பெண் இசையமைப்பாளர்கள் ஏன் வெற்றி பெறுவதில்லை?





டி.இமானிடம் கேளுங்கள்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில், ஹீரோ
சிவகார்த்திகேயனை ஏன் பாட வைத்தீர்கள்?
- கா.கருப்பசாமி, சங்கரன்கோவில்.
ஒரு ‘ரஃப்’ ஆன வாய்ஸ் தேவைப்பட்டது. அப்போது சிவகார்த்திகேயன் ஞாபகத்துக்கு வந்தார். உடனே அவரிடம் கேட்டபோது, ‘அய்யய்யோ... நான் பாடணுமா?’ என்று பயந்தார். அந்த நடுக்கம் நன்றாக இருந்தது. பிறகு எனது ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்த அவர், நான் சொல்லிக் கொடுத்தபடி, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்...’ என்ற பாடலை அற்புதமாகப் பாடினார். தொடர்ந்து அவர் பாடலாம். தகுதியானவர்தான்.

உங்கள் இசை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று, ஏதாவது இலக்கணம் வகுத்திருக்கிறீர்களா?
- சங்கர், கோயமுத்தூர்.
அப்படியொரு இலக்கணத்தை வகுக்கவில்லை. படத்தின் கதையும், காட்சியமைப்பும் என்ன கேட்கிறதோ அதை மட்டுமே செய்ய வேண்டும். அப்போதுதான் ரசிக்க முடியும். என்னிடம் இருந்து டைரக்டர் என்ன எதிர்பார்க்கிறாரோ அதை மட்டுமே கொடுக்கிறேன். ரசிகர்களை மகிழ்விப்பதுதான் எங்கள் வேலை.

சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றதை வரவேற்கிறீர்களா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
இல்லை. அவர் ஓய்வு பெற்றதை நினைத்து வருத்தப்
படுகிறேன். சச்சினை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மறுபடியும் விளையாட வேண்டும். ஏதாவது மந்திர, தந்திரம் செய்தாவது அவரது வயதைக் குறைக்க வேண்டும்.

இசைத்துறையில் உங்களால் புரிந்துகொள்ள முடியாத விஷயம் எது?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
எல்லா விஷயத்தையும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாது. இசைத்துறையின் மூலம் கிடைக்கும் அனுபவங்கள், நாள்தோறும் ஒரு பாடத்தைக் கற்றுத் தருகிறது. அதை கற்றுத் தெளிவதன் மூலம் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. ‘கல்லாதது கடலளவு’ என்பதுதான் உண்மை.

பெண் இசையமைப்பாளர்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததற்கு காரணம், ‘ஆணாதிக்கம்’ என்று சொல்லலாமா?
- பத்மா, திருப்பரங்குன்றம்.
பொதுவாக அப்படி சொல்லக்கூடாது. ஒவ்வொருவரிடமும் பல்வேறு திறமைகள் ஒளிந்து கிடக்கிறது. சரியான சந்தர்ப்பம் வாய்க்கும்போது மட்டுமே அந்தத் திறமைகள் வெளிப்படும். ஏராளமான துறைகளில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் வெற்றிக்கோலோச்சி வரும் இக்காலத்தில், திரையுலகிலுள்ள பெண் இசையமைப்பாளர்களும் கண்டிப்பாக சாதிப்பார்கள். நல்ல சந்தர்ப்பங்கள் அமையும்போது, அவர்களும் சாதனை படைப்பார்கள்.

ரசிகர்கள் மனதில் நிரந்தர இடம்பிடிப்பார்கள்.
இதுவரை நீங்கள் பாடிய பாடல்கள் என்னென்ன?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
‘மாத்து மாத்து...’ (தமிழன்), ‘மொபைலா மொபைலா...’ (இரண்டு), ‘ரெண்டுலதான் ஒண்ண தொட...’ (கிரி), ‘உலகத்துல...’ (கோவை பிரதர்ஸ்), ‘அதோ அந்த பறவை...’ (மதராசி), ‘ஒண்ணுந்தெரியல...’ (கும்கி) மற்றும் ‘மகாராஜா’, ‘ரம்மி’ ஆகிய படங்களில் பாடியிருக்கிறேன். ‘கோவை பிரதர்ஸ்’ படத்தில் மட்டும் அந்தப் பாடல் காட்சியில் தோன்றியிருப்பேன்.

டி.வியில் இருந்து சினிமாவுக்கு வந்து ஜெயித்ததற்கு காரணம் உங்கள் திறமையா? அதிர்ஷ்டமா?
- சங்கீதசரவணன், மயிலாடுதுறை.
திறமையும், அதிர்ஷ்டமும் இருந்தால் மட்டும் போதாது. முதலில் நம் திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் அமைய வேண்டும். அப்போதுதான் நாம் யார் என்று நிரூபிக்க முடியும். என் வளர்ச்சி என்பது, தனிப்பட்ட வளர்ச்சி அல்ல. ஒரு கூட்டுக்குடும்பமாக இருந்துதான் இசைப்பணியை மேற்கொள்கிறோம். தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், ரசிகர்களும் கொடுக்கும்
அன்பும், ஆதரவும்தான் எங்களுக்கு டானிக்.

எந்த இசையமைப்பாளரை போட்டியாக நினைக்கிறீர்கள்?
- ஆர்.கார்த்திகேயன், அண்ணாநகர் கிழக்கு.
யாரையும் போட்டியாக நினைக்கவில்லை. ஆனால், மக்கள் விரும்பும் பாடலைக் கொடுக்க வேண்டும் என்பதில், இன்றைய இசையமைப்பாளர்கள் மத்தியில் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. ஒவ்வொருவரும் அவரவர் திறமை மீது நம்பிக்கை வைத்தால் போதும். யாரும், யாருடைய வாய்ப்பையும் தட்டிப்பறிக்க முடியாது.

உங்களுக்கு சமைக்கத் தெரியுமா?
- மு.ரா.பாலாஜி, சொர்ணாகுப்பம்.
எனக்கு இசையை அமைக்க மட்டும்தான் தெரியும். சுவைபட உணவை சமைக்கத் தெரியாது.


உங்கள் பிறந்தநாள் எப்போது? வாழ்த்து அனுப்ப விரும்புகிறேன்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
ஜனவரி 24ம் தேதி என் பிறந்தநாள். அடுத்த ஜனவரியில் கண்டிப்பாக உங்கள் வாழ்த்தையும், ஆசியையும் எதிர்பார்ப்பேன். மறந்து விடாதீர்கள் நாராயணா.
(இன்னும் சொல்வேன்)
தொகுப்பு: தேவராஜ்