காதலர்களைத் துரத்தும் மதயானைகள்





‘ராட்டினம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி இப்போது ‘எட்டுத்திக்கும் மதயானை’ என்ற படத்தை சொந்தமாக தயாரித்து இயக்கி வருகிறார். ஆர்யா வின் தம்பி சத்யாதான் ஹீரோ. ஸ்ரீமுகி என்ற புதுமுகம் ஹீரோயின்.

‘திருநெல்வேலி பக்கம் ஷூட்டிங். வாங்களேன்’ என்று அழைத்திருந்தார் தங்கசாமி. தீபாவளி ரெயில் நெரிசல் காரணமாக பஸ்சிலேயே நெல்லைக்கு பயணம். குற்றாலத்தில் ஒரு குளியல் போட்டுவிட்டு ஷூட்டிங் போகலாம் என்பது திட்டம். அதன்படி குற்றாலத்துக்கு பஸ் ஏறினோம். பத்து கிலோ மீட்டர் தாண்டியதும் சாலையோரம் ஒரு விபத்து நடந்ததற்கான அடையாளமாக நேருக்கு நேர் இரண்டு கார்கள் மோதி சின்னாபின்னமாகிக் கிடந்தன. ஆங்காங்கே ரத்தக் குவியலோடு உடல்கள். பஸ்சை ஓரமாக நிறுத்திய டிரைவர் 100க்கு போன் செய்தார்.

கீழே இறங்கிப் பார்த்தால் அப்படியொரு ஆச்சர்யம். இயக்குநர் தங்கசாமி, கேமராமேன் ஆர்.ஜே.ஜெய் இருவரும் ஒரு மரத்தடியில் நின்று தீவிரமாக எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஹீரோ சத்யா, ஹீரோயின் ஸ்ரீமுகி மீது லேசான ரத்தக் கறைகள். படப்பிடிப்புக்குச் செல்லும்போது இவர்கள் விபத்துக் குள்ளாகிவிட்டார்களோ என்ற பயத்தில் அருகில் சென்றபோதுதான் தெரிந்தது, படப்பிடிப்பே அதுதான் என்று.
நம்மை அங்கு பார்த்ததும், ‘‘குற்றாலம் போறதா சொன்னீங்களே?’’ என்றார் இயக்குநர். ‘போகிற வழியில்தான் உங்க விபத்து இறக்கி  விட்டிருச்சு’ என்றோம். சிரித்தபடியே காட்சி பற்றி விளக்க ஆரம்பித்தார்.

‘‘இந்தக் காட்சியோட சூழ் நிலையைச் சொன்னா படத்தோட கதையைச் சொல்ற மாதிரி ஆயிடும். கிளைமாக்ஸ் பக்கம் வர்ற ஒரு விபத்து சீன் இது. கதையோட போக்கையே மாத்தும். இந்த சீனை சும்மா கிராபிக்ஸ் வச்சு விளையாடக் கூடாதுன்னு முடிவு பண்ணி நிஜமாகவே இரண்டு சுமோ கார்களை வாங்கி மோத வச்சி படம் எடுத்திருக்கோம். பல லட்சம் செலவுதான். ஆனாலும் சீன் அவ்ளோ யதார்த்தமா, திகிலா வந்திருக்கு...’’ என்று மானிட்டரில் பதிவானதைப் போட்டுக் காட்டினார்.


நமக்கும் அதிர்ச்சிதான். ஒரு சிக்னல் கேமராவில் பதிவான உண்மையான விபத்து போலவே இருந்தது அந்தக் காட்சி.

சரி, படம் பத்தி சொல்லுங்க என்றதும், ‘‘இதுவரை வெளி வராத புதிய கதை, களம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். எல்லாரும் சொன்ன கதையைத்தான் வித்தியாசமா சொல்ல ட்ரை பண்ணியிருக்கேன். நடுக்காட்டுல மாட்டிக்கிட்ட ஒருத்தனை நோக்கி எட்டுத்திக்கிலும் இருந்து மதயானைங்க புறப்பட்டு வந்தா அவன் என்ன செய்வானோ அதைத்தான் படத்தோட ஹீரோ செய்யறான். நடுக்காட்டுக்கு பதிலா காதல்னு வச்சிக்குங்க. மதயானைக்கு பதிலா வேறு வேறு வில்லன்கள்.

மீடியம் பட்ஜெட்டுல ஒரு மெகா பட்ஜெட் எபெக்டில் ஒரு படம் கொடுப்பதற்கான முயற்சி இது. சத்யா, ஆர்யாவோட தம்பி. ஆனா, அந்த எண்ணமே இல்லாம புதுமுகம் மாதிரி அப்படி நடிக்கிறார். ஹீரோயின் ஸ்ரீமுகி நடிப்புல பின்னி எடுக்குறாங்க. ஆனா, லேங்குவேஜ் பிராப்ளம் இருக்கு. தமிழ் சுட்டுப் போட்டாலும் வரலை. இத்தனைக்கும் லோக்கல் டி.வி.காம்பியரா நடிக்கிறாங்க. வளவளன்னு நெல்லை தமிழ் பேசணும். இப்போ என் கஷ்டம் உங்களுக்கு புரிஞ்சிருக்கும். எப்படி சமாளிச்சேங்கறது இப்போதைக்கு ரகசியம். படம் ரிலீசுக்கு அப்புறம் சொல்றேன்...’’

என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது இரண்டு வேன்கள் நிறைய போலீசும், ஒரு 108 ஆம்புலன்சும் வந்தன. எல்லாம் நாம் வந்த பஸ்ஸின் டிரைவர் அடித்த போனின் விளைவு. பக்குவமாக அவர்களிடம் பேசிவிட்டு வந்தவர், ‘‘முறையா பர்மிஷன் வாங்கித்தான் ஷூட் பண்றேன். இருந்தாலும் இந்த மக்கள் போனுக்கு மேல போன் பண்ணிடுறாங்க. அவங்களை ஒருவழியா சமாளிச்சிட்டேன். சீக்கிரமா முடிச்சிட்டு இடத்தை காலி பண்ணுங்கன்னு சொல்லியிருக்காங்க. இன்னும் இரண்டே ஷாட்தான். முடிச்சிட்டு வந்துடுறேன். அப்புறமா குற்றாலம் போகலாம்...’’ என்று களத்தில் இறங்கினார்
தங்கசாமி.
- மீரான்