என் சமையலறையில்...



* மிளகு, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை வறுத்து அரைத்து, புளித்த மோருடன் கலந்து கறிவேப்பிலை, கடுகு தாளித்து கொட்டி, கொதிக்க வைத்தால் புதுவிதமான ரசம் தயார்.

* உளுத்தம் பருப்பை ஊறப்போட்டு அரைத்து கோதுமை மாவுடன் சேர்த்து முதல் நாள் இரவே கரைத்து வைத்து மறுநாள் காலை தோசை வார்த்தால் தோசை சுவையாக இருக்கும்.

* மோர் மிளகாய் தயாரிக்கும்ேபாது அதனுடன் பாகற்காயையும் வில்லை களாக நறுக்கி போட்டு வற்றல் ஆக்கினால் பாகற்காய் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடனும் சுவை மாறி ருசியாக இருக்கும்.

* வேகவைத்த உருளைக்கிழங்குடன் தேவையான அளவு அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து ஓமப்பொடி பிழிந்தால் சுவையாக இருக்கும். காலையில் செய்த கூட்டு மீந்துவிட்டால் அத்துடன் தேவையான அளவு பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து கொதிக்க ைவத்துவிட்டால் மாலை டிபனுக்கு குருமா தயார்.

* ஆரஞ்சு பழத் தோலையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி, வத்தல் குழம்பு செய்தால் சுவை அபாரமாக இருக்கும்
- எஸ்.கலாராணி, கோவை.

* ஒரு கப் மாவிற்கு ஒரு டீஸ்பூன் வீதம் ரவை கலந்து பிசைந்து பூரி சுட்டால் பூரி உப்பலாகக் காட்சியளிக்கும்.

* பாயசம் செய்ய வேண்டிய ஜவ்வரிசியை சிறிது நேரம் ஊறவைத்து விட்டு செய்தால் பாயசம் சீக்கிரம் ரெடியாகி விடும்.
- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.

* சிறிது மஞ்சளுடன் வேப்பங்கொழுந்தை வைத்து அரைத்து அந்த விழுதை காயத்தின் மீது போட சில நாட்களில் காயம் ஆறிவிடும்.
- கே.ராகவி, வந்தவாசி.

* பஜ்ஜி போட்ட பின் கடலைமாவு மீந்துவிட்டால் அதனுடன் மைதா மாவு, அரிசி மாவு, வெங்காயம், உப்பு சேர்த்து தோசை சுட்டால் தோசை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.

* கத்தரிக்காய் காம்புகளை எறிந்துவிடாமல் சாம்பாரிலோ, ரசத்திலோ கொதித்து வரும்போது போட்டால் அதன் சுவையே தனி. எந்த காரப்பொருள் செய்தாலும் அடுப்பில் எண்ணெய் காய ஆரம்பிக்கும்போதே, ஒரு கரண்டி தேங்காய் எண்ணெயைச் சேர்த்துவிடுங்கள். முழுவதுமே தேங்காய் எண்ணெயில் செய்ததுபோல் பட்சணத்தின் சுவையும், மணமும் இருக்கும்.

* அரிசி பாயசம் தயாரிக்கும்போது ரோஜா எசென்ஸ் சில துளிகள் சேர்த்தால் சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

* தேங்காய் வாங்கி பொரியல், கூட்டுகளில் போட்டுச் சமைக்க முடியாத நேரத்தில், பொரியலில் சுவை கூட்ட புழுங்கலரிசியைப் பொரித்துப் பொடி செய்து அதில் தூவி இறக்குங்கள். தேங்காய் சேர்ந்தது போல் சுவையாக இருக்கும்.

* அரிசி உப்புமா செய்யும்போது அரிசி நொய்யில் சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கலந்து பின் செய்தால் உப்புமா வாசனையாக இருக்கும். எலுமிச்சைச்சாறு சேர்க்கும் பதார்த்தங்களுக்கு பச்சை மிளகாய் சேர்த்தால்தான் ருசியாக இருக்கும்.
- ஆர்.ஹேமமாலினி, மணப்பாறை.