ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்துச்சாம்!





முன் எப்போதோ குழந்தைகளின் விளையாட்டில் வழிந்தோடிய பாடல் இது. புழக்கடையில் குட்டிச்செல்லங்கள் பாசம் காட்டிய கனகாம்பரமும் ரோஜாவும் அந்திமல்லியும் முல்லையும் பூத்துக் குலுங்கும். புழக்கடைகளையும் பூச்செடிகளையும் இழந்துவிட்ட இச்சூழலில், தாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலம் பற்றி அறிமுகம் செய்யும் பணியை ‘குக்கூ’ குழந்தைகள் வெளி மற்றும் அன்பு அறக்கட்டளை அமைப்புகள் இணைந்து திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அரசுப்பள்ளியில் சூழலியல் திருவிழாவாக நிகழ்த்தியிருக்கிறது.

அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு அது புது அனுபவம். போபால் விஷவாயுக் கசிவின் விளைவு என்ன? பிளாஸ்டிக் குப்பைகளால் நிலம் எப்படி நஞ்சானது? ரசாயன உரத்தால் நம் உடலில் கலந்திருக்கும் விஷத்தன்மை என்னென்ன? கேன்சர் உள்ளிட்ட காரணம் தெரியா நோய்கள் நம் வீட்டுக்கு விருந்தாளியானது எப்படி? இப்படி 50 குழந்தைகள் கேள்வி எழுப்பி, தங்களின் சுற்றம் சூழலிலிருந்தே பதில் தேடினார்கள்.

சுற்றியிருக்கும் நிலம், மரங்கள், பறவைகளின் பெயர், தன்மை, ஊரைச் சுற்றித் தவழும் ஆற்றின் நிலை... இப்படி பல இடங்களுக்கும் சென்று அறிந்தனர். ஊத்துக்குளி கைத்த மலையில் மரம் நடவும் முடிவு செய்திருக்கின்றன எதிர்காலத்தின் இந்த சிறு வெளிச்சங்கள்.
‘‘உலகத்தை இப்போது வேறு கண்களால் பார்க்கிறேன். பட்டுப்போன செடிகளைப் பார்க்கும்போது அழுகை வருகிறது. இந்த பச்சைக்குழந்தைகள் ஒவ்வொன்றும் என் தங்கைகள். அவர்கள் தாகம் தீர்க்க குட்டிக்குட்டி தடுப்பணைகள் கட்டுவோம். பிளாஸ்டிக் பொம்மைகளுக்குப் பதிலாக மரப்பொம்மைகளை வைத்து விளையாடுவோம். பாக்கெட் தீனிகளுக்குப் பதிலாக பழங்களையே சாப்பிடுவோம்’’ என்கிறாள் ரம்யப்பிரியா. ஆறாம் வகுப்பு வாண்டு!குழந்தைகளின் விருப்பங்களையே கதாபாத்திரங்களாக்கி அவர்களே நடித்த நாடகம், அதைவிட சுவாரஸ்யம். பரீட்சை இல்லாத பள்ளி, லஞ்சம் வாங்காத அதிகாரி, அடிக்காத ஆசிரியர், குடிக்காத அப்பா, விவசாயம் பார்க்கும் தாத்தா என இவர்கள் தேர்ந்து கொடுத்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து உலவ விட்டனர்.

ஊர் சுற்றிய சுட்டிகள் தாங்கள் கண்ட காட்சிகளை ஓவியங்களாக்க உதவினார் ஓவியர் எழில். மலைவாழ் மக்கள் மலைத்தாவரங்களுக்கும் பறவைகளுக்கும் எவ்வளவு அணுக்கமாக வாழ்கின்றனர் என பழங்குடி மக்கள் அமைப்பின் வி.பி.குணசேகரன் விளக்கினார். பார்த்தும் கேட்டும் வரைந்தும் நடித்தும் சூழலியலைப் புரிந்துகொண்ட குழந்தைகள் மனதில் கசிந்த பச்சை வாசனையை, திருவிழாவில் வாங்கிய பொம்மையைப் போல பத்திரப்படுத்தி எடுத்துச் சென்றனர். மீண்டும், அந்திப்பொழுதில் வாசல் பகுதியில் இரு குழந்தைகள் செடிகளாக நிற்க, ‘ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்துச்சாம்’ பாடல் காற்றில் பூக்கின்றது!

- யாழினி