காமெடி நடிகைகளுக்கு கடும் தட்டுப்பாடு



தமிழ் சினிமாவில் எல்லா கேரக்டர்களிலும் நடிக்க நடிகர், நடிகைகள் இருக்கிறார்கள். காமெடி கேரக்டருக்கு சரியான நடிகை இல்லாமல் தவிக்கிறார்கள். காமெடி நடிகர் லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது.

ஆனால், காமெடி செய்ய எந்த நடிகையும் முன்வருவது இல்லை. காரணம், மீடியா வெளிச்சம் ஹீரோயின் மீது மட்டுமே விழுகிறது. ரசிகர்கள் மத்தியில் புகழ், படத்துக்கான சம்பளம், வெளியிடங்களில் கிடைக்கும் வரவேற்பு, விளம்பர நிறுவனங்களின் தேடுதல் போன்ற பல விஷயங்கள் ஹீரோயின்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. காமெடி நடிகைகளை யாரும் கண்டுகொள்வது இல்லை.

கின்னஸ் சாதனை படைத்த ஆச்சி மனோரமாவின் நகைச்சுவை நடிப்புக்கு ஈடாக யாராலும் நடிக்க முடியாது என்பது நிஜம் என்றாலும், அவரது இடத்தை நெருங்கி விடுவார் என்று கோவை சரளாவை ரசிகர்கள் நம்பினார்கள், எதிர்பார்த்தார்கள். ஆனால், ஒரு சீசன் போலத்தான் அவர் வந்து போனார்.

காமெடி நடிப்பில் கொடிகட்டிப் பறந்த சரளாவுக்கு முன்னணி காமெடி நடிகரின் சிபாரிசு இன்மை காரணமாக வாய்ப்புகள் குறைந்தது. மனதைத் தேற்றிக் கொண்ட அவருக்கு தெலுங்குப் படவுலகம் கைகொடுத்தது. அங்கு பிசியாகிவிட்ட நிலையில், தமிழில் அவருக்கு முக்கியத்துவம் தர இயக்குனர்கள் முன்வரவில்லை.

காரணம், தினமும் புது நடிகைகள் கோடம்பாக்கத்தின் கதவை தட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கூட காமெடி வேடத்தில் ஜொலிக்க முடியவில்லை. சரளா விட்டுச் சென்ற இடத்தை மீண்டும் சரளா வந்துதான் நிரப்ப முடியும் போலிருக்கிறது. தேவதர்ஷினி, ஜாங்கிரி மதுமிதா, ஆர்த்தி கணேஷ் போன்றவர்கள் காமெடி செய்கிறார்கள் என்றாலும், அது அந்தப் படத்துக்கு மட்டும்தான் பொருந்துகிறதே தவிர, நிறைவைத் தருவதில்லை என்கிறார்கள்.

இப்போது நகைச்சுவையாக நடிக்கும் ஓரிரு நடிகைகள், காமெடி என்ற பெயரில் ‘கடி’ ஜோக்குகள் சொல்லி, சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் காமெடி நடிகைகளுக்கு கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது. புதிதாக வரும் இயக்குனர்கள் ஹீரோவையும், ஹீரோயினையும், ஒளிப்பதிவாளரையும், இசையமைப்பாளரையும், வில்லனையும், காமெடி நடிகரையும் அறிமுகம் செய்வதற்குத்தான் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர, காமெடி நடிகையை அறிமுகப்படுத்த ஆர்வம் காட்டுவதில்லை.

இப்போது ஆர்த்திக்கும், தேவதர்ஷினிக்கும், மதுமிதாவுக்கும் காமெடி வாய்ப்பு கிடைக்கிறது. அவர்களும் அதை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றாலும், தமிழ் சினிமாவில் காமெடி நடிகைக்கான இடம் காலியாகத்தான் இருக்கிறது.

கடுமையான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. கவுண்டமணி, விவேக், வடிவேலு, சந்தானம், சூரி, பிரேம்ஜி போன்ற காமெடி நடிகர்கள் இப்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். என்றாலும், தங்கள் ஜோடியாக புது காமெடி நடிகையை அறிமுகம் செய்வதற்கோ அல்லது ஏற்கனவே காமெடி செய்து கொண்டிருக்கும் நடிகைகளை பிரதான காமெடி நடிகையாக்கவோ முயற்சிக்க மாட்டேன் என்கிறார்கள். அதற்கு உண்மையான காரணம் என்னவென்று தெரியவில்லை.

 ராஜ்