மச்சான் என்னை மறந்துட்டியா..?





இயக்குநர் ஷக்தி சிதம்பரம் படங்களில் காமெடி எப்போதும் தூக்கலாக இருக்கும். அந்த வகையில் ஆர்.கே. ஸ்டூடியோஸ் பாலமுருகனுக்காக அவர் இயக்கியுள்ள ‘மச்சான்’ காமெடி கலந்த சென்டிமென்ட் படமாக வந்துள்ளது.

‘‘ரொம்ப சந்தோஷமாக இருக்கு பாஸ்...’’ என்று புன்னகையுடன் பேச ஆரம்பித்தார், ஷக்தி சிதம்பரம். ‘‘இது இரண்டு நண்பர்களைப் பற்றிய கதை. 12 ரீல் நகைச்சுவை, 2 ரீல் கண்கலங்க வைக்கும் சென்டிமென்ட் என்ற விகிதத்தில் திரைக்கதையை அமைத்திருக்கிறேன்.

ஆல் இன் ஆல் அழகு ராஜா என்ற வித்தியாசமான நகைச்சுவை கேரக்டரில் கருணாஸ் நடிக்கிறார். அவருடைய நண்பராக லொள்ளு பாண்டி என்ற நக்கல், நையாண்டி கேரக்டரில் நான் நடிக்கிறேன். நாயகியாக ஷெரில் பிண்டோ நடிக்கிறார். அனிமல் அரசு என்ற கேரக்டரில் விவேக் வாழ்ந்திருக்கிறார்.

இது தவிர இரண்டு நாய்களுக்கு படத்தில் முக்கியத்துவம் இருக்கும். தன் நாய்க்காக ஷெரில் பிரிண்டோ நீதிமன்றத்தில் வழக்காடும் காட்சி காமெடியின் உச்சமாக இருக்கும். ஏனெனில், வெண்ணிற ஆடை மூர்த்தியை நீதிபதியாக கொண்ட அந்த நீதிமன்றத்தில் விவேக் இரட்டை அர்த்தத்தில் பேசும் போது, வெண்ணிற ஆடை மூர்த்தி, ‘இரட்டை அர்த்தத்தில் பேசக் கூடாது’ என்று கண்டிப்பார். அதற்கு விவேக், ‘இரட்டை அர்த்தத்தைப் பற்றி நீங்கள் பேசுகிறீகளா?’ என்று கவுண்டர் டயலாக் கொடுப்பார். படத்தில் இது போல் காமெடி காட்சிகள் நிறைய உண்டு.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் நானும், அறிவுமதியும் இணைந்து பாடல்களை எழுதியுள்ளோம். நட்பைப் போற்றி நான் எழுதியுள்ள ‘நண்பா என்னை மறந்துட்டியா? தோழா என்னை மறந்துட்டியா...’ என்ற பாடல் நட்புக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் இருக்கும்...’’ என்கிறார் நடிகரும் இயக்குநருமான ஷக்தி சிதம்பரம்.
- சுரேஷ்ராஜா