தமிழ் சினிமாவில் பெருகும் விளம்பர ஸ்டண்டுகள்





‘சுமை கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம்’ என்பது ஒரு கிராமத்து பழமொழி. அப்படித்தான் ஆகிவிட்டது சினிமாவும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியோடு 50 லட்சத்துக்குள்ளேயே ஒரு படத்தை எடுத்துவிடலாம். ஆனால், அந்தப் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்து மக்களை பார்க்க வைக்க வேண்டுமானால் குறைந்தது ஒருகோடி ரூபாயாவது வேண்டும். சென்சார், வணிகவரித்துறை, லேப், சம்பளம் - தலைப்பு - கதை பிரச்னை, லெட்டர்பேட் அமைப்புகளின் மிரட்டல், மீடியேட்டர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள், பத்திரிகை, தொலைக்காட்சி விளம்பரங்கள், விளம்பர பேனர்கள், போஸ்டர்கள்... இத்தனை படிகளையும் தாண்டித்தான் ஒரு படம் தியேட்டருக்கு வரும். அப்படி வருவதற்குள் தயாரிப்பாளரின் தாவு தீர்ந்து விடும்.

சுமார் 800 படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன. வாரத்துக்கு 5 முதல் 8 படங்கள் ரிலீசாகிறது. இந்த நெரிசலுக்குள் ஒரு படத்தை மக்கள் முன் நிறுத்துவது என்பது அத்தனை சுலபமான வேலை இல்லை. அதற்கான குறுக்கு வழிதான் விளம்பர ஸ்டண்டுகள். அதில் சில புத்திசாலித்தனமாகவும் இருக்கும், சில அரைவேக்காட்டுத்தனமாகவும் இருக்கும், சில காமெடியாகவும் இருக்கும்.

ஒரு படம் வெளிவருவதற்கு முன்பே வேண்டுமென்றே அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்களே படம் பற்றிய கான்ட்ரவர்சிகளை கிளப்பி விடுவார்கள். அது மதம், சாதி தொடர்பானதாகவோ, அல்லது ஒரு தலைவர் - கட்சி - அரசியல் தொடர்பானதாகவோ இருக்கலாம். அல்லது தனிப்பட்ட ஒருவரைப் பற்றியதாகவோ இருக்கலாம். ‘இந்தப் படம் எங்கள் சாதியை இழிவு படுத்துகிறது. எங்கள் மதத்தை குறைத்து மதிப்பிடுகிறது. எங்கள் தலைவரை அவமதித்து விட்டார்கள்’ என்று படத்தைப் பார்க்காமலேயே கோர்ட்டுக்குப் போவார்கள். பத்திரிகைகளில் நான்கு நாட்கள் பரபரப்பாக செய்தி வரும். கடைசி யில் விசாரித்துப் பார்த்தால், சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப்பாளரின் ஆசியோடு தான் அத்தனையும் நடந்திருக்கும்.


அடுத்து படம் முடிந்த பிறகு படத்தின் ஹீரோயின் பற்றி ஒரு சர்ச்சையைக் கிளப்புவது. படப்பிடிப்பில் ‘அப்படி டார்ச்சர் கொடுத்தார், இப்படி நடந்து கொண்டார்’ என்று தயாரிப்பாளரோ, இயக்குநரோ ஹீரோயினைப் பற்றிச் சொல்வார். அல்லது ‘ஹீரோ சரியில்லை, இயக்குனர் சரியில்லை’ என்று ஹீரோயினை சொல்ல வைப்பார்கள்.

‘இது நிஜக் கதை. அவரது வாழ்க்கையைத் தழுவியது, இவரது வாழ்க்கையைத் தழுவியது’ என்பார்கள். உடனே சம்பந்தப்பட்டவர்கள் ‘எங்கப்பா பற்றி எடுத்திருக்காங்க, தாத்தா பற்றி எடுத்திருக்காங்க’ என்று கோர்ட்டுக்கு போவார். அதில் கொஞ்சம் பப்ளிசிட்டி ஓடும். இன்னும் சிலர் ‘இது என்னோட கதை. திருடிட்டாங்க’ என்று வழக்குத் தொடர்வார். இன்னும் சிலர் ‘இந்தத் தலைப்பு என்னோடது. பிறக்கும்போதே இந்த தலைப்போடதான் நான் பிறந்தேன்’ என்பார். இந்த மாதிரி நடவடிக்கைகளில் 90 சதவிகிதம் படத்துக்கு பப்ளிசிட்டி தேடும் ஐடியாக்கள்தான்.


பாடல் வெளியீட்டு விழாக்களில் சில கூத்துகளை நடத்தி அதையும் பப்ளிசிட்டி ஆக்குவார்கள். அண்மையில் ஒரு படத்தின் பாடலை கப்பலில் வெளியிட்டார்கள். இன்னொரு படத்தின் பாடலை ஓடும் பஸ்சில் வெளியிட்டார்கள். ரொம்ப நாளைக்கு முன்பே ஒரு படத்தின் பாடல்களை விமானத்தில் வெளியிட்டார்கள். இதனால் யாருக்கு என்ன லாபம் என்று யோசித்தால் ஒன்றுமே இல்லை. படத்துக்கு ஒரு பப்ளிசிட்டி. அவ்வளவுதான். ஆடியோ ஃபங்ஷன் அழைப்பிதழ் களை காஸ்ட்லியாக அச்சடிப்பார்கள். படத்தின் கான்செப்டுக்கேற்ப அழைப்பிதழ் இருக்கும். படம் ரிலீசானதும் அழைப்பிதழ் அச்சடிப்பதில் காட்டிய அக்கறையை கொஞ்சம் படத்திலும் காட்டியிருக்கலாமே என்று தோன்றும். படம் ரிலீசானதும் அந்தப் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் தியேட்டர் தியேட்டராகப் போய் காட்சி தருவார்கள். இது பழைய ஐடியா. கொஞ்ச காலம் இல்லாமல் இருந்தது. அதனை ‘ராஜா ராணி’ மீண்டும் தொடங்கி வைத்திருக்கிறது. படம் வெள்ளிக்கிழமை வெளியானால் சனிக்கிழமையே நட்சத்திர ஹோட்டலில் கூடி சக்சஸ் பார்ட்டி வைப்பது தான் இப்போது பெரிய படங்கள் செய்யும் லேட்டஸ்ட் பப்ளிகுட்டி ஸ்டண்ட்.
எதை தின்றால் பித்தம் தெளியும் என்று அலைவதைப் போல எதைச் செய்தால் படத்துக்கு பப்ளிசிட்டி கிடைக்கும் என்று கதைக்கு ரூம் போட்டு யோசிப்பதைப் போல் விளம்பர ஐடியாவுக்கும் யோசித்துக் கொண் டிருக்கிறார்கள். மிரட்ட அவர்கள் ரெடி. மிரள நீங்க ரெடியா?
- மீரான்

(படத்தில் இருக்கும் நடிகைகள் ஜெனிபர், நீலம் உபாத்யா, ஆக்ஷா ஆகியோருக்கும் இந்தச் செய்தி களுக்கும் தொடர்பில்லை)