என்னை அறிந்தால்...தொடர்வெற்றி கண்டுவரும் அஜித்தின் தோள்களில் தொங்கிக்கொண்டிருக்கும் இன்னொரு வெற்றி இந்தப்படம். இயக்குனரின் முந்தைய காக்கிப்படங்களின் காப்பி இதிலும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று பேசப்பட்டாலும், 'இருந்தாலும் என்னவோ இருக்குதுப்பா' என்று அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஆறுதலடைய வைத்து, 'தல'யுடைய ரசிகர்களின் அன்புக்குப் பாத்திரமாகியிருக்கிறார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.

புறத்தோற்றம் குறித்த கோட்டுக்குள் சிக்காமல், இயல்பாக வலம் வந்து, ரசிகர் மனதில் இடம்பிடிக்கிறார் அஜித். அவர் ஏற்றிருக்கும் சத்யதேவ் கதாபாத்திரம், சினிமா உள்ளவரை சிலாகித்துப் பேசப்படும்.

 ஒலியடக்கப்பட்டாலும், உதட்டசைவால் புரிந்துகொள்ளக்கூடிய கெட்டவார்த்தையை அவர் பேசும்போது, தியேட்டரில் விசில் ஒலிக்கிறது; கைதட்டல் காதைப் பிளக்கிறது. ஒரு குழந்தைக்குத் தாயாக இருந்துகொண்டு, காதலில் விழும் தடுமாற்றக் கதாபாத்திரத்தில் தடம் மாறாமல் நடித்து, கண்ணியம் சேர்க்கிறார் திரிஷா.அஜித் மீது காதல் வயப்படும் அனுஷ்காவின் நடிப்பை நிச்சயம் ரசிகர்கள் காதலிப்பார்கள்.

விக்டர் என்கிற எதிர் நாயகன் கதாபாத்திரத்தில், தனக்கான புதிய இடத்துக்கு பட்டா போட்டிருக்கிறார் அருண் விஜய். குறைந்த அளவே வாய்ப்பு இருந்தாலும், புதிய தோற்றத்தில் நிறைவான காமெடி வழங்குகிறார் விவேக். அனிகா சுரேந்திரன், பார்வதி நாயர் ஆகியோரின் பங்களிப்பு, கதையின் போக்குக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.பாசத் தந்தையாக மனசுக்குள் நிற்கிறார் நாசர்.

சுமன், ஆசிஷ் வித்யார்த்தியின் நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது.ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் விக்னேஷ் சிவனின் 'அதாரு...' பாடல் அமர்க்கள ரகம். தாமரையின் 'மழை வருதே...' பாடல் மனதை நனைக்கிறது.ஒளிப்பதிவு செய்திருக்கும் டேன் மெக்கார்த்தர் கவனிக்கத்தக்க கேமராக்காரர்.  ஸ்டண்ட் சில்வாவின் ஆக்ஷன் காட்சிகள் அதிரடி.எத்தனை முறை எடுத்தாலும் காக்கிச்சட்டையைக் கம்பீரமாகக் காட்டுவேன் என்று உறுதிகூறுகிறார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.