டார்ச்சர் பண்ண எனக்குத் தெரியலை



‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் வரும், 'என் வீட்டுல நான் இருந்தேனே எதிர் வீட்டுல அவ இருந்தாளே / லவ் டார்ச்சர் பண்ண எனக்குத் தெரியலை' என்கிற பாடலை எழுதியவர் லலிதானந்த்.

இந்த ஒரு பாடல் அவருக்கு ஏராளமான கதவுகளைத் திறந்திருக்கிறது. '12 வருஷ போராட்டம். கனவு கண்களோட சென்னையில் ஏறாத இடமில்லை. கேட்காத வாய்ப்பில்லை. எனக்காக ஒரு நாள் வரும்னு காத்திட்டிருந்தேன். இப்ப காலம் லேசா கண் திறந்திருக்கு' என்கிறார் லலிதானந்த்.

'அதே நேரம் அதே இடம்' படம்தான் இவர் பாடல் எழுதிய முதல் படம் என்றாலும் வெளியான படம், 'திரு திரு துறு துறு'. 'ஜீவா நடிச்ச 'ரௌத்ரம்' படத்துல எனக்கு வாய்ப்புக் கொடுத்தார் இயக்குனர் கோகுல். அதுல நான் எழுதின, 'அடியே உன் கண்கள் என்ன மேட் இன் கியூபாவா? அதுவே என் தேசம் என்றால் நான்தான் காஸ்ட்ரோவா?' என்ற பல்லவி அவருக்குப் பிடிச்சிருந்தது. அப்பவே 'என்னோட அடுத்த படத்துலயும் நீங்க பாடல் எழுதறீங்க'ன்னு சொன்னார்.

சொன்ன மாதிரியே வாய்ப்புத் தந்தார். அதுதான் 'என் வீட்டுல நான் இருந்தேனே எதிர் வீட்டுல அவ இருந்தாளே'ங்கற பாட்டு. இதைக் கேட்டுட்டு இன்னைக்கு பலபேர் வாய்ப்புக் கொடுக்கிறாங்க. சந்தோஷமா இருக்கு. எல்லாருக்கும் என் பாடல் பிடிக்கணும். அதுதான் என் நோக்கம்' என்கிற லலிதானந்துக்கு பிடித்த பாடலாசிரியர்கள், டி.ராஜேந்தர், புலமைப்பித் தன், முத்துலிங்கம், கங்கை அமரன்.