செல்லுலாய்ட் பெண்கள்



ஆண்கள் உலகில் ஆளுமை செலுத்திய நாயகி - அஞ்சலி தேவி

சினிமாவைப் பொறுத்தவரை காலம்தோறும் கனவுக்கன்னிகள் உற்பத்தியாகி தங்கள் அழகு, நடிப்பு போன்றவற்றால் ரசிகர்களையும் ரசிகைகளையும் கட்டிப் போட்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னியாகக் கொண்டாடப்பட்டவர் டி.ஆர். ராஜகுமாரி. தற்போது நயன்தாரா வரை அது தொடர்கிறது.

அந்தக் கனவுக்கன்னி பயணத்தில் ராஜகுமாரியைப் பின் தொடர்ந்து வந்தவர் அஞ்சலிதேவி. தமிழ், தெலுங்குப் படங்களின் வழியாக நீண்டகாலம் தன் ரசிகர்களை கிறங்கடித்தவர். அப்போதைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவரைப் பற்றி எழுதிய பத்திரிகையாளர்களும் கூட அஞ்சலியின் நடிப்பில் கட்டுண்டு கிடந்தார்கள் என்பதற்கு ஒரு சான்று இதோ...

‘மனமோகன லாவண்யத்திற்கு மற்றொரு பெயர் அஞ்சலி; அதி அற்புத சௌந்தர்யத்திற்கு இன்னொரு பெயர் அஞ்சலி. அழகு பிறரது தூண்டுகோல் இல்லாமல் தானே சூட்டிக் கொண்ட பெயர் அஞ்சலி; படவுலகில் இவள் மாயக்காரி; மயக்குக்காரி; சிங்காரி; சொப்பன சுந்தரி’. -  இப்படியெல்லாம் அஞ்சலிதேவி பற்றி வர்ணித்து, 1951ல் எழுதியவர் பிரபல சினிமாப் பத்திரிகையாளர் நவீனன்.

அவர் மட்டுமல்லாமல் அக்கால இளைஞர் பட்டாளம் அந்த அளவு நடிகை அஞ்சலிதேவி மீது அபிமானம் கொண்டவர்களாக
இருந்திருக்கிறார்கள். தாய்மொழியான தெலுங்குப் படங்களில் தோன்றிய அளவுக்குத் தமிழ்ப் படங்களில் அவர் அதிகம் நடிக்கவில்லை என்றாலும் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த ஒரு நடிகையாகவே இருந்துள்ளார். அவரின் சம கால நாயகிகள் பானுமதி, பத்மினி, அவர் காலத்துக்குப் பின் வந்த சாவித்திரி, சரோஜாதேவி அளவுக்கு அவருக்கும் ரசிகர் பட்டாளம் இருந்துள்ளது.

‘கணவனே கண் கண்ட தெய்வம்’, ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’, ‘மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்’ என பல படங்களில் நடித்து, குடும்பப் பாங்கான வேடங்களை ஏற்று பெண்களையும் தன் ரசிகைகளாக்கி வசப்படுத்திக் கொண்டவர். தெலுங்கு மொழி பேசும் பகுதியிலிருந்து வந்த நாயகியானாலும் சென்னையிலேயே தன் குடியேற்றத்தை அமைத்துக் கொண்டவர். தன் இறுதிக்காலம் வரை சென்னையில் கழித்தவர்.   

அன்றைய ஒருங்கிணைந்த சென்னை ராஜதானியில் அமைந்த விசாகப்பட்டினம் அருகே உள்ள பெத்தாபுரம் அவர் பிறந்த ஊர். மொழிவாரி மாநிலங்கள் பிரிவினைக்குப் பின் அது ஆந்திர மாநிலமானது. அஞ்சனம்மா என்பதே பெற்றோர் இட்ட பெயர்; குழந்தை அஞ்சனம்மா ஐந்து வயதை எட்டியபோது குடும்பம் காக்கிநாடாவுக்குக் குடிபெயர்ந்தது. பள்ளிப்படிப்பும் அங்கேயே தொடங்கியது. இயல்பிலேயே ஆடல், பாடல், நடிப்பு போன்ற கலைகளில் சிறுமி அஞ்சனம்மாவுக்கு நல்ல ஆர்வம் இருந்தது.

நாட்டியம் கற்றுக்கொள்வதில் முனைப்புடன் இறங்கியதால் படிப்பைத் தொடரமுடியவில்லை. அதன் பின் தொடர்ச்சியாக நாட்டிய நாடகங்களில் நடிப்பதுடன் தெலுங்கு ராஜ்ஜியம் முழுதும் ஊர் ஊராகச் சென்று நாட்டிய நாடகங்களும் நடத்தப்பட்டன. சிறுமி அஞ்சனம்மாவின் அழகும் நடனமும் எல்லோரையும் கவர்ந்ததைப் போலவே, காக்கிநாடாவைச் சேர்ந்த இளைஞர் ஆதிநாராயண ராவையும் ஈர்த்தது. இசைக்கலைஞரான அவர் சொந்தமாக நாடகங்கள் தயாரித்து நடத்தி வந்தார்.

அஞ்சனம்மாவையும் தன் நாடகங்களில் நடிக்க வைத்தார். அதில் ‘தெருப்பாடகன்’, ‘லோபி’ ஆகிய நாடகங்கள் புகழ் பெற்றதுடன் மக்களின் பாராட்டுதலையும் புகழையும் அஞ்சனம்மாவுக்குக் கொண்டு வந்து குவித்தது. அதற்கேற்ப அவருடைய பெயர்களும் கூட அஞ்சம்மா, அஞ்சனகுமாரி, அஞ்சலிகுமாரி என மாறிக் கொண்டே இருந்தன. 1936ல் குழந்தை நட்சத்திரமாக ‘ராஜா ஹரிச்சந்திரா’ தெலுங்குப் படத்தில் லோகிதாசன் வேடத்தில் அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடிக்க வைக்க அவருடைய பெற்றோர் விருப்பம் கொள்ளவில்லை.

நடனம் மற்றும் நாடகங்களில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதும் என்றே நினைத்தனர். 13 வயது அஞ்சனம்மாவுக்கும் இளைஞர் ஆதிநாராயண ராவுக்கும் இடையே ஏற்பட்ட காதல், 1940ல் கல்யாணத்தில் முடிந்தது. இப்போது போல் இல்லாமல், கல்யாணத்துக்குப் பின்னும் நாடகமும் நாட்டியமும் தொடர்ந்தன. குறும்புத்தனம் கொப்புளிக்கும் முகம், ஆடல், பாடல் திறமையால் கவரப்பட்ட இயக்குநரும் தயாரிப்பாளருமான எல்.வி. பிரசாத் தன் ‘கஷ்ட ஜீவி’ படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்த எண்ணினார்.

ஏனோ அப்படம் நிறைவு பெறாமல் பாதியில் கைவிடப்பட்டது. 1943ல் இரண்டாம் உலகப்போர் பிரச்சார நிதிக்காக கவர்னர் ஹோப் தலைமையில் நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சியின் மூலம் பதினாறு வயது அழகுப்பெண் அஞ்சனம்மா சென்னை நகர மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். அன்று அவரது நடனமும் அழகும் பார்த்தவர்கள் அனைவரையும் கிறங்க வைத்தது. அப்படி கிறங்கியவர்களில் ஒருவர் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் சி.புல்லையா.

அவர் இயக்கிய ‘கொல்ல பாமா’ தெலுங்குப் படத்தின் மூலம் அஞ்சனம்மா திரையுலகில் நுழைந்து அஞ்சலிதேவியானார். புல்லையா வைத்த அப்பெயர் இறுதிவரை நிலைத்தது. 16 வயதுப் பெண் மோகினி வேடத்தில் நடித்தால் கேட்க வேண்டுமா….! 1945ல் இப்படம் சென்னையிலும் வெளியாகி பிரமாதமாக ஓடியது. அடுத்து நாகேஸ்வர ராவுடன் அஞ்சலிதேவி இணைந்து நடித்த ‘கீலு குர்ரம்’ தமிழில் ‘மாயக்குதிரை’யாக மொழிமாற்றம் செய்யப்பட்டு சென்னையில் வெளியிடப்பட்டு பறந்தது.

தங்கள் மனங்கவர்ந்த நாயகி, சொந்தக்குரலில் தமிழில் பேசி நடித்தது ரசிகர்களை மேலும் அஞ்சலி தேவியின் பக்கம் ஈர்த்தது. அதன் பின் தமிழ்ப் படங்களில் நடிப்பதற்கும் அழைப்புகள் தொடர்ந்தன. 1949ல் ‘மகாத்மா உதங்கர்’ என்ற அசல் தமிழ்ப்படம் மூலம் தமிழ் கதாநாயகியாக மீண்டும் பிரவேசம். படம் வெற்றி பெறவில்லை. ஆனால், இதே ஆண்டின் இறுதியில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளியான ‘ஆதித்தன் கனவு’ அஞ்சலி தேவியை தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் பரவலாக அறியச் செய்ததுடன் அவரைப் புகழேணியின் உச்சியில் கொண்டு நிறுத்தியது. 

ராஜா ராணி கற்பனைக் கதையான இப்படத்தின் கதாநாயகன் டி.ஆர்.மகாலிங்கம். மாடர்ன் தியேட்டர்ஸ் போலவே புகழ் பெற்ற நிறுவனம் ஜூபிடர். ஒரே நேரத்தில் பல படங்களை தயாரித்து வெளியிட்டுக் கொண்டிருந்த நிறுவனம் அதே ஆண்டில் தயாரித்த படம் ‘கன்னியின் காதலி’. இந்தப் படத்துக்கும் சில பல சிறப்புகள் உண்டு. ஷேக்ஸ்பியரின் ‘ட்வெல்த் நைட் (பன்னிரண்டாம் இரவு)’ என்ற கதையைத் தழுவி தமிழில் எடுக்கப்பட்ட படம்.  கன்னியும் காதல் கொள்ளும் பேரழகியாக நடித்தவர் அஞ்சலி தேவி.

இதே ஆண்டின் மற்றொரு படம் ‘மாயாவதி’. அழகற்ற தோற்றம் கொண்ட அரண்மனை நாவிதனுக்கு இளவரசி மாயாவதியின் மீது காதல். எப்படியாவது அவளை அடைய வேண்டுமென்பது அவனுடைய லட்சியம். ஆனால், இளவரசி மாயாவதியோ வேற்று நாட்டு இளவரசன் ஒருவனை விரும்புகிறாள். காட்டுக்கு வேட்டையாடச் செல்லும் இளவரசன் அந்த நாவிதனை துணைக்காக அழைத்துப் போகிறான்.

கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை கற்ற நாவிதன், அதை இளவரசனுக்குக் கற்றுத் தருவதாகக் கூறுகிறான். காட்டில் இறந்து கிடக்கும் ஒரு பறவையின் உடலுக்குள் நாவிதன் புகுந்து கொள்ள, நாவிதனின் உடலுக்கு இளவரசன் மாற, தந்திரக்கார நாவிதன் மின்னல் வேகத்தில் இளவரசன் உடலில் புகுந்து குதிரையில் ஏறி அரண்மனைக்குச் செல்ல, அப்போதுதான் இளவரசனுக்கு சூழ்ச்சி புரிகிறது. பறவையின் உடலிலிருந்து மீண்டும் நாவிதன் உடலில் புகுந்து ஊருக்குள் அநாதையாக திரிகிறான்.

இந்த சூழ்ச்சியைக் கண்டறிந்து இளவரசனை மீட்கும் அதி புத்திசாலிப்பெண் மாயாவதியாக நடித்தவர் அஞ்சலிதேவி. 1950-51 ஆம் ஆண்டு அஞ்சலிதேவி ஆண்டு என்று குறிப்பிடும் அளவுக்கு ஆண்டு முழுவதும் அவருடைய படங்களை தாங்கிய சுவரொட்டிகளால் நிறைந்திருந்தன சுவர்கள். ‘மாயக்காரி’, ‘மாயமாலை’, ‘ஸ்திரீ சாகசம்’, ‘நிரபராதி’ போன்ற பெரும்பாலானவை தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டவை. இந்த ஆண்டில் வெளியான நேரடித் தமிழ்ப்படங்கள் இரண்டு மட்டுமே. ‘சர்வாதிகாரி’, ‘மர்மயோகி’ படங்களில் அஞ்சலி தேவியுடன் கதாநாயகனாக நடித்தவர் எம்.ஜி.ஆர்.

1952ல் ஏராளமான தெலுங்குப் படங்களில் நடித்திருந்தாலும், ‘ஏழை உழவன்’ என்று ஒரேயொரு தமிழ்ப்படத்தில் ஆதிக்கத் திமிர் பிடித்த ஜமீன்தாரை எதிர்த்துப் போராடும் ஏழை விவசாயத் தொழிலாளர்களின் போராட்டத்துக்குத் தலைமையேற்றுச் செல்லும் கதாநாயகியாக நடித்தார். நடிக்க வந்த ஒரு சில ஆண்டுகளில் தெலுங்கின் முன்னணி கதாநாயகியர்களில் ஒருவராக அனைத்து கதாநாயகர்களுடனும் நடிக்கும் வாய்ப்பு அமையப் பெற்றவர்.

கல்கியின் ‘பொய்மான் கரடு’ நாவல் ‘பொன்வயல்’ என்ற பெயரில் 1954ல் படமாக்கப்பட்டது. நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன் சொந்தமாகத் தயாரித்து நடித்த படமான இதன் நாயகி அஞ்சலிதேவி. படம் படுதோல்வியை  சந்தித்தது. மற்றொரு படம் ஏ.வி.எம். தயாரித்த ‘பெண்’. இரண்டு நாயகியரில் ஒருவராக வைஜெயந்திமாலாவுடன் இணைந்து நடித்தார். ‘சொன்ன சொல்லை மறந்திடலாமா வா…  வா… வா…’ பாடல் இப்போது கேட்டாலும் ரசிக்க வைக்கும். சாதி மறுப்புத் திருமணத்தில் பிறந்த ‘சாதி கெட்டப் பெண்’ என்பதால், பெண் பார்க்க வருபவர்கள் எல்லாம் அதையே காரணம் காட்டி மறுக்க திருமணம் தடைபட்டுக்கொண்டே போகிறது.

பின், கதாநாயகன் ஜெமினி கணேசனை காதலித்து கல்யாணம் செய்து கொள்ளும் கண்மணி கதாபாத்திரம். ‘சாதி கெட்டப் பெண்’ என்று ஊரும் உறவும் வெறுத்து ஒதுக்கும் கதாநாயகி மீது சந்தேகம் கொண்டு, வேவு பார்த்து, பின் ’வேசி’ யென்று வெறுப்பைக் கக்கும் வார்த்தைகளை அள்ளி வீசி ஒதுக் கிறான் காதலித்து மணந்து கொண்ட கணவன். பின் இருவருக்கும் நண்பர்களான எஸ்.பாலச்சந்தர், வைஜெயந்தி மாலா உதவியுடன் ஒன்று சேர்கிறார்கள் இந்தத் தம்பதிகள்.

சாதி விட்டு சாதி காதலித்து மணம் செய்து கொள்ளும்போது சந்திக்கும் சிக்கல்களை, அக்காலகட்டத்தின் நடைமுறைகளை இப்படம் மிகத் தெளிவாகச் சொல்லும். தந்தை பெரியார், சாதி மறுப்புத் திருமணங்களை 1930களிலேயே ஒரு கலகமாக ஆரம்பித்தார். ஒரு போராட்ட வடிவமாகவே அவர் தொடங்கி வைத்த வரலாறு நெஞ்சில் நிழலாடும். இன்று வரை சாதி மறுப்புத் திருமணங்கள் படும் பாடு பற்றி சொல்லாமலே விளங்கும்.

‘சொர்க்க வாசல்’ படத்தில் பேரறிஞர் அண்ணாதுரையின் அழகு கொஞ்சும் தமிழ் வசனங்களையும் பேசி நடித்திருக்கிறார். இப்படத்தின் நாயகன் எஸ்.எஸ்.ராஜேந்திரன். 55-ன் மிகப் பெரிய வெற்றிப்படம் ‘கணவனே கண் கண்ட தெய்வம்’. கண்ணீரால் கரைந்து ரசிகர்களை, குறிப்பாகப் பெண்களை கலங்க வைத்து வெற்றிப்படமாக ஆக்கியவர் அஞ்சலிதேவி. சிவாஜி கணேசனுடன்  நடித்த ‘முதல்தேதி’ வழக்கமான படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படம். சிவாஜி நாயகனாக அறிமுகமாக இருந்த ‘பூங்கோதை’ என்ற படத்தின் தயாரிப்பாளர் அஞ்சலி தேவி. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரிக்கப்பட்ட படம் அது.

ஆனால், அந்தப் படத்துக்குப் பின் தொடங்கப்பட்ட ‘பராசக்தி’ முன்னதாக வெளியானதால் சிவாஜியின் முதல் படமாக ‘பராசக்தி’ மாறிப்போனது. இல்லையெனில் ‘பூங்கோதை’ படத்திற்கு இப்பெருமை கிட்டியிருக்கும். 1960ல் வெளியான ‘லவகுசா’ தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் பேசியது. இது தெலுங்கின் முதல் வண்ணப்படமும் கூட. அஞ்சலி தேவி சீதையாக நடித்து பெண்களை வசீகரித்தார். ‘ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே’ என்ற மிக நீண்ட பாடல், சுசீலா, பி.லீலா குரல்களில் வானொலியில் எந்த நேரமும் ஒலித்தது.

‘அஞ்சலி ஃபிலிம்ஸ்’ என்ற பெயரில் 27 சொந்தப் படங்களையும் தயாரித்தார். அவற்றில் ‘அனார்கலி’ ஃபிலிம்ஃபேர் விருதை அஞ்சலி தேவிக்குப் பெற்றுத் தந்தது. தெலுங்கிலிருந்து தமிழுக்கும் அது மொழிமாற்றம் செய்யப்பட்டது. ‘அடுத்த வீட்டுப்பெண்’, வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காவியம். அடுத்த வீட்டுப் பெண்ணை காதலிப்பதற்காக டி.ஆர்.ராமச்சந்திரன் தன் நண்பர்களுடன் சேர்ந்து போடும் நாடகங்கள் வாய் விட்டுச் சிரிக்க வைக்கும்.

‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ - இதுவும் சொந்தப் படமே. பல திருப்பங்களைக் கொண்ட பல கதைகளை உள்ளடக்கிய ஃபாண்டஸி கதை. பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட். தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், தெலுங்கில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், கன்னடத்தில் ராஜ்குமார் என்று வெற்றிக் கதாநாயகர்களுடன் இணையாக நடித்துக் குவித்த படங்கள் ஏராளம். தமிழ் உட்பட மும்மொழிகளிலும் 400 படங்களுக்குக் குறையாமல் நடித்தவர். அதில் பல படங்கள் வெற்றிப்படங்கள்.

‘கணவனே கண்கண்ட தெய்வம்’, ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’, ‘மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்’, ‘பூலோகரம்பை’, ‘வீரக்கனல்’, ‘இல்லறமே நல்லறம்’, ‘காலம் மாறிப்போச்சு’ என பட்டியல் போடலாம். அதில் பெண்களின் கண்ணீரை மூலதனமாக்கி வெற்றி பெற்றவை பல படங்கள். படங்களின் தலைப்பே அதன் தன்மையை சொல்லிவிடும்.

50, 60களின் கதாநாயகி என்ற நிலையிலிருந்து அடுத்த நிலையாக ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த் போன்ற நடிகர்களின் அம்மாவாக தோன்றினார். ஸ்ரீதரின் ‘உரிமைக்குரல்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு அண்ணி வேடமேற்று அதையும் சிறப்பாகவே செய்தவர். 1980கள் வரையிலும் இவரது பங்களிப்பு இருந்தது. இங்கு வயதுக்கேற்ற வேடங்கள் என்பது கதாநாயகிகளுக்கு மட்டுமே என்பதும் திரையுலகில் எழுதப்படாத விதி..!

நான்கு முறை ஃபிலிம்ஃபேர் விருது பெற்றவர். தெலுங்குப் படவுலகில் நீண்ட காலம் பணியாற்றியதற்காக 2005ம் ஆண்டு ரகுபதி வெங்கையா விருது பெற்றவர். இவை தவிர இன்னும் பல விருதுகள். இவரின் திரையுலக வாழ்க்கை வெற்றிபெற கணவர் ஆதிநாராயண ராவ் உற்ற துணையாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்தார். இசையமைப்பாளரான அவர், தங்கள் சொந்தப் படங்களுக்கு இசையமைக்காமல் விட்டுவிடுவாரா? ‘ஜீவிதமே சபலமோ’, ‘கண்களும் கவி பாடுதே’, ‘வனிதா மணியே’, ‘அழைக்காதே…. நினைக்காதே….’, ‘மான் மழுவாட... மதி அரவாட… மங்கையும் சேர்ந்தாட…..’, ‘ராஜசேகரா….’ போன்ற பாடல்கள் காலந்தோறும் நினைத்து ரசிக்கும் வகையைச் சார்ந்தவை.

அனைத்துக்கும் மேலாக பிற நடிகைகள் எவருக்கும் கிடைக்காத ஒரு பெருமை அஞ்சலிதேவிக்கு உண்டு. இன்றுவரையிலும் ஆண்கள் ஆதிக்கம் மிகுந்த திரையுலகில் நடிகை, தயாரிப்பாளர் என்பதை எல்லாம் கடந்து 1959-60 காலகட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக சிறப்பாக இயங்கியுள்ளார். இவருக்கு முன்னர் தலைவராக இருந்த எம்.ஜி.ஆரின் ஒப்புதல்பெற்று நடிகர் சங்க இலச்சினை(லோகோ)யையும் மாற்றினார். இப்போது வரை வேறொரு நடிகை, தலைவர் பொறுப்புக்கு வர முடியவில்லை என்பது கவனத்துக்குரியது.

ஆளுமைத்திறன் கொண்ட பெண் என்பதாலேயே இவை அனைத்தும் சாத்தியமாகி இருக்கிறது. இந்துமத சம்பிரதாயப்படி கணவரின் மறைவுக்குப் பின் மனைவிக்கு எந்த மரியாதையும் அளிக்கப்படுவதில்லை. ஒரு அமங்கலியாக, விதவைப் பெண்ணாக மங்கல நிகழ்ச்சிகளில் ஒதுக்கி வைக்கப்படுவதே இங்கு வழக்கம். மணி விழா, சதாபிஷேகம் என்ற கொண்டாட்டங்கள், விழாக்கள் எல்லாமே ஆண்களை முன்னிறுத்தியே இங்கு நடத்தப்படுவது வாடிக்கை.

கணவனின் 60 வயது, 80 வயது விழாக்களில் மனைவியும் இணைத்துக் கொள்ளப்படுவாள், அவ்வளதான். பெண்ணின் வயது, இடம் இங்கு முக்கியத்துவம் பெறாது. அவை எப்போதும் பெண்ணுக்கு இல்லை. ஆனால், கணவரை இழந்த நிலையில் தன்னுடைய 80 வயது நிறைவை, கணவரின் நிழற்படத்தை அருகில் வைத்துக்கொண்டு சதாபிஷேகம் என்ற நிகழ்வாக, விழாவாகச் சம்பிரதாயங்களை மீறி சிறப்புற நடத்திக்கொண்ட துணிச்சல்காரரான ஒரே பெண்மணியும் அஞ்சலி தேவிதான்.

போர் பிரச்சார நடன நிகழ்ச்சி நடத்துவதற்காக சென்னைக்கு வந்ததில் தொடங்கிய அவரது ஏற்றம் அஞ்சலிதேவியின் நீண்ட நெடிய திரை வாழ்க்கையில் குறைந்தபட்சம் கால் நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாக நீண்டது. இவருக்கு முன்னும் பின்னும் பல நடிகைகள் திரைத்துறைக்கு வந்திருந்தாலும் இவரைப் போல வெற்றிகரமாக வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் மிகச் சொற்பமே. அஞ்சலிதேவி ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவர். இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் இவர் சிறப்பிக்கப்பட்டது மிகப் பொருத்தம். அதற்கு
முற்றிலும் தகுதி வாய்ந்தவர் அவர். 2014ல் தன் 86 வயதில் உடல்நலக்குறைவால் மறைந்தார்.

(ரசிப்போம்!)