கெட்ட வார்த்தைக்கு அர்த்தம் தெரியும்





‘பாவாடை, தாவணியில் பார்த்த உருவமா...’ என்று, நடிகர் திலகம் சிவாஜி, டாப்ஸிக்காகத்தான் பாடியிருப்பாரோ என்று வியக்கும் வகையில், சிக்கென்ற தோற்றத்துடன் பாவாடை, தாவணியில் வலம் வந்து கொண்டிருந்தார் டாப்ஸி. ‘மறந்தேன் மன்னித்தேன்’ விழாவில் அனைவருடைய கண்களும் டாப்ஸி என்ற ரோஜாப்பூ மீது வண்டுகளாக மொய்த்தன.

‘‘ரொம்ப, ரொம்ப சந்தோஷமா இருக்கேன். காரணம், இளையராஜா மியூஸிக் பண்ண படத்தில் நான் நடிச்சிருப்பது. தெலுங்குல ‘குண்டெல்லோ கோதாவரி’யா வரும் படம், தமிழில் ‘மறந்தேன் மன்னித்தேன்’ பெயரில் வருது. ரெண்டு படத்துக்கும் இளையராஜா மியூஸிக். அவர் பண்ண ரீ-ரெக்கார்டிங்கும் சரி, கம்போஸ் பண்ண பாட்டுகளும் சரி, இந்த படத்தை எங்கோ கொண்டு போயிருக்கு.

‘ஆடுகளம்’ பண்ணப்ப, ‘தமிழில் ஜெயிக்கணும்னா, கண்டிப்பா நீ தமிழ் பேச கத்துக்கணும். பதில் சொல்றதும் தமிழ்லதான் இருக்கணும்’னு டைரக்டர் வெற்றிமாறன் சொன்னார். அதுக்கு பிறகு தீவிரமா தமிழ் கத்துக்கிட்டேன். ஆனா, சரளமா தமிழ் பேச தெரிஞ்சவங்க கிட்ட தமிழில் பேச பயமா இருக்கு...

சமயத்துல ஒரு சில கெட்ட வார்த்தைகளை என்னை கலாய்க்கணும்னு சிலர் கத்துக் கொடுப்பாங்க. அதனால யார் என்ன வார்த்தையை சொல்லித் தந்தாலும் உடனே ரெண்டு, மூணு பேர்கிட்ட அதுக்கு அர்த்தம் கேட்டு தெரிஞ்சுப்பேன். ஸோ, எல்லா கெட்ட வார்த்தைக்கும் இப்ப அர்த்தம் தெரியும். யாரும் என்னை ஏமாற்ற முடியாது...’’ என்று சிரித்தவர், ‘மறந்தேன் மன்னித்தேன்’ குறித்து பேச ஆரம்பித்தார்.

‘‘புரொடியூசர் லஷ்மி மஞ்சுவும், நானும் நெருக்கமான தோழிகள். அவரோட பிரதர்ஸ் விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு ரெண்டு பேரும் நல்ல பிரண்ட்ஸ். ‘மறந்தேன் மன்னித்தேன்’ படம் ரொம்ப யதார்த்தமா வந்திருக்கு. இளையராஜா இந்த படத்தை கைப்பிடிச்சு கூட்டிட்டு போறார். அதனால், பெரிய ஹிட்டாகும்.

ஆந்திராவிலுள்ள கிழக்கு கோதாவரி ஆற்றில், கடுமையான மழை காரணமா திடீர்னு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கே இருந்த ஒரு அணை உடைந்து, ஐம்பதாயிரம் பேருக்கு மேல் செத்துட்டாங்க. இந்த சம்பவம் எல்லா நாட்டு மக்களையும் ஒரு உலுக்கு உலுக்கியது. இதை கருவா வெச்சுதான் ‘மறந்தேன் மன்னித்தேன்’ உருவாகி இருக்கு.



ஆந்திராவிலும், சென்னையிலும் ஷூட்டிங் நடந்தது. நானும், ஆதியும் சேர்ந்து நடிச்ச காட்சி ஐதராபாத்தில் போட்டிருந்த செட்டுகளில் படமாச்சு. ஒவ்வொரு செட்டும் பிரமாண்டமா இருக்கும். ஒரு கிராமம், ஒரு ஆறு, ஒரு குளம், ஒரு பெரிய ஏரி... இப்படி நாம் கனவில் கூட நினைச்சு பார்க்காத ஏரியாக்களை செட்டுகளா போட்டு அசத்திட்டாங்க. நான் அந்த சரளா என்ற கிராமத்து பொண்ணாவே மாறிட்டேன்...’’ என்றவரிடம், நயன்தாராவுடன் நடிப்பது பற்றி கேட்டோம்.

‘‘ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போனா, எல்லாருக்கும் ‘ஹாய்’, ‘ஹலோ’ சொல்வேன். விஷ்ணுவர்தன் டைரக்ஷனில் அஜீத், நயன்தாரா ஜோடி கூட சேர்ந்து நானும், ஆர்யாவும் நடிக்கிறோம். இதுவரை எங்களுக்குள்ள ஈகோ எட்டிப் பார்த்தது கிடையாது. நான் என் வேலையை செய்வேன். அவங்களும் அவங்கவங்க வேலையை செய்வாங்க. இந்த படமும் எனக்கு டர்னிங் பாயின்டா இருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜீத், நயன்தாரா, ஆர்யா எல்லாருமே எனக்கு வசனம் பேசவும், நடிக்கவும் சொல்லிக் கொடுத்தாங்க...’’ என்ற டாப்ஸி, பாலிவுட்டிலும் நடிக்கிறார்.
- தேவராஜ்