அரிவாள் இல்லாத கிராமம்



இயக்குனர் வி.சேகரின் படங்களிலும் உதவி இயக்குனராக பணியாற்றிய வைரமணி, பல வருட போராட்டத்துக்குப் பிறகு இயக்குனராகி இருக்கிறார். தனது பெயரை கே.விஜயமுரளிதர் என்று மாற்றி அவர் இயக்கும் படம் ‘வீரத்திருவிழா’. சத்யா, தேனிகா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். மேட்டூர் டேமை ஒட்டியுள்ள மலைப் பகுதியில் ஷூட்டிங்.

மேட்டூர் அணை வழியாக நான்கு கிலோ மீட்டர் பரிசல் பயணத்துக்குப் பிறகு ஸ்பாட்டை அடைந்தபோது அந்த ஏரியா பரபரப்பாக இருந்தது. எல்லோரும் ஒருவித பதட்டத்துடன் ஓடிக் கொண்டிருந்தார்கள். இயக்குனர், ‘பார்த்தும்மா.... கவனம்மா..... ஜாக்கிரதைம்மா....’ என்று மைக்கில் கத்திக் கொண்டிருந்தார். அப்போதுதான் மேலே பார்த்தோம்.

சுமார் 50 அடி உயர செங்குத்தான பாறை ஒன்றில் ஹீரோ சத்யாவும், ஹீரோயின் தேனிகாவும் ஆடிக் கொண்டிருந்தார்கள். கரணம் தப்பினால் மரணம் என்பார்களே அப்படி ஒரு நிமிடம் அது. அந்த பாறை விளிம்பில் நின்று ஹீரோவை சுற்றிச் சுற்றி தேனிகா ஆட, அதை கேமரா விழுங்க திடீரென்று தேனிகா லேசாக சரிய ஹீரோ அவர் கையை பிடித்து இழுத்து சேர்த்து அணைத்துக் கொண்டார். பின்னர் இருவரும் மெதுவாக இறங்கி வந்ததும் மொத்த யூனிட்டும் கைதட்டி ஆர்ப்பரித்தது. தேனிகாவின் அம்மா ஓடிச் சென்று மகளை கட்டிப்பிடித்துக் கொண்டார்.

இயக்குனர் அருகே வந்த தேனிகா, ‘ஓகேதானே சார்’ என்றார் கொஞ்சமும் பதட்டமில்லாமல். ‘ஒரு நிமிஷம் கலங்கவச்சிட்டியேம்மா’ என்றார் இயக்குனர். ‘ஓ சாரு பேடிச்சுபோயோ’ என்று சொல்லி சிரித்தபடியே நடந்து சென்றார். பிறகு நிம்மதிப் பெருமூச்சுடன் நம் பக்கம் திரும்பினார். ‘கிராமத்து படங்கள்னாலே அரிவாள், கட்டப் பஞ்சாயத்து, ஜாதிப் பிரச்னை இருக்கும். உங்க படம் எப்படி?’ என்றோம்?

‘இதுவும் மண்மணக்கும் கிராமத்து படம்தான். ஆனால் ஒரு காட்சியில கூட அரிவாள் கிடையாது. ரத்தம் கிடையாது. இதுதான் நிஜமான கிராமம்னு காட்டும் படம். நகர்ப்புறத்துக்கு சினிமா, பீச், பார்க், ஷாப்பிங் மால்னு பொழுதுபோக்கு நிறைய இருக்கு. அதே மாதிரி கிராமத்து ஜனங்க அவங்களுக்கு ஏத்த மாதிரியான பொழுதுபோக்கை உருவாக்கி வச்சிருக்காங்க. அதைப் பற்றியும் அதைச் சுற்றி நடக்கிற விஷயங்களைப் பற்றியும் படம் பேசும். “பட்டணத்து காதல் எல்லாம் பாதியிலே மறையுமப்பா, பட்டிக்காட்டு காதலுக்கு கெட்டியான உருவமப்பா”ன்னு கண்ணதாசன் பாடின பாட்டுக்கு உயிர் கொடுக்கிற மாதிரி ஒரு காதலையும், கிராமத்து நட்பையும் சொல்ற படம்’ என்றார்.

‘அதுசரி. அந்த கதைக்கு ஏன் ஹீரோ ஹீரோயினை இம்புட்டு உசரத்துக்கு ஏத்திவிட்டிருக்கீங்க?’ என்றால் சிரிக்கிறார். “படம் கருத்தாகவும் இருக்கணும், ஜாலியாகவும் இருக்கணும். அப்பதான் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பாங்க. அதுக்குத்தான் இந்த பாட்டு. சும்மா ஆத்துமேடு குளத்து மேடுல ஆடுறதையே எத்தனை நாளைக்குதான் ரசிகன் பார்ப்பான். அதான் இந்த திகில் முயற்சி. கடைசியா ஹீரோ ஹீரோயினை இழுத்துப் பிடிச்சு அணைச்சார் பார்த்தீங்களா?

அது டான்ஸ் மூவ்மென்ட்ல கிடையாது. கீழே விழப்போகிற பெண்ணைக் காப்பாற்றியதில் எடுத்துக்கிட்ட உரிமை. மானிடர்ல பார்க்குறப்போ அப்படி உயிர்ப்பா இருக்கு. அதை படத்துல வச்சிருவேன்’  என்கிறார்.‘கோழி கண்ணாலே கொல்லாதே என்னை நீயும், உடைபட்ட நெஞ்சம்தான் தடை தாண்டுதே...’ மீண்டும் பாடல் ஒலிக்க, ஹீரோவும், ஹீரோயினும் ஏரிக் கரையில் நடந்து வருகிற காட்சி படமாகிக் கொண்டிருந்தது.

மீரான்