அந்தரங்கத்தை அம்பலப்படுத்தும் நடிகை





புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தேறிய மனீஷா கொய்ராலா, பெண்கள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னம்பிக்கை பெறும் வகையில் ஒரு புத்தகம் எழுத ஆரம்பித்துள்ளார். இது ‘ஆட்டோபயாகிரஃபி’ பாணியில் இருக்காது என்கிறார்கள். இதையடுத்து, ‘கவர்ச்சி பாம்’ என்று  சொல்லப்படும் ஷகீலா ஒரு புத்தகம் எழுத ஆரம்பித்துள்ளார். இது ‘ஆட்டோபயாகிரஃபி’ வகையைச் சேர்ந்தது. இதுவரை தன் வாழ்க்கையில் நடந்த எல்லா விஷயங்களையும் ஒளிவுமறைவின்றி சொல்லப் போகிறாராம். அவர் யாரை, எதற்கு வம்பு இழுக்கப் போகிறாரே தெரியவில்லை. சில மாதங்களில் பரபரப்பு வெடிக்கப் போகிறது.
 
தனக்கு ‘கமர்ஷியல் ஹீரோ’ அந்தஸ்து ஏற்படுத்திக் கொடுத்த கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்ஷனில் நடிக்க சூர்யா மறுத்துள்ள நிலையில், சிம்பு ஹீரோவாக நடிப்பார் என்று கூறப்பட்டது. ஓரிரு நாளில் அந்தச் செய்தி பிசு பிசுத்து விட்டது. இந்நிலையில் வலுக்கட்டாயமாக கவுதமை ஏ.எம்.ரத்னம் ஆபீசுக்கு அழைத்துச் சென்ற அஜீத், ‘தீபாவளிக்கு ரிலீசான ‘ஆரம்பம்’ படத்துக்கு பிறகு ‘வீரம்’ படத்துல நடிக்கிறேன். அதுக்கு பிறகு நான் நடிக்கும் படத்தை கவுதம் இயக்குகிறார். அதுக்கு நீங்கதான் தயாரிப்பாளர்’ என்று இன்ப அதிர்ச்சி கொடுத்தாராம். இதற்குமுன் அஜீத் நடிக்க மறுத்த சில படங்களில், சூர்யாவை நடிக்க வைத்தனர். இப்போது சூர்யா நடிக்க மறுத்த படத்தில் அஜீத் நடிக்கிறார். மாற்றம் ஒன்றே மாறாதது.

‘பாண்டிய நாடு’ படத்தை ‘விஷால் பிலிம் பேக்டரி’ சார்பில் தயாரித்து நடித்த விஷால், அடுத்து தன் நிறுவனம் சார்பில் மூன்று படங்கள் தயாரித்து நடிக்கிறார். அதில் ஒரு படத்தை இயக்குநர் அகத்தியன் மருமகன் திரு இயக்குகிறார். இதற்கு ரஜினியின் படத் தலைப்பான ‘நான் சிகப்பு மனிதன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தமன் இசையமைக்கிறார். ‘பாண்டிய நாடு’ ஹிட்டுக்குப் பிறகு மீண்டும் விஷால், லட்சுமி மேனன் ஜோடி சேருகின்றனர். அடுத்த படத்தை தெலுங்கு இயக்குநர் சீனு வைட்லாவின் உதவியாளர் இயக்குகிறார். இது, முதல்முறையாக விஷால் நடிக்கும் நேரடி தெலுங்குப் படமாகும். பிறகு தமிழிலும் ‘டப்’ செய்யப்படுகிறது. இப்படங்களுக்குப் பிறகு ஹரி இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஷால். இந்த தீபாவளிக்கு ‘பாண்டிய நாடு’ ரிலீசானது போல், அடுத்த தீபாவளிக்கு ஹரி இயக்கும் படம் ரிலீசாகும் என்றார் விஷால்.

தெலுங்கு முன்னணி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ மௌலி, ‘மஹதீரா’ படத்தின் தமிழ்ப் பதிப்பான ‘மாவீரன்’ மற்றும் ‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ்நாட்டிலும் புகழ்பெற்றுள்ளார். இப்போது அவர் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ‘பாகுபாலி’ என்ற படத்தை தெலுங்கில் இயக்குகிறார். பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ஸ்ரீதேவி, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், கோபிசந்த், பிரகாஷ்ராஜ், நாசர் உள்பட பலர் நடிக்கும் இப்படம், தமிழில் ‘மஹாபலி’ என ‘டப்’ செய்யப்பட்டு, 2015ல் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வீட்டிலிருந்து சைக்கிளில் வருகிறார் ராஜ மௌலி. அவர் சைக்கிள் ஓட்டும் காட்சி மற்றும் படத்தைப் பற்றிய முதல் டீசர் சமீபத்தில் வெளி யிடப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.



‘காதல்’ படத்தில் நடன இயக்குநராக அறிமுகமான காதல் கந்தாஸ், பிறகு ‘வெயில்’, ‘அங்காடித் தெரு’, ‘நான் மகான் அல்ல’, ‘நீர்ப்பறவை’ உள்பட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி ஆகிய மொழிகளில் இருநூறு படங்களுக்கு நடனப் பயிற்சி அளித்துள்ளார். இப்போது அவர் இயக்குநராக அறிமுகமாகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கன்னடப் பட வுலகின் ‘டைனமிக் ஸ்டார்’ தேவராஜ், முதல்முறையாக ‘டைனமிக் விஷன்ஸ்’ சார்பில் தயாரிக்கும் படம், ‘நன்ன இஷ்டானு’ (என்னை பிடிக்குமா?). கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறேன். ஸ்ரீ ஒளிப்பதிவு செய்ய, அர்ஜுன் ஜென்யா இசையமைக்கிறார். தேவராஜ் மகனும், கன்னட நடிகருமான பிரஜ்வால் தேவராஜ் ஹீரோவாக நடிக்கிறார்’ என்றார்.

காயத்ரிக்கு ஒரு விசித்திரமான பழக்கம். அதாவது, அவர் வாயைக் கவனித்தால் அசைந்துகொண்டே இருக்கும். நறுமணத்துக்காக தன் வாயில் ஏதாவது ஒரு சூயிங்கத்தைப் போட்டு மென்று கொண்டிருப்பார். எப்படி இந்தப் பழக்கம் என்று கேட்டால், பதில் சொல்லாமல் அமைதியாக சிரிப்பார். ஏன் இப்படி வாயை அசைபோட்டுக் கொண்டிருக்கிறார் என்று உதவியாளரிடம் கேட்டபோது, ‘கன்னம் மற்றும் தாடையில் தேவையற்ற சதைகள் சேருவதை தடுக்கும் நோக்கத்தில்தான் இப்படிச் செய்கிறார். ஏதாவது ஒரு சூயிங்கத்தை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால், அந்தப் பகுதியிலுள்ள சதைகள் ஆக்டிவ்வாக இருக்கும். தேவையற்ற பகுதிகளும் கரைக்கப்படும்’ என்று சொன்னார். உண்மையா காயூ?

ஹாரிஸ் ஜெயராஜ் அதிகம் பேச மாட்டார். அப்படியே பேசினாலும், சொல்ல வந்ததை சுற்றி வளைத்துப் பேசாமல், நறுக்கென்று சொல்வார். ‘என்றென்றும் புன்னகை’ படத்துக்கு இசையமைத்தது குறித்து அவர் சொல்லும்போது, ‘டைரக்டர் அஹமது என்னை அணுகியபோது, நான் பிசியாக இருப்பதை காரணம் காட்டி மறுத்தேன். அப்போதுகூட விடாப்பிடியாகத் துரத்தினார். நான்தான் இசையமைக்க வேண்டும் என்றார். என்ன இவர், விடாமல் துரத்துகிறாரே என்று, ஒருநாள் காஃபி ஷாப்புக்கு வரவழைத்து, மூலையில் யாருக்கும் தெரியாமல் மறைவாக அமர்ந்து கதை கேட்டேன். பத்து நிமிடம்தான் கேட்டிருப்பேன். ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது. மேலும் உற்சாகம் அடைந்து, மீதி கதையையும் கேட்டேன். ஒவ்வொரு சீனையும் கேட்டபோது, என்னால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சத்தம் போட்டு சிரித்தேன். அந்த சத்தமே நாங்கள் அந்த காஃபி ஷாப்பில் இருப்பதை மற்றவர்களுக்கு காட்டிக் கொடுத்து விட்டது. ஜீவா, விநய், சந்தானம் காமெடி ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்’ என்று சொன்னார்.

‘சிப்பாய்’, ‘மஞ்சப்பை’, ‘ஜிகர்தண்டா’ படங்களில் நடிக்கும் லட்சுமி மேனன், ‘ஜிகர்தண்டா’ படத்தில் மதுரை ஏரியாவில் இட்லி கடை நடத்தும் பெண்ணாக நடித்துள்ளார். ஒரு பாட்டுக்கு செம குத்தாட்டமும் போட்டுள்ளார். ஆனால், அதில் கவர்ச்சி இருக்காதாம். ‘கவர்ச்சியாக நடிக்கக் கூடாது என்பது என் கொள்கை. அதை கடைசிவரை கடைப்பிடிப்பேன். வஞ்சனையின்றி சாப்பிடுவேன். பிரியாணி ரொம்ப பிடிக்கும். ‘டயட்’ இருக்க மாட்டேன். நான் பணம் சம்பாதிப்பதே வயிறார சாப்பிடத்தான். பிறகு ஏன் பட்டினியாக இருக்க வேண்டும்?’ என்று கேட்கும் அவர், கேரளாவில் தன் அம்மா பணியாற்றும் பள்ளியில், 11ம் வகுப்பு காமர்ஸ் குரூப் படிக்கிறார்.

ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பல வருடங்களுக்கு முன் திரைக்கு வந்த படம், ‘காசேதான் கடவுளடா’. அதன் ரீமேக் உரிமையை வாங்கிய நிறுவனம், விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமாரை இயக்குநராக ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கனவே செல்வகுமார், ‘ஒன்பதுல குரு’ படத்தை இயக்கியுள்ளார். ‘பந்தா பரமசிவம்’ படத்தை தயாரித்துள்ளார். என்றாலும், அந்தப் படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமான காமெடி படத்தைக் கொடுக்க முடிவு செய்து, இன்றைய சூழ்
நிலைக்கு ஏற்ப ‘காசேதான் கடவுளடா’ படத்தின் கதையை மாற்றிவிட்டார். அப்படத்துக்கு ‘சக்க போடு போடு ராஜா’ என்ற தலைப்பைச் சூட்டியுள்ளார்.
- தேவராஜ்

‘இருக்கு’ என்றும், ‘இல்லவே இல்ல’ என்றும் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த மலையாள இயக்குநர் ஆஷிக் அபுவும், அவரது இயக்கத்தில் நடித்த ‘யுவன் யுவதி’ ஹீரோயின் ரீமா கல்லிங்கலும் கடந்த 1ம் தேதியன்று தங்கள் காதல் திருமணத்தை எளிமையாக நடத்தினர். கல்யாணத்தை ஆடம்பரமாக நடத்தியிருந்தால் எவ்வளவு தொகை செலவாகியிருக்குமோ, அதை அப்படியே புற்றுநோயாளிகளின் சிகிச்சை செலவுக்கு நன்கொடையாக அளித்து விட்டார்களாம். பாராட்டுக்குரிய விஷயம்.