பாடி லாங்குவேஜ் தெரிஞ்சு பட்டையைக் கிளப்புங்க!



‘‘வார்த்தைகளால விவரிக்க முடியாத பல விஷயங்களை பாடி லாங்குவேஜ்னு சொல்ற உடல்மொழி மூலமா வெளிப்படுத்தலாம். பார்வை, கை குலுக்கறது, உட்கார்ற, நிற்கிற விதம்னு உடம்போட ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் உண்டு. அதைச் சரியா செய்யற பட்சத்துல உங்க இடத்துல நீங்கதான் நம்பர் ஒன்... பாடி லாங்குவேஜோட முக்கியத்துவம் இன்னும் நிறைய மக்களுக்குப் புரியலைங்கிறதுதான் சோகம்.... உங்க குழந்தைகிட்ட பேசறதுலேர்ந்து, நண்பர்கள், இன்டர்வியூ, வேலையிடம்னு ஒவ்வொரு இடத்துக்கும் கட்டாயத் தேவை பாடி லாங்குவேஜ்...’’ என்கிறார் ரோஸ் டவுன்சென்ட்.

ஆஸ்திரேலிய எழுத்தாளரான ரோஸ், உலகம் முழுக்க பல நாடுகளிலும் பாடி லாங்குவேஜ் வகுப்புகளை எடுப்பதில் எக்ஸ்பர்ட். எமரால்ட் பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ள தனது ‘பாடி லாங்குவேஜ்’ புத்தக விழாவுக்காக சென்னை வந்திருந்த ரோஸிடம் பேசினோம்.‘‘அப்பா ஆப்பிள் பண்ணை வச்சிருந்தார்.
அம்மா பாடகி, ஓவியர். நான் படிப்புல ரொம்ப சுமார். நடிகை அல்லது சமூக சேவகி ஆகறதுங்கிறது என் கனவா இருந்தது. ரெண்டும் இல்லாம டீச்சர் ஆயிட்டேன். குழந்தைங்களுக்கு, கார்ப்பரேட் ஊழியர்களுக்கெல்லாம் வகுப்புகள் எடுத்திட்டிருந்தேன். ஒருநாள் புத்தகம் எழுதணும்ங்கிற என் ஆர்வத்தைப் பேச்சுவாக்குல சொன்னேன். வகுப்புல இருந்த ஒரு பெண், ஓடிவந்து என்கிட்ட ஆட்டோகிராப் வாங்கினா. ‘ஏன்’னு கேட்டப்ப, ‘நாளைக்குப் புத்தகம் எழுதி நீங்க பெரிய ஆளா ஆன பிறகு என்னால ஆட்டோகிராப் வாங்க முடியாமப் போயிட்டா என்ன செய்யறது’னு சொன்னாங்க. அந்த வார்த்தைகள் தந்த வேகம்தான் என்னைப் புத்தகங்கள் எழுத வச்சது’’ என்கிறவரின் அத்தனை புத்தகங்களுமே உலகளவில் விற்பனையில் சாதனை புரிந்தவை.

தகவல் பரிமாற்றத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள பாடி லாங்குவேஜ் எனப்படுகிற உடல்மொழி மிக முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது இவரது லேட்டஸ்ட் புத்தகம். இந்தியர்களுக்கு ரொம்பவே அன்னியமானது அந்த விஷயம். ‘ஒருவரின் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் மிகப்பெரிய பங்கு வகிப்பது சரியான பாடி லாங்குவேஜ்’ என்கிற ரோஸ், நமக்காக சில டிப்ஸ் தருகிறார்.

கண்ணைப் பார்த்து பேசுங்க
எந்த இடத்துலயும் யார்கிட்டயும் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசறது ரொம்ப முக்கியம். உதாரணத்துக்கு ஒரு விஷயம்... உங்க குழந்தை உங்ககிட்ட ஏதோ சொல்லுதுனு வச்சுப்போம். நீங்க அதைப் பார்க்காம, வேற எங்கயோ கவனிச்சு பதில் கொடுத்தா, அதால தாங்கிக்க முடியாது. பக்கத்துல வந்து, உங்க முகத்தைத் திருப்பி, ‘இங்க பாரேன்’னு சொல்ற மாதிரி தன்னைப் பார்த்துப் பேசச் சொல்லும். நேருக்கு நேரான பார்வை அத்தனை பவர்ஃபுல்!

குறுக்கே பேசாதீங்க
மத்தவங்க உங்ககிட்ட பேசிட்டிருக்கிறபோது, இடையில குறுக்கிடக் கூடாது. அவங்க சொல்ல வந்ததை முழுக்க சொல்ல அனுமதிச்சு, அவங்க முடிச்ச பிறகு நீங்க ஆரம்பிக்கிறதுதான் சரி.

மேட்ச்சா நில்லுங்க
யார்கிட்ட பேசினாலும், உங்க உடம்பு அவங்க நிற்கிற நிலைக்கு நேரா மேட்ச் ஆகிற படி இருக்கணும். ரொம்பவும் நெருங்கியோ, ரொம்பவும் விலகியோ நிற்காம, போதுமான இடைவெளி ரெண்டு பேருக்கு இடையிலும் அவசியம்.



அக்கறையா கவனிங்க
கழுத்தை லேசா சாய்த்து, மத்தவங்க பேச்சை கவனிக்கிறது ஒருவித நட்புணர்வையும் அக்கறையையும் வெளிப்படுத்தும்.

காத்திருக்காதீங்க
புதிய நபர்களை சந்திக்கிறப்ப, உங்களை அவங்களுக்கு அறிமுகப்படுத்த சரியான ஆட்கள் இல்லாமப் போகலாம். அப்ப அவங்களே பேசட்டும்னு காத்திருக்காம, நீங்களாகவே உரையாடலை ஆரம்பிக்கலாம்.

எப்படி கைகுலுக்கறது?
கை கொடுக்கிறதுல எந்த முறை சரியானதுங்கிற குழப்பம் நிறைய பேருக்கு உண்டு. சிலர் லேசா கை குலுக்குவாங்க. சிலர் அழுத்தமா பிடிப்பாங்க. ரெண்டு பேரோட கைகளும் ஒரே பொசிஷன்ல, ஒரே அழுத்தத்துல இருக்கிறது பெட்டர். அழுத்திப் பிடிக்கிறவங்க, தன்னோட ஆளுமையை வெளிப்படுத்த நினைக்கிறவங்களா இருப்பாங்க. பெரும்பாலும் அவங்க கை இன்னொருத்தர் கைக்கு மேலதான் இருக்கும். அந்த வகையான ஹேண்ட் ஷேக் உங்களுக்குப் பிடிக்காத பட்சத்துல நாசுக்கா அதை வெளிப்படுத்தலாம்.
சில பேர் தன்னோட ரெண்டு கைகளாலயும் இன்னொருத்தர் கையைக் குலுக்குறதைப் பார்க்கலாம். முதல் முறையா ஒருத்தரை சந்திக்கிறபோது இந்த வகை கைகுலுக்கலைத் தவிர்க்கணும். மத்தபடி அறிமுகமானவங்ககிட்ட செய்யறப்ப, இது ஒருவித நேர்மையையும் நம்பிக்கையையும் உணர்த்தும்.

தவிர்க்க வேண்டியவை
  • நகம் கடிப்பது, தலையைச் சொறிவது, காது குடைவது, மூக்கில் கை வைப்பது, தும்மல்...
  • மற்றவருடன் பேசிக்கொண்டே, நகை அல்லது உடையை சரி செய்வது, கண்களை அலைபாய விடுவது...
  • கை, கால்களில் தாளம் போடுவது...
  • கொட்டாவி... மற்றவரின் பேச்சும் இருப்பும் உங்களுக்கு போரடிக்கிறது என்பதை உணர்த்துகிற இதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

ரோஸ் கடைசியாகச் சொல்கிற விஷயம், வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய பாடம்.

‘‘யு ஆர் ரைட்... இதை மேஜிக் வார்த்தைகள்னே சொல்லலாம். யார்கூடவாவது பேசிட்டிருக்கீங்க... வாக்குவாதம் வரலாம்னு தோணுது... அப்ப ‘யு ஆர் ரைட்’னு சொல்லிப் பாருங்க. அந்தச் சூழல் அப்படியே மாறிப் போகும். அதெப்படி சொல்ல முடியும்னு கேட்கலாம். எந்த ஒரு விஷயமும் அவங்கவங்க கோணத்துல, அவங்கவங்களுக்கு சரியாத்தானே தெரியும்? அதை அங்கீகரிக்கறதால நீங்க எதுலயும் குறைஞ்சிடப் போறதில்லையே...’’ என்கிறார்.

யெஸ்... யு ஆர் ரைட்!
- ஆர்.வைதேகி