ என்றொரு கதை. அதில் லேயரிங் டெக்னாலஜி அமைந்திருக்கும். இன்றைக்கு வேறு ஒரு எழுத்தாளர் முதன்முதலில் தமிழில் லேயரிங் டெக்னாலஜியை பயன்படுத்தியது நான்தான் என்கிறார். ஆனால் அந்தக் காலத்திலே என் கதையில் அது அமைந்திருந்தது. அதுவும் வலியுறுத்தித் திணிக்கப்படாமல் இயற்கையாக அமைந்திருந்தது அதன் சிறப்பு. மற்றபடி மக்களுக்கு புரியாத வகையில் எழுதுவதில் எனக்கு சம்மதமில்லை. வாசகர்களுக்குப் புரியாதபடி எழுதுவதில் அர்த்தமே இல்லை. தனக்கு மட்டுமே புரியும்படி எழுதுவது எந்த விதத்தில் நியாயம்?

பெண்ணாய் பிறந்ததற்காய்...
நிச்சயமாக பெருமைப்படுகிறேன். ஆண், பெண் இரண்டும் வேறு வேறு இனங்கள். அவரவர்க்கு என்று தனிப்பட்ட குணங்கள் இருந்தாலும் பெண்கள் எப்பவுமே
கொஞ்சம் ஸ்பெஷல்.
 
குடும்ப வாழ்க்கை, வேலை மற்றும் எழுத்து எப்படி சமாளித்தீர்கள்?
ரொம்ப கடினமாகத்தான் இருந்தது.  பல பிரச்னைகள் இருந்தன. உறவுச் சிக்கல்கள் இருந்தன. ஆனாலும் இந்த ரிஸ்க் எனக்குப் பிடித்திருந்தது. அதை நான் மகிழ்ச்சியாக அனுபவித்தேன். ஐ என்ஜாய்ட் இட்.
 
உங்கள் கதைகளில் நீங்கள் பேசும் பெண்ணியம் எப்படிப்பட்டது?
ஒப்பாரிக் கதைகளை நான் எழுதியதே இல்லை. நெகட்டிவ்வான சிந்தனைகளையும் எழுதியதில்லை. பெண்களாலே சாதிக்க முடியும். அதற்கு நிறைய கஷ்டப்படணும். முயற்சி செய்யணும். ஆணோ, பெண்ணோ மனிதராய் பிறந்துவிட்டால் பிரச்னைகளை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

ஆனால் சிரமப்பட்டால் கட்டாயம் பெண்கள் தன் வாழ்வில் ஜெயிக்க முடியும் என்பதைத்தான் பல கதைகளில் அழுத்தம்திருத்தமாக சொல்லி இருக்கிறேன். குடும்ப உறவுகள் நம்மை கவனித்து சுகமளிப்பவை. அதனால் அதை உதற வேண்டிய அவசியமில்லை. முடிந்தவரை குடும்பத்தை விட்டுவிலகாமல் சாதிக்கவே முயலுங்கள் என்பதை என் கதைகளில் சொல்லி இருப்பேன்.
 
கதைக்கான கருவை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
சுற்றி நடக்கிற விஷயங்கள்தான். கதை என்பது மரத்தில் காய்க்கும் விஷயமில்லை. என்னைச் சுற்றி இருக்கிற மனிதர்களின் வாழ்க்கையை உற்றுப் பார்க்கிறேன். சுற்றி நடக்கிற சின்னச் சின்ன விஷயங்கள், மனிதர்களின் நல்ல, கெட்ட குணங்கள் என பல விஷயங்கள் என் கதைகளுக்கு கருவாகின்றன. எழுத்தாளர் என்பவர் கண், காதுகளை எப்போதும் திறந்து வைக்க வேண்டும். Sympothyயை விட Empathy ரொம்ப முக்கியம். சிலர் தன்னைப் பற்றியே எழுதிக் கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். தன்னைப் பற்றி எழுதுபவர்கள்
எழுத்தாளரே இல்லை.
 
எழுத்தில் கிடைத்த சந்தோஷமாக எதை நினைக்கிறீர்கள்?
தெருவில் நடக்கும்போது ஒரு பெண் என்னை நிறுத்தி நீங்கள் இன்னார் தானே... உங்கள் கதை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று சொல்வதை விடவும் பெரிய சந்தோஷம் ஓர் எழுத்தாளருக்கு என்ன இருக்கிறது. அதைத் தவிரவும் நிறைய பெருமைகள் எனக்கு நிறைவை ஏற்படுத்தி இருக்கின்றன. உலக நாடுகளில் இருந்து 25 எழுத்தாளர்களை மட்டும் தேர்வு செய்த உலக எழுத்தாளர் மாநாட்டில் பங்குகொள்ள நானும் தேர்வானேன். மறுபடி ரோட்டரி உலக மாநாட்டிலும் தேர்வு செய்யப்பட்டேன்.

அமெரிக்காவின் கிரியேட்டிவ் ரைட்டிங் ஃபெல்லோஷிப் எனக்குக் கிடைத்தது. முப்பது வருடங்களுக்குப் பிறகும் என்னுடைய ‘மனிதன் தீவல்ல’ கதையைப் பற்றி முகநூலில் விவாதிக்கிறார்கள் என்றால் அதுவே பெரிய பாராட்டு. ‘காக்கைச் சிறகினிலே’ என்னும் எனது நாவல் ஜப்பான் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழிலிருந்து ஜப்பான் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் நாவல் இது என்பதை ஆகப்பெரிய பெருமையாக நினைக்கிறேன். இது போல பல நல்ல விஷயங்கள் பல, எழுத்தாளராய் எனக்கு கிடைத்த மரியாதையாய் நினைக்கிறேன்.
 
வாழ்க்கையின் சந்தோஷம்…
எனக்கு மூன்று குழந்தைகள். என் மகன்கள் இருவரும் அமெரிக்காவில் நல்லதொரு பணியில், நல்ல சம்பாத்தியத்தில் இருக்கிறார்கள். அவர்கள் இந்தப் பணியில் இருக்கிறார்கள் என்று பெருமையாக காலரை தூக்கிக்கொள்வதைவிடவும் நல்ல கணவர்களாக, நல்லதொரு மனிதர்களாக இருக்கிறார்கள், அவர்களை அப்படி வளர்த்திருக்கிறேன் என்று சொல்லிக்கொள்வதையே வாழ்க்கையின் மிகப்பெரிய சந்தோஷமாக நினைக்கிறேன். என் மகளும் பேத்தியும் சென்னையில் என்னுடன் இருக்கிறார்கள். 
 
எழுத்தாளர்களில் ஆண், பெண் இருபாலருக்கும் இடையேயான புரிதல் எப்படி உள்ளது?
ஆண் எழுத்தாளர்களில் நிறைய சிறந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். பல நுணுக்கமான விஷயங்களை அழகாக எழுதுகிறார்கள். பல அரிய தகவல்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள். புத்திசாலித்தனமும் நிறைய. ஆனால் பெண் எழுத்தில் சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமில்லை என்னும் அவர்கள் நினைப்பு தவறானது. அந்தந்த காலத்திற்கு தகுந்தாற் போல பெண்கள் எழுதி வருகிறார்கள். ஆண்களைப் போல் குடும்பத்தைப் பற்றிய கவலை இல்லாமல் பெண்களால் இருக்க முடிவதில்லை.

அவர்களைப் போல் பெண்களுக்கு வாய்ப்புகள் அமைவதில்லை. ஆனாலும் அந்தக் காலத்தில் சிறுகதையை வளர்த்தெடுத்தவர்கள் பெண்கள்தான் என்பதில் சந்தேகமே இல்லை. பெண்களுக்கென்று சில எல்லைகள் இருக்கின்றன. அது மட்டுமின்றி பொறாமைகள், சங்கடங்கள்... இதை மீறி பெண்கள் எழுதுவதே பெரும் சிரமம். இதனால் பெண் எழுத்தாளர்கள் பற்றிய அவர்களின் மனப்பான்மையை ஆண் எழுத்தாளர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

தமிழில் பெண் எழுத்தாளர்கள் ரொம்ப குறைவு. அந்த காலத்து பெண் எழுத்தாளர்கள் குடும்பத்திற்குள் இருந்தார்கள். அதனால் குடும்ப உறவுகளை எழுதினார்கள். இன்றைய பெண்கள் குடும்பத்தை விட்டு வேலை பார்க்க வெளியே வந்தாயிற்று. அதனால் நிறைய விஷயங்களை எழுதலாம். ஆனால் தங்கள் தொழில், பணிச்சூழல் போன்றவற்றைப் பற்றி இவர்கள் எழுதுவதில்லை. இப்போது ஐ.டி துறையில் நிறைய பெண்கள் வேலை பார்க்கிறார்கள்.

அங்கு இருக்கும் சங்கடங்கள், நல்லது கெட்டது என பல விஷயங்களை அவர்கள் வெளிக் கொண்டு வரலாம். ஆனால் அதையும் நாங்களே தான் செய்ய வேண்டி இருக்கிறது. சமீபத்தில் கூட பிரபல பத்திரிகை ஒன்றில் ஐ.டி.  துறைப் பற்றி ஒரு கதை எழுதி இருந்தேன். அதுமட்டுமில்லாமல் எழுத்தாளர்கள் என்பவர்கள் அது ஆணோ, பெண்ணோ நிறைய படிக்க வேண்டும். புத்தகக் கண்காட்சியில் நிறைய புத்தகங்கள் விற்பனையாவதாக சொல்லிக்கொண்டாலும் வாங்கும் அளவுக்கு புத்தகங்களை யாரும் படிப்பதில்லை என்பது என் எண்ணம்.
 
குழந்தை வளர்ப்பில் நடைமுறையில் பெண்கள்தான் ஈடுபடுகிறார்கள். ஆனால் குழந்தை இலக்கியம் படைக்கும் பெண் எழுத்தாளர்கள் இல்லையே?
ஆம், உண்மைதான். தமிழில் குழந்தை இலக்கியம் ரொம்ப குறைவு. அதிலும் பெண் எழுத்தாளர்கள் அந்தத் துறையை தொடவே இல்லை. குழந்தை இலக்கியங்களையும் பெண்கள் எழுத முன் வரவேண்டும்.
 
ஓர் எழுத்தாளராக பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
வாழ்க்கையை சந்தோஷமா வாழணும். ஆனால் அதே சமயம் வாழ்க்கையில் வெற்றி பெறணும்கிற முனைப்பு இருக்கணும். வீணான பொழுதுபோக்குகளில் நேரத்தை வீணடிக்கக்கூடாது. நான் ஒரு குடும்பத்தலைவிதானே நான் எதற்கு இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் குடும்பத் தலைவியாக இருந்தாலும் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்வது நல்லது. சின்னக் குழந்தைகளிடம் கூட நல்ல விஷயங்கள் கத்துக்கலாம். நான் இன்னும் இரண்டாம் வகுப்பு படிக்கும் என் பேத்தியின் பாடப்புத்தகத்திலிருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்கிறேன். அது எனக்குப் பிடித்திருக்கிறது.

சந்திப்பு: ஸ்ரீதேவி மோகன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்