ஹார்ட்டிகல்ச்சர்



தோட்ட வேலை செய்வதற்கான உபகரணங்கள் மற்றும் வேலையாட்கள்

விதம் விதமான தோட்டங்கள். மனிதர்களின் மனதுக்கும், இட வசதிக்கும் ஏற்ற தோட்டங்கள் என எல்லாவற்றையும் பார்த்தோம். தோட்டங்கள் அமைக்கத் தேவைப்படுகிற பொருட்களை எப்படிப் பராமரிப்பது என்பதும் மிகவும் முக்கியம். எதற்குமே ஆசைப்படுவது எளிது. ஆனால் அதற்காக உழைக்கவும் அதைத் தக்க வைத்துக் கொள்ளவும் பெரிய முனைப்பு வேண்டும்.

தோட்ட வேலை செய்வதற்கான உபகரணங்கள் மற்றும் வேலையாட்கள் பற்றி இந்த இதழில் காண்போம். தோட்டங்கள் அமைப்பதில் இந்த இரண்டுமே முக்கியமான கலைகள். முதலில் மனிதர்களை இதில் எப்படி ஈடுபடுத்துவது என்று பார்ப்போம். அப்படி ஈடுபடுத்துகிறவர்கள் தொழில் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். மண்ணைக் கொத்துவதாகட்டும், தண்ணீர் விடுவதிலாகட்டும், பூச்சி மருந்து தயாரிப்பதில் ஆகட்டும், அவற்றை அடிப்பதில் ஆகட்டும், எந்த வேலையானாலும் அவர்களுக்கு செடிகளின் மீது அன்பும் அக்கறையும் இருக்க வேண்டும்.

அந்த வேலைகளை திறம்படச் செய்யக்கூடிய கலை அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.  அது பொழுதுபோக்கு தோட்டமாக இருக்கும்வரை வீட்டில் உள்ளவர்களே அந்தத் தோட்டத்தைக் கவனிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆலோசனை. வீட்டில் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுகிற நேரம் குறைந்து விட்டது. ஒருவரை ஒருவர் முகம் பார்த்துப் பேசுவதுகூட இல்லை. 

அவரவர் அவரவர் உலகில் சுழன்று கொண்டிருக்கிறோம். இந்தச் சூழலில் தோட்ட வேலை செய்வது என்பது மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்தும். குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து தினமும் 20 நிமிடங்களைத் தோட்ட வேலைகளுக்கு ஒதுக்கலாம். எல்லோரும் சேர்ந்து பேசிக் கொண்டே ஆளுக்கொரு வேலையாகச் செய்கிறபோது அது மனதுக்கு இதத்தையும் ஆறுதலையும் கொடுக்கும். வீட்டிலுள்ள குழந்தைகளுக்கும் சில வேலைகளை பிரித்துக் கொடுக்கலாம்.

இது உன்னுடைய வேலை, இதை நீதான் முடித்தாக வேண்டும் எனப் பிரித்துக் கொடுக்கலாம். அவர்களது உழைப்பினால் விளைகிற காய்கறிகளையும் பழங்களையும் உபயோகிப்பதில் உள்ள மகிழ்ச்சியைப் புரிய வைக்கலாம். இயற்கையின் மீதான அக்கறையும் நேசமும் அவர்களுக்கு அதிகரிக்கும். பொறுப்பு கூடும். இன்றைய குழந்தைகள் 24 மணி நேரமும் மொபைல் கேம்ஸிலும் கம்ப்யூட்டர் கேம்ஸிலுமே மூழ்கிக் கிடக்கிறார்கள். அதிலிருந்து விலகி, இயற்கையை நோக்கி கவனிக்க வைக்கும்போது அர்த்தமுள்ள இன்னொரு உலகத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.

மண், விதைகள், செடிகளுடன் பழக ஆரம்பிக்கிற அவர்களுக்கு இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதன் விழிப்புணர்வும் வரும். பெரியவர்களுக்கும் தங்கள் பொழுதை பயனுள்ள வகையில் கழித்த திருப்தியை இந்தத் தோட்ட வேலைகள் கொடுக்கும். வீட்டிலிருக்கும் பெண்கள் எந்நேரமும் வீட்டு வேலைகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார்கள். தனக்கென ஒரு நேரத்தைப் பற்றி யோசிக்கவே மாட்டார்கள். தோட்ட வேலைகளில் ஈடுபடுவதன் மூலம் அவர்களுக்கு உடலுக்கும் மனதுக்கும் பயிற்சி கொடுத்தது போல அமையும்.

மன அழுத்தம் குறையும். மொட்டை மாடித் தோட்டத்தில் இனிமையான இசையை ஒலிக்க விட்டபடி வேலைகளைச் செய்வது ரம்மியமாக இருக்கும். கவலைகள் மறந்து போகும்.  எனவே வீட்டு ஆட்களே தோட்ட வேலைகளில் ஈடுபடுவதில் இத்தனை நன்மைகள் உள்ளன. இல்லை... எனக்கு எதற்கும் நேரமில்லை... செடிகள் வைக்க மட்டும்தான் முடியும் என நினைப்பவர்கள், செடிகளின் மீது அன்பிருக்கும் நபர்களை இந்த வேலைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதற்கும் அடுத்தபடியாகத்தான் வேலைக்கு ஆட்கள் தேட வேண்டும். பூச்சி வந்த பிறகுதான் அதை சரி செய்ய வேண்டும் என தயவுசெய்து நினைக்காதீர்கள். வருமுன் காப்போம் என்பது மனிதர்களுக்கு மட்டுமின்றி, செடிகளுக்கும் பொருந்தும். பூச்சித் தாக்குதல் வருகிறதோ, இல்லையோ... செடிகள் ஆரோக்கியமாக இருக்கும்போதே அவற்றுக்குக் கொடுக்க வேண்டிய பூச்சிவிரட்டிகளை சரியான இடைவெளிகளில் கொடுக்க வேண்டும்.

வெளியில் இருந்து ஆட்கள் கூப்பிடும்போது அவர்களுக்கு ஒருநாள் கூலி கொடுக்க வேண்டியிருக்கும். அப்படிக் கொடுக்கும்போது அன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி முன்கூட்டியே ஒரு திட்டமிடல் இருந்தால், நீங்கள் கொடுக்கும் பணத்துக்கேற்ற வேலைகள் சரியாக  நடக்கும். இதனால் எங்களைப் போன்றோர் இப்போது வேலை தெரிந்தவர்களுக்கே பயிற்சிகள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறோம்.  இதனால் செய்யவேண்டிய வேலைகளை முழுமையாகச் செய்கிற வாய்ப்பு கிடைக்கும்.

இதுவரை பார்த்தது மனித சக்தி. அடுத்தது ஆயுத சக்தி. தோட்ட வேலை செய்வதற்கான உபகரணங்கள் எல்லா வேலைகளையும் கைகளாலேயே செய்துவிட நினைக்க வேண்டாம். எந்த வேலையில் ஈடுபடுவோருக்கும் பாதுகாப்பு என்பது முக்கியம். மண்ணைத் தொடுவதில் பிரச்னை இல்லை. ஆனால் சிலருக்கு மண் அலர்ஜி ஏற்படலாம். அதனால் முடிந்தவரை தோட்ட வேலைக்கு பயன்படுத்தும் கருவிகளை உபயோகப்படுத்தலாம்.

இந்த விஷயத்தில் விலை சற்று அதிகமாக இருந்தாலும் நல்ல உலோகங்களால் ஆன உபகரணங்கள் வாங்குவது நல்லது. இதில் நம் தோட்டத்தின் அளவிற்கு ஏற்ப உபகரணங்கள் பரிந்துரைக்கப்படும். ராட்சஷ இயந்திரம் முதல் கையளவு தோட்டத்து உபகரணம் வரை இதில் அடங்கும். மேலும் உடலில் சில பாகங்களை அசைக்க முடியாதவர்களுக்கு ஏற்பவும் உபகரணங்கள் உள்ளது. குழந்தைகளால் உபயோகிக்க முடிந்த உபகரணங்கள் உள்ளன. வயதானவர்களுக்கு ஏற்ற மாதிரி உபகரணங்கள் உள்ளன.

உபகரணங்கள் வாங்குவது மட்டும் அல்லாமல் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றியும் தெரிந்து வைத்தால் நல்லது. ஒவ்வொரு உபகரணத்தையும் வேலை செய்து முடித்தவுடன் நன்கு கழுவி பின்னர் நிழலில் உலர்த்த வேண்டும். அதற்குப் பிறகு தேங்காய் எண்ணெய் எடுத்து  ஒரு துணி கொண்டு தடவி உபகரணப் பெட்டியில் வைக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் நமக்கு செய்யும் வேலையிலும் ஓர் ஆத்ம திருப்தி உண்டாகும் என்பதில் ஐயம் இல்லை. செடி வளர்த்தலில்  தோட்டம் அமைப்பது எவ்வளவு முக்கியமோ அதை விட இரண்டு மடங்கு முக்கியம் பராமரித்தல்.

எழுத்து வடிவம்: மனஸ்வினி