இது இவங்க கலெக்க்ஷன்...



சினிமா நட்சத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் விசித்திரமான பழக்கம் இருக்கிறது. உள்ளூர், வெளியூர், வெளிநாடு என ஷூட்டிங்கிற்காக தினமும் பறந்து கொண்டிருக்கின்றனர். கிடைக்கும் ஓய்வு நேரங்களில், தங்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்கி வந்து ரசிக்கின்றனர். அந்த கலெக்ஷனைப் பற்றிய தொகுப்பு இங்கே...

தனுஷ்: விதவிதமான வினாயகர் சிலைகளை சேகரிக்கிறார். இதுவரை சேர்த்து வைத்துள்ள சிலைகளின் எண்ணிக்கை நூறுக்கு மேலிருக்கும். அவற்றை வெளியாட்களுக்கு காண்பிப்பதில்லை. ஆன்மீகத்தில் நாட்டம் என்பதால், வினாயகரிடம் வேண்டிக்கொண்ட பிறகுதான் ஷூட்டிங்கிற்கு புறப்படுவார். ஜெய்: வெளிநாட்டு மது மற்றும் ஒயின் வகைகளை வாங்கி வைத்துள்ளார். இருநூறுக்கும் மேற்பட்ட வித்தியாசமான பாட்டில்கள் வீட்டு அலமாரியை அலங்கரிக்கின்றன. உயர்தரம் மற்றும் விலையுயர்ந்த ஒயின் வகைகளும் உண்டு.

ஹன்சிகா: ஹேண்ட் பேக் மற்றும் செருப்பு சேகரிப்பதில் அதிக ஈடுபாடு. வீட்டிலுள்ள படுக்கை அறையில் கண்டிப்பாக ஒரு சாக்லெட் இருந்தாக வேண்டும். உறங்கும் முன் சாக்லெட் சாப்பிடுவார். எந்த நாட்டில் விசேஷ சாக்லெட் தயாரித்தாலும், உடனே இறக்குமதி செய்துவிடுவார். தன்ஷிகா: வித்தியாசமான டிசைனில் தயாராகும் மாடர்ன் உடைகளை சேகரிக்கிறார். சில படங்களில் சொந்த உடைகள் அணிந்து நடித்துள்ளார். புடவை பிடிக்கும் என்பதால், வெளிப்புற படப்பிடிப்புக்குச் சென்றால், அங்கு பிரபலமாக இருக்கும் டிசைனில் புடவைகள் வாங்கி வருவார்.

அனுஷ்கா: உடற்பயிற்சி சம்பந்தமான பொருட்கள் வாங்குவதிலும், சேகரிப்பதிலும் அதிக ஈடுபாடு காட்டுவார். மேலும், உடல் நலத்தைப் பேணும் எக்சர்சைஸ்கள் குறித்து லெக்சர் அடிப்பதற்காக, புத்தகங்கள் வாங்கி வைத்துள்ளார். உலகில் அன்றாடம் நடக்கும் முக்கிய சம்பவங்கள் குறித்த புகைப்படங்களை சேகரிப்பது பொழுதுபோக்கு. லட்சுமி ராய்: புதுப்புது டிசைனில் செருப்பு மற்றும் மேக்கப் சாதனங்கள் வாங்கிக் குவிப்பார். எந்த நாட்டுக்குச் சென்றாலும், அங்குள்ள அதிநவீன மேக்கப் பொருட்கள் வாங்குவார். தோழிகள் யாருக்காவது மேக்கப் அலர்ஜி ஏற்பட்டால், தனது மேக்கப் பொருட்களை பரிசளிப்பார்.

சமந்தா: ஆங்கில காமிக்ஸ் புத்தகங்கள் மற்றும் தத்துவ நூல்கள் சேகரிப்பதில் அதிக ஈடுபாடு உண்டு. முக்கியமான ‘பாப்’ ஆல்பங்களின் கலெக்ஷனை வைத்துள்ளார்.
த்ரிஷா: ஏ.ஆர்.ரகுமானின் தீவிர ரசிகை என்பதால், அவர் இசையமைத்த படங்களின் பாடல் சி.டி மற்றும் ஆல்பங்கள் சேகரிப்பதில் நேரத்தை செல விடுவார். லேட்டஸ்ட் கேம்கள் எதுவோ அதெல்லாம் இவரது செல்போனில் இருக்கும்.

விவேக்: இளையராஜாவின் பாடல்களுக்கு வெறித்தனமான ரசிகர். அவரது பாடல்களை சேகரித்து வைத்துள்ளார். மேலும், அவர் எழுதிய புத்தகங்களையும், அப்துல் கலாம் உள்பட பல வி.வி.ஐ.பிகள் பரிசளித்த நூல்களையும் சேர்த்து தன் அலுவலகத்தை மினி நூலகமாகவே மாற்றிவிட்டார். பாலா: காசியில் ஷூட்டிங் நடந்தபோது, ரசிகர் பரிசளித்த கபால மாலை மற்றும் ஸ்படிக மாலையை பத்திரமாக வைத்துள்ளார். தன் குருநாதர் பாலுமகேந்திரா எழுத பயன்படுத்திய ஸ்கிரிப்ட் பேட் ஒன்றும் வைத்திருக்கிறார்.

விஜய்: எந்த புது மாடல் கார் வந்தாலும், முதலில் வாங்கி விடுவார். என்றாலும், தான் பயன்படுத்தும் பைக்கை மட்டும் விற்காமல் வைத்திருக்கிறார். சின்ன வயதில் பயன்படுத்திய விளையாட்டு பொம்மைகளை மகனுக்கும், மகளுக்கும் கொடுத்துவிட்டார். மணிரத்னம்: விதவிதமான கடிகாரங்கள் சேகரிப்பார் என்றாலும், கையில் வாட்ச் அணிய மாட்டார். இடுப்பில் ஒரு கடிகாரத்தை மாட்டியிருப்பார். அதில்தான் நேரம் பார்ப்பார். உலகின் தலைசிறந்த படங்களின் டி.வி.டிகளை வைத்திருக்கிறார்.

சினேகா: நூற்றுக்கும் மேற்பட்ட பட்டுப் புடவைகளையும், மாடர்ன் உடைகளையும் பீரோவில் வைத்துள்ளார். தரமான லிப்ஸ்டிக் மற்றும் மேக்கப் சாதனங்கள் வாங்கிக் குவிப்பார்.
நயன்தாரா: வாஸ்து பொம்மைகள் வைத்துள்ளார். எந்த நாட்டுக்கு ஷூட்டிங் சென்றாலும், அங்குள்ள மண்ணை ஒரு பாட்டிலில் அடைத்துக் கொண்டு வருவார். ஜாதகத்தில் அதிக நம்பிக்கை இருப்பதால், அது சம்பந்தமான புத்தகங்களையும் பத்திரப்படுத்தி வைத்துள்ளார்.

தொகுப்பு: தேவராஜ்