பாடல் கேட்டு படம் வாங்கிய உதயநிதி!



தரமான படங்களை வாங்கி வெளியிடுவதில் வெற்றிபெற்றுவருகிறார் உதயநிதி ஸ்டாலின். அவரது ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு மேலுமொரு வெற்றியைக் கொடுக்க காத்திருக்கிறது 'தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்' திரைப்படம்.

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் செல்போனை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது இந்தப்படம்.  வி.எல்.எஸ் ராக் சினிமா சார்பில் வி.சந்திரன் தயாரித்துள்ள இந்தப்படத்தை வெளியிடும் பொறுப்பை ரெட் ஜெயண்ட் நிறுவனம் ஏற்றிருக்கிறது.

பண்பலை வானொலியில் ஒலிபரப்பான ஒரு பாடலைக் கேட்ட உதயநிதிக்கு, அது ரொம்பவே பிடித்துப் போனது. விசாரித்துப் பார்த்து அது இந்தப் படம்தான் என்று தெரிந்து கொண்டார். அவரது நண்பர் சந்திரன் தான் தயாரிப்பாளர் என்கிற கூடுதல் தகவலும் கிடைத்திருக்கிறது.

 படம் பார்க்க விரும்பிய உதயநிதிக்கு, அவசரமாக சில மாற்றங்கள் செய்து, திரையிட்டிருக்கிறார்கள். கதையும், அது தொடர்பான காட்சிகளும் சுவாரஸ்யமாக இருந்ததால், 'நானே வெளியிடுகிறேன்' என்று சொல்லிவிட்டார் உதயநிதி. இப்போது படக்குழு இன்ப அதிர்ச்சியில் எகிறி, இமயத்தைத் தொட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

'அட்ட கத்தி' தினேஷ் - பிந்து மாதவி, நகுல் - ஐஸ்வர்யா தத்தா என இரண்டு ஜோடிகள் இந்தப்படத்தில் இருக்கிறார்கள். காமெடிக்கான பொறுப்பை சதீஷ் ஏற்றிருக்கிறார். ஊர்வசி, மனோபாலாவின் கலைப்பங்களிப்பும் இருக்கிறது.

கதை, திரைக்கதை எழுதி ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கும் இந்தப் படத்துக்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்திருக்கிறார். வாழ்க்கையில் எது எதற்கு எதை அழுத்தவேண்டும் என்று பட்டியல் போட்டு ஒரு பாடலை எழுதியிருக்கிறார் மதன் கார்க்கி. 70 அடி உயரத்துக்கு வனராஜ் போட்டிருக்கும் டவர் செட், படத்தின் ஹைலைட்டாக இருக்குமாம்.