கோ-2



அரசியல் கேலிக்கூத்து!

மாநிலத்தின் முதல்வர் கடத்தப்படுகிறார். அவரது கட்சிக்காரர்கள் மாநிலமெங்கும் போராட்டங்கள் நடத்துகிறார்கள். வன்முறை வெடிக்கிறது. மண் சோறு சாப்பிடுகிறார்கள். நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். சேனல் கேமிராக்கள் முன்பாக அழுகிறார்கள். ஆளுங்கட்சியால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக நாம் பார்த்த காட்சிகள்தான் ‘கோ-2’ திரைப்படம். முதல்வரை கடத்தியது யார், ஏன் கடத்தப்பட்டார் என்கிற கேள்விகள்தான் படத்தின் பெரும் பலமே.



பத்திரிகையாளர் வேடத்துக்கு பாபிசிம்ஹா கச்சிதமாக பொருந்துகிறார். ரஜினிகாந்த் பாணி உடல்மொழி மற்றும் டயலாக் டெலிவரியில் ரசிகர்களை கவர்கிறார். படம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கும் கேரக்டர். வசனங்களின் கூர்மையான விமர்சனம்தான் இவரது பாத்திரத்தையே தூக்கி நிறுத்துகிறது. ஹீரோயின் நிக்கி கல்ராணிக்கு அவரது இளமையும், உடல் வனப்பும், அலட்டிக் கொள்ளாத நடிப்பும் கை கொடுக்கிறது.

அப்பாவின் நண்பராக, அமைச்சரின் மகனாக வந்து அசத்துகிறார் பாலசரவணன். நம்மை ஆண்ட ஒரு மூத்த அமைச்சரை நினைவுபடுத்தும் விதமாக இளவரசுவின் கேரக்டர். குறிப்பாக அவரது நெற்றி குங்குமத்தை கண்டு தியேட்டரே ஆர்ப்பரிக்கிறது. கடத்தல்காரனிடம் பேரம் பேசும் கமிஷனராக ஜான்விஜய் வழக்கம்போல மிரட்டலும், சிரிப்புமாக பின்னுகிறார்.

“இதெல்லாம் எனக்கு அசால்ட்டு” என்று உட்கார்ந்த இடத்திலேயே நடித்து, தான் ஏற்ற முதல்வர் பாத்திரத்துக்கு நியாயம் செய்து, நடிப்பிலும் தான் முதல்வர் என்று நிரூபித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். ஆனால், பின்னணி இசை வித்தியாசமாக அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர்கள் பிலிப்சுந்தர், வெங்கட் இருவரும் கதையின் ஆழத்தை உணர்ந்து தங்கள் பணியைச் செய்திருக்கிறார்கள். படத்தின் 3டி ரக அனிமேஷன் டைட்டில் ஐடியா பிரமாதம்.

சடசடவென்று நகரும் திரைக்கதையில் படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் மட்டும் மெதுவாக நகர்ந்தாலும், உருக்கம். சமூக அக்கறையோடு சாட்டையடி வசனங்களைச் செருகி, இளைஞர்களைக் கவரும் விதமாக படம் எடுத்திருக்கிறார் இயக்குநர் சரத்.