வானவில் சந்தை



வீடு பேறு

அபூபக்கர் சித்திக்
செபி பதிவு பெற்ற நிதி ஆலோசகர்


‘99 ஹோம்ஸ்’ என்ற திரைப்படத்தில் கடனில் மூழ்கி வீடிழந்த நாயகன் கொஞ்சம் காசு சேர்ந்த பிறகு தனது வீட்டை ஏலத்தில் எடுத்த ரியல் எஸ்டேட் முதலாளியிடம் வீட்டைத் திருப்பித் தருமாறு கேட்க, அவரோ ’ரியல் எஸ்டேட்டின் பொருட்டு உணர்ச்சிவசப்படாதிரு’ என்று அறிவுரை கூறுகிறார். மேலும், ’பணத்தைச் சேர், வேறு நல்ல வீட்டையே வாங்கலாம்’ என்கிறார்.

25 வருடங்களுக்கு முன் நடுத்தர வர்க்கம் வீடு வாங்குவது (அதுவும் கடனில்) குறித்து இவ்வளவு சிந்தித்ததில்லை. வீடு குறித்த ஆசை இல்லாமலில்லை. கடனில் வாங்குவது குறித்த பயம்தான். வீடு மட்டுமில்லை தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி எதுவாயிருந்தாலும் அப்படித்தான். பணம் சேர்த்தே வாங்குவார்கள். 90களுக்குப் பின்னான தாராளமய காலத்தின் விளைவாக சேவைத்துறை வளர, மாதச் சம்பளக்காரர்கள் பெருகினர்.

நகரங்கள் பெருகின. இதன் தொடர்ச்சியாகவே மாதத் தவணையில் பொருட்களை வாங்குவது பரவலானது. ஒரு ஜீன்ஸ் பேன்ட்டை தவணையில் வாங்கும் மனம் வாய்த்தது. முன்பு மாதச் சம்பளக்காரர்கள் ஓய்வுக் காலத்தில் ஒரு வீட்டைக் கட்டினாலே சாதனை என்றிருந்தது. இப்போது முப்பதுகளில் இருக்கும் ஒரு மென்பொருள் நிறுவன ஊழியர் தனது இரண்டாவது வீட்டைப் பற்றி திட்டமிட ஆரம்பித்து விடுகிறார். கடனில்தான்.

ரியல் எஸ்டேட்  என்று  பரவலாகக் குறிப்பிடப்படும் முதலீடு வெறும் வீடு சார்ந்தது மட்டுமல்ல... நிலம் (வீட்டடி மனை அல்லது விவசாய நிலம்), வணிகச்சொத்துக்கள் (அலுவலகக் கட்டிடங்கள், குடோன்கள், உற்பத்திக் கூடங்கள், வணிக வளாகங்கள்) மற்றும் குடியிருப்புச் சொத்துக்கள் (வீடுகள், அபார்ட்மென்ட்கள்) என்று பல வகைப்பட்டது. இதில் வீடு என்பதே பலரது கனவு. நடுத்தர வயதுப்பெண்களின் ஆகப் பெரிய கனவான ’’சொந்த வீடு’’ என்பது இன்றைக்கு இந்தியாவின் மிகப்பெரிய தொழில்களில் ஒன்று.

எல்லாப் பெரிய/சிறிய நகரங்களும் தங்களது எல்லைகளை விரித்துக் கொண்டே போவதற்கு அடிப்படை இந்த ஆசையே. வீடு வாங்குவது இருவகையில் நடக்கிறது. நிலத்தையும் வீட்டையும் தனி ஒரு ஆளாகச் சொந்தமாக்கிக் கொள்வது (தனி வீடு). அல்லது பலரோடு சேர்ந்து, ஒரு பெரிய இடத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் ஒரு பகுதியை உடமையாக்கிக் கொள்ளுதல் (அபார்ட்மென்ட்கள்).

அபார்ட்மென்ட்டில் ஒரு வீட்டோடு ஒப்பிடுகையில் தனிவீடு அதிக விலை கோருவதாகையால் பெரும்பாலானோரின் தேர்வு அபார்ட்மென்ட்டாக இருக்கிறது. ஏனென்றால் ஒரு ஆயிரம் சதுர அடியைச் சொந்தமாக வாங்கி தனியாக ஒரு வீடு கட்டுவதை விட அதே நிலத்தில் மூன்று வீடுகளைக் கட்டினால் நிலத்துக்கான செலவு மூன்றாகப் பிரிந்து குறைந்து விடும். தனி வீட்டுடைமையோடு ஒப்பிட்டால் அபார்ட்மென்ட்டுகளில் பல வசதிகளுண்டு.

கூட்டுப் பேர வசதி அதில் முதன்மையானது. ஒரு தனி வீட்டுக்காரர் தனியே எதிர்கொள்ளும் எந்தப் பிரச்னையையும் (அரசாங்க விதிகளைக் கையாளுதல், சட்டச் சிக்கல்கள் போன்றவை) அபார்ட்மென்ட்வாசி ஒரு நிர்வாகப் பிரதிநிதியை வைத்துக் கொண்டு எதிர்கொள்ள முடியும். வேலைக்குச் செல்லும் தம்பதிகளுக்கு இது விடுதலை. அதே நேரம் தனி வீட்டைக் கையாளுவதைப் போன்ற சுதந்திரத்தோடு ஒரு அபார்ட்மென்டை மாற்றி அமைத்துக் கொள்ள முடியாது.

அது பெரும்பாலும் பொது நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியது. அபார்ட்மென்ட் வீடு வாங்கும் முன் கட்டுமான நிறுவனத்தின் முந்தைய கட்டிடங்களின் தரம், அந்தத் துறையில் அவர்களின் அனுபவம் போன்றவை முதன்மையாகப் பார்க்கப்பட வேண்டியவை. இரண்டு வகை வீட்டு உடைமையிலுமே சாதக பாதகங்கள் இருக்கவே செய்யும். ஒருவர் தனது வாழ்வுக்கும் தேவைக்கும் தக்கவாறு தேர்வு செய்து கொள்ளவேண்டியதுதான். சென்னை போன்ற பெருநகரங்கள் மட்டுமல்லாமல் சிறு நகரங்களிலும் இப்போது அபார்ட்மென்ட்கள் பெருகி விட்டன.

நடுத்தர வர்க்கத்தின் முதன்மையான தேர்வாகி விட்டன. பெருகிக் கொண்டே போகும் மக்கள் தொகையையும் குறைந்த அளவேயுள்ள நிலப்பரப்பையும் வைத்துப் பார்த்தால் அபார்ட்மென்டுகளே எதிர்காலம். நோக்கத்தைப் பொறுத்தும் வீடு வாங்குவதை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று, தானே குடியிருக்க வாங்குவது. இரண்டாவது ஒரு முதலீடாக எண்ணி வாங்குவது. முதலீடாக வாங்கும்போது வேறு முதலீட்டில் உள்ள பணத்தைக் கொண்டோ அல்லது சேமிப்பிலிருந்தோ அதைச் செய்தால் நல்லது. தானே குடியிருக்க வாங்குவதில் உள்ள உணர்ச்சிகரம் முதலீட்டு வீட்டில் இருக்கத் தேவையில்லை.

அது பிற சொத்துக்களைப் (தங்கம், பங்குகள், வைப்பு நிதி) போல ஒரு முதலீடு. அவ்வளவே. இறுதியில், பிற சொத்துக்களோடு ஒப்பிடுகையில் அது எவ்வளவு கூடுதலாக வளர்ந்திருக்கிறது என்பதைப் பொறுத்தே அதன் பலன் மதிப்பிடப்படும். ஏனென்றால் கடனில் வாங்குகையில் ஒரு வீடு அதன் பரிவர்த்தனை விலையை விடக் கூடுதல் செலவு வைக்கிறது. அதாவது ஒருவர் வங்கிக்குக் கொடுக்கும் வட்டியையும் சேர்த்து.

எடுத்துக்காட்டாக, 9% வட்டியில் ஒருவர் ரூ. 50 லட்சம் கடனில் வீடு வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். இருபது வருடங்களில் அவர் வட்டியோடு சேர்த்து 1 கோடியே 8 லட்சம் ரூபாய் வங்கிக்கு செலுத்தவேண்டும். வட்டி மட்டுமே 58 லட்சம். இவ்வளவையும் தாண்டி அந்தச் சொத்து எவ்வளவு மதிப்பு கூடியிருக்கிறது என்பதைப் பொறுத்தே அந்த முதலீட்டின் உண்மையான பலன் தெரியும்.

ஓய்வுக் காலத்தில் இருக்கத் தோதான ஒரு வீடு என்பதிற்கும் மேலாகக் கடன் வாங்கி, கூடுதலாக வீடு போன்ற அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வது ஒருவரது ஓய்வுக் காலத்தை சிக்கலாக்கக்கூடும். நல்ல ஒரு நிதி ஆலோசகரின் உதவியோடு செய்யப்பட வேண்டிய பணி இது. முதலீட்டில் உணர்ச்சிவசப்படத் தேவையில்லை. இப்போது முதல் பத்தியைப் படியுங்கள்.

(வண்ணங்கள் தொடரும்)