தேர்தல் தோல்வி பயத்தில் தயாரிப்பாளர்கள்



தமிழ் சினிமாவுக்கு வசூல்காலம் என்றால் அது கோடைகாலம்தான். ஆண்டு முழுவதும் குழந்தைகளின் படிப்பில் கவனம் செலுத்தும் மக்கள், அவர்களையும் சினிமா பார்க்கவிடாமல் தாங்களும் பார்க்காமல் விரதம் இருப்பார்கள். ஏப்ரல், மே மாதங்களில்தான் அவர்கள் சுதந்திரப் பறவைகளாவார்கள்.

 குறைந்த பட்ஜெட்டில் அவர்கள் செல்லும் டூரிஸ்ட் ஸ்பாட் தியேட்டர்தான். அதனால் கோடை விடு முறையில் தியேட்டர்கள் களைகட்டும், சினிமாவுக்கு புத்துணர்ச்சி வரும். ஆனால் இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் கோடை விடுமுறையை முற்றிலுமாக ஆக்கிரமித்துக் கொண்டது.

தேர்தல் ஒரு பக்கம் நடந்தாலும் தியேட்டருக்கு வருகிற மக்கள் வரத்தானே செய்வார்கள் என்ற கருத்தும் இருக்கிறது. படங்கள் ரிலீசா வதிலோ, தியேட்டர்களில் திரையிடுவதிலோ தேர்தல் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லைதான். ஆனால் படங்களைப் பற்றிய தகவல்களை மக்களுக்குச் சென்று சேர்ப்பதில்தான் பிரச்னை இருக்கிறது. சுவரொட்டி விளம்பரங்கள் சினிமாவுக்கு முக்கியமானது. இருக்கிற சுவரையெல்லாம் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் பிடித்து விடுவதால் சினிமாவுக்கு இடம் இருக்காது. சுவரொட்டிகள் அச்சடிக்கும் அச்சகங்கள், டிசைன் சென்டர்கள், அரசியல் கட்சிகளின் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கும். பத்திரிகைகளில் கூட சினிமா செய்திகள் முக்கியத்துவம் இழக்கும். இதே நெருக்கடிதான் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நிலவும்.

அடுத்து பிரச்சார காலகட்டத்தில் அரசியல்வாதிகள் ஊருக்கு ஊர் பயணம் செய்வதால் போக்குவரத்து நெருக்கடி உருவாகும். வழக்கமாகப் பள்ளித் தேர்வு முடிந்த பிறகு சொந்த பந்தங்களின் வீட்டுக்குச் செல்கிறவர்கள், இந்த வருஷம் வேண்டாம் என்று முடிவெடுப்பார்கள். காரணம், பஸ் ரயில்களில் வழியும் கூட்டம், சாலைகளில் உள்ள பிரச்சார நெருக்கடி, இவற்றுக்குப் பயந்து வெளியில் வருவதற்குத் தயங்குவார்கள். இது ஒரு புறமிருக்க, வழக்கம்போல ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வேறு தயாரிப்பாளர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது. தேர்தலில், அரசியல்வாதிகளுக்கு பயம் இருக்கிறதோ இல்லையோ, இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர்களுக்கு நிறையவே தோல்வி பயம் இருக்கிறது.

மீரான்